அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது,இரான்


அணு ஆற்றல் உற்பத்தியை குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இரான் அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாக அந்நாடு கூறியுள்ளது.
இன்னும் ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் இரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் கடைமைகளை சரியாக செய்ய தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி, டொனால்டு டிரம்ப் அதிபரானபின், இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
2015 அணு ஒப்பந்தத்தை மீறியது இரான்படத்தின் காப்புரிமைEPA
கடந்த மே மாதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகளவில் இரான் தயாரித்தது. இது அணு உலைகளுக்கான எரிபொருள் தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் பயன்படும்.
ஆனால், அணு ஆயுதங்கள் தயாரிக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று இரான் வலுவாக மறுத்துள்ளது.

இரான் அறிவித்துள்ளது என்ன?

ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி ஓராண்டு நிறைவடைந்த அன்று, ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் மற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இரான் 60 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து இரானை காப்பாற்றவே இந்த கெடு கொடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த 60 நாட்கள் கெடு முடிவடையும் நிலையில், அப்பாஸ் ஆரக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பூஷிஹர் அணு உலைக்கு எரிபொருள் வழங்குவதற்காக சில மணி நேரங்களுக்குள் 3.67% அளவுக்கு செறிவூட்டல் விகிதம் உடைய யுரேனியத்தை தயாரிக்கப் போவதாக தெரிவித்தார்.
அப்படியென்றால் இது 5% செறிவூட்டல் என்று பொருள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அணுஆயுதங்களை தயாரிக்க செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் விகிதம் 90 சதவீதம் இருக்க வேண்டும்.
2015 அணுஆயுத ஒப்பந்தத்துக்கான தங்கள் அர்ப்பணிப்பை ஒவ்வொரு 60 நாளும் குறைத்து கொண்டே வருவோம் என்றும் அப்பாஸ் கூறியுள்ளார்.
ஆனால், இரான் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சமரசப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அழுத்தமாக கூறினார்.

2015 அணுசக்தி ஒப்பந்தம் என்றால் என்ன?

2015ஆம் ஆண்டு இரானுடன் அணுஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதுபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY
Image caption2015ஆம் ஆண்டு இரானுடன் அணுஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது
2015-ல் இரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக இரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தை '' பைத்தியக்காரத்தனமானது'' என்றும் இதிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் கடந்த ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

முக்கிய அம்சங்கள்

1. முழுமையான கூட்டு செயல்திட்டத்தின்படி, அணு உலை எரிபொருள் மற்றும் அணு ஆயுதத்துக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தின் கையிருப்பை பதினைந்து ஆண்டுகளுக்கு குறைக்கவும், யுரேனியத்தை செறிவூட்ட உதவும் மையநீக்கி இயந்திரத்தை நிறுவுதலை பத்து ஆண்டுகளில் குறைப்பதற்கும் இரான் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது.
2. மேலும் கன நீர் வசதியை மாற்றியமைப்பதற்கும் இரான் ஒப்புக்கொண்டது. ஏனெனில் கன நீரானது அணுகுண்டை தயாரிக்க உதவும் புளூட்டோனியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
3. இரான் இத்தகையை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா ஆகியவை இரானை முடக்குவதற்காக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கைகளை திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.
4. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஜெர்மனியும் சேர்த்து ஆறு நாடுகளுக்கும் இரானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5. இரான், தனது அணு திட்டமானது முழுமையாக அமைதியான வழியில் நடப்பதாக தெரிவித்தது, மேலும் சர்வதேச அணுசக்தி நிறுவனமானது இந்த ஒப்பந்தத்தில் இரான் முறையாக இணங்கி செயல்படுகிறதா என்பதை சரிபார்த்தது.