'ப்' இல்லாத தைப்பொங்கல் விழாவும் பொட்டில்லாத 'பாஸ்போட்' படமும்


புலம்பெயர் தமிழ் அமைப்புகள்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை உலகில் ஆங்காங்கே விமரிசையாகக் கொண்டாடவுள்ளன.
ஆனால், அவற்றில் பல வழமையாகக் 'கொண்டாடுவது' என்பது 'தைப்பொங்கல்' அல்ல.
அது-'தை பொங்கல்' ஆகும்!!
'தை பொங்கல்" என்று தான் அவர்கள் அதனை எழுதியும், அறிவித்தும் வருகிறார்கள்.
அவர்களைக் குறைகூறுவது இப்பதிவின் நோக்கமல்ல. தமக்குத் தெரிந்த தமிழில் அவர்கள் எழுதிவருகின்றனர்.
இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக, நாம் இப்படியான 'தமிழ்' விடயங்களைக் குறிப்பிடவேண்டியது எமது தாய் மொழிக்கும் நாங்கள் தமிழ் கற்ற ஆசிரியர்களுக்கும், வருங்காலச் சந்ததிக்கும் செய்யவேண்டிய கடனாகின்றது.
'தைப்பொங்கல்' என்ற சொல்லிலுள்ள ப் பன்னாவை (ப்- எழுத்தை) ஓவியக் கண்கொண்டு பார்த்தால், பானா ஒரு பானையாகவும், மேலுள்ள குற்று அல்லது பொட்டு பொங்கலாகவும் தெரிவதை அவதானிக்க முடியும்.
தைப்பொங்கல் என்ற சொல்லின் அழகே அது.
பொதுவாகப் புலம்பெயர் நாடுகளின், பல தமிழர் அமைப்புகள் தங்களது அறிவித்தல்களில் தமிழரின் இந்தத் தனிப்பெரும் விழாவின் ப் பன்னாவை எடுத்துவிட்டு,
'தை பொங்கல்'
என்றே இன்னும் எழுதிவருகின்றன.
'தைப்பொங்கல்'
என்று எழுதும்போது, மூன்று பொட்டுகளாக, தமிழின் ப், ங், ல் ஆகிய மூன்று வல்லின, மெல்லின, இடையின மெய்கள் முறையே அச் சொல்லில் இருப்பது மற்றோர் அழகாகும்.
தமிழின் உடலாக உள்ளவை அதன் மெய் எழுத்துகள், அவற்றில் முதுகுநாண் வல்லினமெய் என்பார் அறிஞர் மு. வ.
சொற்களை இணைப்பதில் அவை முக்கிய பாகம் வகிக்கின்றன.
இங்கு, தைப்பொங்கலில் வல்லினமெய் 'ப்' ஆகும்.
தமிழர் திருநாளைக் கொண்டாடி, எமது கலை கலாசாரத்தைக் காப்பாற்றவும், அடுத்த சந்ததிக்கு அதனைக் கடத்தவும் வேண்டுமானால், தயவு செய்து 'தைப்பொங்கல்' எனப் புதிய ஆண்டிலாவது 'ப்' என்ற வல்லின மெய்யை இடையிற் சேர்த்து சரியாக அவர்கள் எழுதுவார்களாக.
தமிழின் மீது விசுவாசமுள்ளவர்கள், அவர்களை அப்படிச் சரியாக எழுதத் தூண்டுதல் வேண்டும்.
அதனால், அவர்களை இப்போது பார்த்து, அவர்களிடம் படித்து மொழியைப் பழகும் வருங்காலச் சந்ததி 'தை பொங்கல்' எனத் தொடர்ந்தும் எழுதப்போவதை நிறுத்த முடியும்.
'பொட்டில்லாமல் 'பாஸ் போட்' படம் எடுக்கும்படி யாரோ சொல்வது உங்களுக்கு எப்படியோ,
அதே போலத்தான் 'ப்` இல்லாமல் தைப்பொங்கலை நீங்கள் எழுதுவது எம் தமிழன்னைக்கு...'
-என்று சொல்லியாவது
அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் தமிழார்வம் மிக்க ஊடக, சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் எனக்குச் சொன்னது போல, அவர்களுக்கு இது ஒரு சிறிய விடயமாகவிருக்கலாம்.
ஆனால், தமிழ் மொழிக்கு இது ஒரு பெரிய விடயமே.
ஏனெனில், இது எங்கள் இனத்தின் திருநாளின் பெயர் அல்லவா?