குஜராத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு தனித்தனியே சிகிச்சையா?


குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் ஒரே வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது இந்து, முஸ்லிம் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியே சிகிச்சையளிக்கப்படுகிறது.
“ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பு வரை, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஏ4 வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சி4 வார்டு முழுவதும் வெறும் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்” என்று பிபிசியிடம் கூறுகிறார் சி4 வார்டில் சிகிச்சை பெற்று வரும் 19 வயதான இளைஞர் ஒருவர்.
ஏப்ரல் 12ஆம் தேதி இரவுவன்று, மேம்பட்ட வசதிகள் அளிக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் ஏ4 வார்டில் இருந்த முஸ்லிம்கள் மட்டும் சி4 வார்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆனால், “இந்து மதத்தை சேர்ந்த நோயாளிகள் அனைவரும் ஏ4 வார்டிலேயே” நீடித்ததாகவும் அவர் கூறுகிறார்.
சித்தரிப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த இடமாற்றம் குறித்து தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் திருப்திகரமான பதில் ஏதும் அளிக்கப்படாத நிலையில், சில நாட்களுக்கு பிறகே உண்மை நிலவரம் தெரிய வந்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
இதே சி4 வார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு கோவிட்-19 நோயாளியிடம் பிபிசி அலைபேசி வாயிலாக பேசியபோது, தான் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இதுவரை இந்து மதத்தை சேர்ந்த நோயாளியை பார்த்ததே இல்லையென்று கூறினார். “சி4 வார்டு முழுவதும் வெறும் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.”
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அகமதாபாத் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜி.எச். ரத்தோடிடம் பிபிசி பேசியது. “நோயாளிகளின் உடல்நிலையின் அடிப்படையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களாலேயே இந்த இடமாற்றம் செய்யப்பட்டது. மதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்புவது உண்மைக்கு புறம்பானது” என்று அவர் கூறினார்.
இருப்பினும், குஜராத் அரசாங்கம் அளித்த வழிகாட்டுதலின்படி, அகமதாபாத் மருத்துவமனையில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனித்தனியே வார்டுகள் அமைக்கப்பட்டது என்று ரத்தோட் கூறியதாக குறிப்பிட்டு ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இஸ்லாமிய மதத் தலைவரும், இந்த மருத்துவமனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் நண்பருமான தானிஷ் குரேஷி, முஸ்லிம்களுடன் தாங்கள் ஒரே வார்டில் இருப்பது அசௌகரியமாக இருப்பதாக இந்து மதத்தை சேர்ந்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறுகிறார். ஆனால், இதுபோன்று எவ்வித புகார்களும் தங்களது கவனத்துக்கு வரவே இல்லையென்று ரத்தோட் பிபிசியிடம் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவை தவறாக வழிநடத்துவதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், “உடல் நிலை, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் நோயாளிகள் வெவ்வேறு வார்டுகளில் வைக்கப்படுகிறார்கள். இந்த முடிவு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.
மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம்மொத்தம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்
மகாராஷ்டிரம்2916295187
டெல்லி15784032
தமிழ்நாடு124211814
ராஜஸ்தான்10231473
மத்தியப் பிரதேசம்9876453
குஜராத்7666433
உத்திரப் பிரதேசம்7355111
தெலங்கானா64712018
ஆந்திரப் பிரதேசம்5252014
கேரளம்3882183
ஜம்மு & காஷ்மீர்300364
கர்நாடகம்2798012
மேற்கு வங்கம்231427
ஹரியாணா205433
பஞ்சாப்1862713
பிகார்70291
ஒடிஷா60181
உத்திராகண்ட்3790
இமாச்சல பிரதேசம்35161
சத்தீஸ்கர்33170
அசாம்3301
ஜார்கண்ட்2802
சண்டிகர்2170
லடாக்17100
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்11100
கோவா750
புதுவை710
மணிப்பூர்210
மிசோரம்100

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 9: 43 IST
இந்த ட்வீட் செய்யப்படுவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பு, இதுதொடர்பாக குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் கனானியிடம் பிபிசி கேட்டபோது, இது முழுக்க முழுக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் முடிவுகளுக்கு உட்பட்டது என்றார். “மதத்தின் அடிப்படையில் நோயாளிகளை தனித்தனியே பிரித்து சிகிச்சையளிக்குமாறு அரசு எவ்வித அறிவுறுத்தலையும் கொடுக்கவில்லை. ஒருவேளை மருத்துவர்கள் அப்படி செய்திருந்தால், அதற்கு அவர்களின் தேவையே காரணமாக இருந்திருக்கும்” என்று அவர் கூறினார்.
இதையடுத்து, நோயாளிகளை மருத்துவர்கள் அவர்களின் மதம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பிரிக்கலாமா என்று பிபிசி செய்தியாளர் கேட்டதற்கு, நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு போராடி வரும் மக்களின் பக்கம் இருக்கிறீர்களா, இல்லையா? இதுபோன்ற விவகாரங்களில் நீங்கள் கவனம் செலுத்த கூடாது, மக்களை அவர்களின் பணியை செய்ய விடுங்கள் என்று கனானி காட்டமாக கூறினார்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த விவகாரத்தின் போக்கை கண்டிப்பதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை என்று பிபிசியிடம் பேசிய இஸ்லாமிய மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த நோயாளிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் தங்களால் இருக்க முடியாது என்று சில நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததே இந்த பாகுபாட்டின் தொடக்கம் என்று தானிஷ் குரேஷி கூறுகிறார்.