உபகரணங்கள் வழங்கி வைப்பு


வி.சுகிர்தகுமார்
 

  அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை கோரைக்கர் மண்ணின் மைந்தனும் 79 கண்டு பிடிப்புக்களுக்கு மேல் கண்டுபிடித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சாதனை படைத்து பல்வேறு விருதுகளை பெற்றவரும் இளம் விஞ்ஞானி எனும் நாமத்தை பெற்று யாழ் பல்கலைக்கழகத்தில் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயின்றுவரும் மாணவனுமான சோ.வினோஜ்மார் பல்வேறு சமூக பணிகளை புலம் பெயர் அமைப்புக்களின் உதவியோடு மாவட்டம் முழுவதுமாக மேற்கொண்டு வருகின்றார்.

நிவாரணப்பணிகள் மாத்திரமன்றி கல்வியை முன்னேற்றுவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களையும் அவர் மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைவாக இன்று திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான கண்ணகிகிராமத்தின் கண்ணகி வித்தியாலயத்திற்கு தேவையான புரொஜெக்டர் மற்றும் தொற்றுநீக்கி தெளிவுகருவி, வெப்பம் அளவிடும் கருவி  உள்ளிட்ட கற்றலுக்கு தேவையான பொருட்களையும் அதேபோன்று வலய அலுவலகத்தில் மாணவர்களுக்கான செயலட்டைகளையும் பிரித்தானியாவின் அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வினோஜ்குமாரின் சமூக சேவைக்கு உறுதுணையாக இருந்து செயற்படும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவிக்கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா, திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சுரநுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்,  சிரேஷ் ஊடகவியலாளர் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் ...  நமது மண்ணிற்கு கிடைத்த அரும்பொக்கிசம் இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் எனவும் இவர் சமூகத்திற்காக ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது எனவும் சுட்டிக்காட்டினர்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலம் முதல் சுமார் 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையினை புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்து பெற்று நிவாரணப்பணிகள் மூலம் அரும்பணியாற்றியவர் எனவும் குறிப்பிட்டனர்.

இதன் தொடராக தற்போது இதுபோன்ற கல்வி வளர்ச்சிக்கான பணியிலும் ஈடுபட்டுவரும் அவர் எதிர்காலத்தில் நமது நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக உருவாக இறைவன் துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.