ஆப்கானில் ஏற்பட்ட மாற்றம் போல் உலகில் எங்கும் மாற்றம் நடக்கலாம் என்பதை இலங்கை அரசு மறக்க கூடாது: சிறீதரன் எம்.பி


 தலிபான் இயக்கம் 20 ஆண்டுகளுக்கு பின் தமது நாட்டை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார்கள். இப்படி உலக பந்தில் திடீர் புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கான ஒரு நாடு இல்லை. ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் மாற்றம் போல் உலகில் எங்கும் எப்போதும் மாற்றம் நடக்கும் என்பதை இலங்கை அரசு மறக்க கூடாது என சிறீதரன் எம்.பி தனது இன்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டின் சிங்கள தலைவர்களே சற்று சிந்தியுங்கள், தமிழர்கள் தமது உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும், இருப்பிற்காகவும் தான் தொடர்ந்து போராடுகிறார்கள். தமிழர்களது எண்ணங்களுக்கு மதிப்பளித்து ஒரு பிரச்சினைகளை தீர்த்துவைக்க முயலுங்கள். இந்த நாட்டில் இப்போது மிகக்கூடிய அளவில் கொரோனா தாக்கம் மக்களை பெரிய அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியசாலைகளில், கொரோனா தடுப்பு நிலையங்களில் நோயாளர்களை பராமரிப்பதற்கு போதிய இடம் இல்லை. இந்த நிலைமை தான் பல மாவட்டங்களில் நிலவுக்கிறது, நோயாளிகளால் நிரம்பி வழிகிறது வைத்தியசாலைகள். மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கிறார்கள். 

ஆனால் அரசாங்கம் அதைப்பற்றியெல்லாம் துளியளவும் சிந்தனை இன்றி இருக்கிறது. தற்போது இருக்கும் இடர் சூழ்நிலை வரும் என்று துறைசார் நிபுனர்கள் பலரால் எப்போதோ கூறப்பட்ட விடயங்கள் தான். ஆனால் அரசாங்கம் அதை செவிசாய்க்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் பெறுமதியான நிவாரணம் வழங்கப்படுவதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். 

ஆனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பகுதி மக்களுக்கு இது சென்றடையவில்லை. கொரோனா தாக்கத்தில் உள்ள கைதிகளை பிணையில் விடுமாறு சொல்லப்படுகிறது, அப்படியானால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கீழே கைது செய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள். 

இலங்கையில் செலுத்தப்படும் சைனோபார்ம் என்ற தடுப்பூசியை உலகின் பல நாடுகள் ஏற்கவில்லை என்பதால், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பலர் செல்லமுடியாமல் தவிக்கின்றார்கள். இதற்கு ஒரு மாற்று வழியை தேடி முடிவுக்கு கொண்டுவாருங்கள். 

இந்த கொரோனா பேரிடரில் நாடு சிக்கி தவிக்கும் போதும், இந்த அரசாங்கள் தமிழர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பல உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதா குற்றத்தடுப்பு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிறீதரன் எம்.பி தனது இன்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

- கயல்


https://www.youtube.com/watch?v=VmE103g4liQ