மலேசியாவில் அரசியல் நெருக்கடி மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் பதவி விலகியிருக்கும் நிலையில், புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு அவரை மாமன்னர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


மொஹிதின் யாசினுக்கு அவர் பதவி வகித்த 17 மாதங்களுமே சிக்கல் நிறைந்தவையாக இருத்தன.


கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை தடுக்கத் தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என பல முனைகளிலும் அவரது அரசு நெருக்கடியை சந்தித்தது.


மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 12,510 பேர் இறந்துள்ளதாகவும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாத நிலைக்கு அரசு இயந்திரங்கள் தள்ளப்பட்டதற்குக் காரணம் மொஹிதின் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.


அந்த நாட்டு அரசியலின் சமீபத்திய பிரச்னையை அறிய வேண்டுமானால், இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


மலேசிய மாமன்னர், பிரதமர் இடையே மோதலா? - மொஹிதின் யாசின் மீது 'ராஜ துரோக' விமர்சனம்

மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகுகிறார்: அன்வாருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

யார் இந்த மொஹிதின் யாசின்?

74 வயதாகும் மொஹிதின் யாசின், அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய் தேசிய கட்சியில் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.


2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. அன்வார் இப்ராகிமை பிரதமராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, அப்போது பிரதமராக இருந்த மஹாதிர் மொஹம்மத் திடீரென பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து மலேசிய பிரதமரானார் மொஹிதின் யாசின்.


ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு தமது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருக்கும் என தொடர்ந்து மாமன்னருக்கு மொஹிதின் நம்பிக்கை கொடுத்து வந்தார்.


அவரது தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் அவரும் மகாதீரும் சேர்ந்து நிறுவிய பெர்சாத்து கட்சி, அம்னோ, அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தவர்கள், பாஸ் கட்சி, கெராக்கான், சரவாக் மாநிலத்தின் ஜிபிஎஸ், இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


மலேசிய அரசு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மொஹிதின் யாசின் அமைச்சரவையில் 70 பேர் இருந்தனர். அவர்களில் 32 பேர் முழு அமைச்சர்களாகவும் மற்றவர்கள் துணை அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். நான்கு பேர் மூத்த அமைச்சர்களாக இருந்தனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள், அரசுடன் தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.


எங்கு பிரச்னை தொடங்கியது?

மலேசியா


மொஹிதின் யாசின் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கொரோனா தொற்றின் தாக்கம் மலேசியாவில் தீவிரமானது. அதன் விளைவாக அங்கு நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. தாமதமாக பட்ஜெட் தாக்கல் செய்யக் கோரிய விவகாரத்தில் இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் அவரது அமைச்சரவை தப்பிப் பிழைத்தது.


மொஹிதின் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம், தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அரசாங்கத்தில் இடம்பெற்று இருந்த அம்னோ கட்சிதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.


அரசாங்கம் மேற்கொண்ட கொரோனா நெருக்கடி தொடர்பான பல்வேறு மேலாண்மை நடவடிக்கைகளில் அம்னோ கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து குறுக்கிட்டு வந்தனர். மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவித்தொகை, பொருளாதார ஊக்கத்துக்கான திட்டங்கள், கொரோனா தடுப்பூசிக் கொள்முதல், அரசின் கொள்கை முடிவுகள் என அனைத்திலும் அம்னோ தலைவர்கள் குறுக்கிட்ட போதிலும், பிரதமராக இருந்த மொஹிதின் யாசின் அவற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.


இதையடுத்து, ஒரு கட்டத்தில் அம்னோ கட்சித் தலைவரான சாஹித் ஹமிதியும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் சில திட்டங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தனர். கட்சிப் பெயரில் இவ்வாறு கெடு விதிக்கப்பட்டாலும், அதன் பின்னணியில் இவ்விரு தலைவர்களும் இருப்பதாகவே கருதப்படுகிறது.


ஆனால் இதற்கும் அசைந்து கொடுக்கவில்லை மொஹிதின் யாசின். அதன் பிறகே அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என அம்னோ தரப்பில் இருந்து குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் அக்கட்சியை சேர்ந்த எம்பிக்கள்தான், பெரிக்கத்தான் நேசனல் அரசில் வெளியுறவு, தற்காப்பு, புத்தாக்கத்துறை எனப் பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.


பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எப்படி ஆட்சியைப் பிடித்தது?

மலேசியா


மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 2018ல் நடந்த 14ஆவது பொதுத்தேர்தல் வரை பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணிதான் ஆட்சியில் இருந்து வந்தது. அதில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் அம்னோ, இந்தியர்களின் சார்பாக மஇகா எனப்படும் மலேசிய இந்திய காங்கிரஸ், மசீச எனப்படும் மலேசிய சீன சங்கம் ஆகியவை உறுப்புக் கட்சிகளாக இருக்கின்றன.


இன்று அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள மொஹிதின் யாசின், அன்வார் இப்ராகிம், மகாதீர் மொஹம்மத் ஆகிய மூவருமே அம்னோவின் முக்கிய தலைவர்களாக வலம் வந்தவர்கள்தான்.


மகாதீர் அம்னோவின் தலைவராக இருந்தவர். சுமார் 22 ஆண்டுகள் பாரிசான் நேசனல் கூட்டணிக்குத் தலைமை வகித்து பிரதமராகவும் நாட்டை வழிநடத்தியர். அன்வார் இப்ராகிம், மொஹிதின் யாசின், நஜிப் துன் ரசாக் ஆகிய மூவரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் மகாதீர், அவருக்குப் பின் பிரதமராக இருந்த அப்துல்லா படாவி ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர்கள். அன்வார் இப்ராகிம்தான் மகாதீரின் அரசியல் வாரிசாகப் பார்க்ககப்பட்டார். அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் இருந்தார்.


பின்னர் ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டில் சிக்கி அவர் சிறை சென்றதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.


மகாதீர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவியும், அவரைத் தொடர்ந்து நஜிப் துன் ரசாக்கும் பிரதமர்களாகப் பதவி வகித்தனர். எனினும் நஜிப் ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஊழல் பெருகிவிட்டதாக மகாதீர் குற்றம்சாட்டினார். நஜிப் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் எழவே, கடும் அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.


சரியாக இந்நேரம் பார்த்து, நஜிப் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பதவி வகித்த மொஹிதின் யாசினும் பிரதமருக்கு எதிராக குரல் கொடுக்க, அம்னோவில் இருந்து நஜீப்பால் நீக்கப்பட்டார்.


இதையடுத்து மகாதீரும், மொஹிதின் யாசினும் கைகோர்த்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பெர்சாத்து என அரசியல் கட்சியை தோற்றுவித்தனர்.


இதற்குள் அன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார் அன்வார் இப்ராகிம். அதை ஏற்று, மகாதீர்-மொஹிதின் யாசினின் பெர்சாத்து கட்சி அவருடன் இணைந்து செயல்பட முன்வந்தது. இதையடுத்தான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலுப்பெற்றது.


அதன் பிறகு நஜிப் துன் ரசாக் தலைமையிலான பாரிசான் கூட்டணியை வீழ்த்தித்தான், அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.


ஊழல் வழக்குகளால் மொஹிதின் யாசினுக்கு நெருக்கடியா?

இரு தவணை பிரதமராகப் பதவி வகித்த நஜிப் துன் ரசாக் சில ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக 1எம்டிபி என்ற பொதுத்துறை நிறுவன பணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஊழல் வழக்கில் அவர் சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார்.


அதேபோல் அம்னோவின் நடப்புத் தலைவர் சாஹித் ஹமிதியும் ஊழல் வழக்கை எதிர்கொண்டுள்ளார்.


இதுபோல் அம்னோவில் உள்ள வேறு சில தலைவர்களும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர். இத்தகைய வழக்குகளில், அதாவது நீதித்துறையில் தலையிட்டு சிலருக்கு சாதகமாகச் செயல்பட வேண்டும் எனத் தாம் நிர்பந்திக்கப்பட்டதாகவும், அரசியல் மிரட்டல்களுக்கு ஆளானதாகவும் சாடியுள்ளார் தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகிய மொஹிதின் யாசின்.


இதன் காரணமாகவே சிலர் தமது அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.


கொரோனா தொற்றை எப்படி கையாண்டது அரசு?

மலேசியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசிய பிரதமராக பதவியேற்ற உடனேயே கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மொஹிதின் யாசின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்தது.


எனினும், தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், சபா என்ற மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கொரோனா கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் அனுமதித்தது. இதனால் சபாவில் மட்டுமல்லாமல் அங்கு பிரசாரத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று வந்தவர்கள் மூலம் நாடு முழுவதும் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்தது. அதன் பின்னர் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபட மலேசியா படாதபாடு படுகிறது.


இதுவரை மூன்று முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, இரண்டு முறை முழு முடக்க நிலை எனப் பல்வேறு நடவடிக்கைகளை பெரிக்கத்தான் அரசு மேற்கொண்ட போதிலும் தொற்று குறைவதாக இல்லை. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பலன் கிடைத்தபாடில்லை.


மாமன்னரின் ஒப்புதலுடன் அவசர நிலை அறிவிக்கப்பட்டும், அதன் பிறகு முழு முடக்க நிலையும் அமல்படுத்தப்பட்டும் கூட தற்போது நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.


கடைசியாக கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏழாயிரத்தை எட்டியபோது நாட்டில் முழு முடக்கத்தை அறிவித்தார் மொஹிதின். அந்த எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு ஆகியுள்ளது. ஏற்கெனவே காலவரையின்றி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் நிதிச்சுமையை எதிர்கொண்டன. பல தொழில் நிறுவனங்களும் தொழில் வாய்ப்புகளை பறிகொடுத்தன. இந்த கோபம் அனைத்தும் ஆளும் மொஹிதின் அரசுக்கு எதிராக கிளம்பியது.


இந்நிலையில் மாமன்னர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்ட அவசர நிலை கடந்த ஜூலை 23ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டதாக மொஹிதின் அரசு அறிவித்தது. இதனால் மாமன்னர் அதிர்ச்சி அடைந்தார். அவசரநிலையை திரும்பப் பெறுவதற்கு தமது ஒப்புதலைப் பெறவி்லலை என்றும் இதனால் தாம் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவிக்க, பெரிக்கத்தான் அரசு அப்போதுதான் ஆட்டம் காணத் தொடங்கியது. அதன் பிறகு அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் காரணமாக மொஹிதின் இன்று பதவி விலக நேர்ந்துள்ளது.


அடுத்த பிரதமராக யாருக்கு வாய்ப்பு?

மலேசியாவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மொஹிதின் தரப்புக்கு ஆட்சியைத் தொடரும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் அம்னோ கட்சி பதவிக்கு வர முயன்று வருகிறது. அதுவும் எளிதில் கைகூடுவது சந்தேகம்தான்.


பெரிக்கத்தான் ஆட்சியில் துணைப்பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா போன்றோரும் ஆட்சியமைக்கும் சாத்தியங்களை பரிசீலித்து வருவதாக தெரிகிறது.


கடந்த 22 ஆண்டுகளாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக அரசியல் நடத்தி வரும் அன்வார் இப்ராஹிமுக்கு இம்முறை பிரகாசமான வாய்ப்புள்ளதாகவும் அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.


தனது பங்குக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக இந்த சூழ்நிலையை பயன்படுத்த தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அவர்.


மாமன்னருக்கு இதில் என்ன பங்கு?

மலேசிய மன்னர்


மலேசிய மாமன்னர்


மலேசியாவின் அரசியல் ஆட்சிமுறை, மாமன்னருக்கு கட்டுப்பட்ட அமைப்பாக உள்ளது. அங்கு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் ஒன்பது மலாய் சுல்தான்களுக்கு இடையே இந்த தலைமை பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய மாமன்னரின் பெயர் அல் சுல்தான் அப்துல்லா. இவர் மத்திய மாகாணமான பகாங்கை சேர்ந்தவர். 2019-ல் பதவிக்கு வந்தவர்.


அரசியலமைப்பு முடியாட்சி பதவியாக இருந்தபோதும், மொஹிதின் ஆட்சிக்கு வந்த பிறகு மாமன்னர் பதவியின் முக்கியத்துவமும் தேவையும் மலேசிய அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.


மொஹிதினை ஆட்சியமைக்க அழைக்கும் முன்னர், கடந்த ஆண்டு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக அழைத்து மாமன்னர் பேசியபோது, அவரது அதிகாரத்தின் உச்சம் பாமரர்களுக்கும் புரியத் தொடங்கியது.


கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த வேளையில், நாடாளுமன்றம் இயன்றவரை விரைவாக கூடி இது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மாமன்னர். அதுவும் கூட மொஹிதின் யாசினுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.


மொஹிதின் தற்போது காபந்து அரசாக தொடரும் வேளையில், அடுத்த பிரதமராக யாரை மாமன்னர் ஆட்சியமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு மலேசிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.