நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில், சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களின் உளநலத்தை மேம்படுத்தும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
‘மகிழ்ச்சிகரமான வயோதிபம்’ எனும் கருப்பொருளிலும், ‘முதியோர் உளநலமும் சமூகப் பங்களிப்பும்’ எனும் தொனிப்பொருளிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதிப் பங்களிப்புடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எம். றியாஸா பீவியின் ஒருங்கிணைப்பில், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். றஸாக் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக இறக்காமம் பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் மற்றும் அம்பாறை பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப் ஆகியோர் கலந்துகொண்டு, முதியோர்களின் உளநலம், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை மற்றும் சமூகப் பங்களிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கினர்.
வயோதிபப் பருவத்தில் ஏற்படக்கூடிய தனிமை உணர்வு, குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், உடல்நலப் பிரச்சினைகள், வாழ்க்கைத் துணை மற்றும் நெருங்கிய உறவினர்களின் இழப்பு உள்ளிட்ட காரணிகள் முதியோர்களின் உளநலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு நேர்மறையான சிந்தனையை வளர்த்தல், மன அமைதியைப் பேணுதல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுதல், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், தேவைப்படும்போது உளவளத்துணை சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், சீரான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல், இயன்றளவு உடல் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்றல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
முதியோர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களையும் அறிவையும் இளைய தலைமுறையினருடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெறுமதியான பங்களிப்பை வழங்க முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. சமூக நிகழ்வுகள் மற்றும் நலன்புரிச் செயற்பாடுகளில் அவர்கள் தொடர்ச்சியாகப் பங்கேற்பது தனிமை உணர்வைக் குறைத்து, தன்னம்பிக்கையையும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்க உதவும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
முதியோர்கள் குடும்பத்தினதும் சமூகத்தினதும் மதிப்புமிக்க உறுப்பினர்கள் என்பதால், அவர்களின் உரிமைகள், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், அன்புடனும் பொறுமையுடனும் நடந்துகொள்ளுதல் மற்றும் குடும்ப, சமூகத் தீர்மானங்களில் அவர்களின் அனுபவங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். முஹைதீன் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முதியோர்களின் உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துதல், அவர்களின் சமூக உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வயோதிபப் பருவத்தை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
.jpg)

Post a Comment
Post a Comment