வரிச்சலுகைகள் பறிபோகும் அபாயம்!




 அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் காரணமாக சர்வதேச வரிச்சலுகை பறி போகும் அபாயம் காணப்படுவதாக ஆடை உற்பத்தியாளர்களின் கூட்டுச் சங்கம் (JAAF) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

1979 ஆம் ஆண்டு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) கடந்த நான்கு தசாப்த காலமாக கடுமையான துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அந்த அடக்குமுறைச் சட்டத்தை நீக்குவதற்கு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்த நிலையில், அதற்குப் பதிலாக ‘அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA) அண்மையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் JAAF அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன், இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை என ஆடை உற்பத்தியாளர்களின் கூட்டுச் சங்கம் (JAAF) எவ்விதத்திலும் வலியுறுத்தவில்லை. மாறாக, நீதித்துறை மேற்பார்வை இல்லாத இவ்வளவு பரந்த மற்றும் அடக்குமுறையான சட்டமொன்றின் மூலம், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் கடும் ஆபத்துக்குள்ளாகும் என்றே அச்சங்கம் கூறியுள்ளது.

 

 இதனிடையே தற்போதைய GSP+ சலுகைக் காலம் 2027 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் அதேவேளையில், ஏனைய அனைத்து நாடுகளைப் போலவே இலங்கையும் இச்சலுகையின் அடுத்த புதிய வர்த்தகச் சுழற்சிக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், தற்போதுள்ள வடிவத்தின் படி இந்த PSTA சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், புதிய சுழற்சிக்காக நாடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதுவே பிரதான தடையாகும்.

 

 ஐரோப்பிய ஒன்றியம் என்பது கடுமையான விதிகளின் கீழ் இயங்கும் ஒரு அதிகாரத்துவ அமைப்பாகும்; இச்சட்டமூலத்தினால் இலங்கையின் விண்ணப்பம் தோல்வியடைந்தால், நாட்டிற்குச் சொந்தமான மிகப்பெரிய வர்த்தக வரிச்சலுகைத் திட்டம் முற்றிலுமாக இழக்கப்படும்.