Showing posts with label Eastern. Show all posts

 


(நூருல் ஹுதா உமர்)


கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் "வர்ண இரவு" நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக நிந்தவூர் அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை காஸிமி மண்டபத்தில் கல்முனை கல்வி வலய உடற்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தார். இந்நிகழ்வில் மேலும் கல்முனை கல்வி மாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். ஜாபீர், எம்.எச்.றியாஸா, பீ. ஜிஹானா ஆலிப், என். வரணியா, ஏ.எச்.பௌஸ், உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக், உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்மா மலிக், என். சஞ்சீவன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம். சரிபுதீன் உட்பட வலயக்கல்வி அலுவலக அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த கல்முனை வலய பாடசாலைகளின் 300க்கும் மேற்பட்ட வீரர்களை பாராட்டி கௌரவித்த "வர்ண இரவு" நிகழ்வில் சாதனைக்கு துணையாக நின்றவர்கள், அண்மையில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் உட்பட பலரும் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்


 நூருல் ஹுதா உமர்  


சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கலாபீடத்தின் ஆளுநர் சபை உறுப்பினரும், கல்விப்பிரிவு தலைவரின்  தலைமையில் கமு/ கமு/ அல்- ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

குர்ஆன் மனனமிடும் இஸ்லாமிய பல்கலைக்கழகமான தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் பரீட்சைகளில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள், சிறந்த வரவை பேணிய மாணவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்கள் மற்றும் இவ்வாண்டுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் அல்ஹாபிழ் டாக்டர் எம்.ஏ. நௌசாத் அலி கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார்.  மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனூஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.எம்.றிஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டார். நிகழ்வின் விசேட உரையை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளர் சட்டத்தரணி மௌலவி என்.எம்.ஏ. முஜீப் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் நிர்வாகிகள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


மனித மேம்பாட்டு அமைப்பினால் இளைஞர், யுவதிகள், அமைப்பின் அங்கத்தவர்களுக்கான  6 கட்டங்களாக நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சி பட்டறையின்  இறுதிக் கட்டம் தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளை உருவாக்குதல் எனும்  தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு (27) சனிக்கிழமை  வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.முகம்மட் அஸ்லத்தின் வழிகாட்டலிலும், அமைப்பின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஆர். அல்முன்தஸீரின் ஒருங்கிணைப்பிலும், அமைப்பின் வாழைச்சேனை பிரதேச   அமைப்பாளரான இஸட்.எப். ஸிஹானி, ஓட்டமாவடி பிரதேச ஒருங்கிணைப்பாளரான இஸட்.எப். ஸிமானி ஆகியோர்களின் ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியான லெப்டினன் கேர்ணல் எம்.எச்.எம்.ரவூப் அவர்களின் தலைமையிலும் இளைஞர் - யுவதிகளுக்கான  விரிவுரைகளும், பயிற்சிகளும், கள செயற்பாடுகளும் இதன்போது நடாத்தப்பட்டது.

இப் பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் - யுவதிகள்  கலந்து கொண்டதுடன் அன்று மாலை  லெப்டினன் கேர்ணல் எம்.எச்.எம்.ரவூப் அவர்களினால் கலந்து கொண்ட இளைஞர் - யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 


கல்முனை விவகாரம் உட்பட முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆராய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூடியது.


உபகுழு  அமைத்து பிரச்சினைகளை ஆராய முஸ்தீபு.


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக கல்முனை விவகாரம் தொடர்பில் ஆராயும் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன விசேட கூட்டம் இன்று (27) சம்மேளனத்தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 


இதன்போது சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளி வாசல்கள் சம்மேளனம் அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தையும் பற்றி கலந்துரையாடியதுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திற்கான தீர்வை எட்டும் விதமாக உபகுழுவொன்றை இன்று நியமித்துள்ளது. 


அந்த உப குழு கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் உள்ள விடயங்களை கையாளவுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் அதிக முஸ்லிங்கள் வாழும் நகரம் என்ற அடிப்படையிலும், இலங்கை முஸ்லிங்களின் முகவெற்றிலையாக கல்முனை அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் முஸ்லிங்களின் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் நிறைந்துள்ள கல்முனையின் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு உரியவர்களிடம்  இருந்து தீர்வை பெற முயற்சிகளையும் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


மற்றுமொரு தீர்மானமாக தமிழ் மக்கள் கூடுதலாகவும் முஸ்லிங்கள் குறைவாகவும் வாழும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் முஸ்லிங்களுக்கு இடம்பெறும் அநீதிகள், பாரபட்சங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சர்கள், உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து உரிய தீர்வை பெற இந்த உபகுழு செயட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இந்த கூட்டத்தில் சம்மேளன செயலாளர் ஏ.எல். அன்வர்டீன், பொருளாளர் எஸ்.எம்  சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசியின் நிலவின் கர்ப்பங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்று (27) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவில் நடைபெற உள்ளது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்   கலந்து சிறப்பிக்கிறார்.
தாதிய உத்தியோகத்தரான மனோகரன் சசிப்பிரியனின் கன்னி கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர்


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.


கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த  அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால்  விடுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை வெளியிட்டார்.


இன்றைய தினம் இடைக்கால  தீர்வை நீதிமன்றம் வழங்க இருந்த நிலையில் இவ்வாறான இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க  கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு முன்வைத்தார். எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியுள்ளது.


இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் 07ம் திகதிவரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பதா இல்லையா என்பது தொடர்பிலான விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தின் பின்னரே இடைக்கால தீர்வுகள் வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


 (நூருல் ஹுதா உமர்)


சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்று கடமையாற்றிய றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளராக நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை சமுர்த்தி வங்கிச் சங்க காரியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா, சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, வலய உதவி முகாமையாளர் எம்.எஸ்.எம்.நெளஷாட், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம். முபாறக், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் எம்.முபிதா, முன்னள் தலைவர் ஏ.எம்.அலாவுதீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டதனால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி  வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார் 16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 

பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமை யாற்றியுள்ள இவர், அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்கத்தின் உதவி முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றியுள்ளார்.

அண்மையில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று கடமையாற்றி வந்த நிலையில், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளராக றியாத் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே சமயம் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளராக கடமையாற்றிய எஸ். றிபாயா சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 


(வி.ரி. சகாதேவராஜா)


1990களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி கிடைத்திருக்கின்றது.

 226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.

காடுமண்டி கிடந்த அப் பிரதேசம் கடந்த மூன்று தினங்களாக ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவாக்கப்பட்டு வருகிறது.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் அரச அனுமதியுடன் இப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கனகர் கிராம மக்களும் படையினரும்


 சமுகமளித்திருந்தனர். 

அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. 


இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.

அது இன்று கட்டம் கட்டமாக நிறைவேறத்தொடங்கியிருப்பதுகண்டு மகிழச்சியடையலாம்.

 


( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை  ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஸ்ரீ சந்திர குப்தா  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.

திறந்து வைக்கப்பட்ட நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு பிரிவு என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இந்த பிரிவானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரனின் ஆலோசனைப்படி பிரதி பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதனின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

*இப்பிரிவானது பின்வரும் சேவைகளை பொதுமக்களுகாக வழங்கவுள்ளது.*

* நோயாளர் பாதுகாப்பு கலாச்சாரம்

* நோயாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நோய் நிலை பற்றிய ஈடுபாடு மற்றும்  ஆலோசனைகள்

* நோயாளர் சுகாதார தகவல்கள்

* நோயாளர்களின்  மனகுறைகளை நிர்வகித்தல்

* நன்கொடையாளர் பாராட்டுகளை ஏற்பாடு செய்தல்

* நோயாளர்களுக்கான  உதவியாளர் (by stander) ஏற்பாடு மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள்

* முரண்பாடுகளை தவிர்க்கும் செயறன்முறைகள்

* மரண உதவி சேவை -  இலவச அமர் ஊர்தி ஏற்பாடுகள் - இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான
நடைமுறைகள்.

* வைத்தியசாலை நடைமுறைகள்


 நூருல் ஹுதா உமர்


ஜனாதிபதியின்  டெங்கு காட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை  மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாங்கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம்  இன்று கல்முனை  வடக்கு  பிரதேசத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யு. எம். இஸ்ஹாக் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மணச்சேனை ஆகிய  கிராமங்களில் இந்த  சிரமதானப் பணி சிறப்பாக இடம்பெற்றது.  

நிகழ்வில் கல்முனை மாநகர சபை  சுகாதாரப்  பிரிவின் சுகாதார  மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ. எம்.அதுகம் உட்பட உதவி  மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஈ.இராகவான், ஆர். லிங்கராஜா, எம். எம். எம். றிஸ்வான்  ஆகியோரும் மாநகர சபை  சுகாதார ஊழியர்களும் கலந்து கொண்டனர். மாநகர ஆணையாளரின் அதிரடி  நடவடிக்கை  காரணமாக  பெருந்தொகையான  டெங்கு பரவுவதற்கு காரணியான கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

 


நூருல் ஹுதா உமர்


சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் நிதி கையாளல் மற்றும் நுண்கடன்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்  அவர்களின் வழிகாட்டலில்  சாய்ந்தமருது விதாத வள நிலையத்தில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அம்பாரை மாவட்ட உதவி பணிப்பாளர் ஐ.எம்.நாசர், மத்திய வங்கியின் திருகோணமலை கிளையின் முகாமையாளர் பி.நிரோசன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக  விஞ்ஞான தொழிட் ப உத்தியோகத்தர் யு.எம்.முஸம்மில், பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் எம்.வி.நஸ்லா,  பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் ஏ.அபிறா, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.எம்.நாஸிர் அலி மற்றும் எம்.ஐ.எப்.சுசான் சிஹ்னாஸ் என பலரும் கலந்து கொண்டனர்.

 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கான விஜயமொன்றினை நேற்று(17) மேற்கொண்டார்.
சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் அழைப்பின் பேரில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கிந்துஜாவின் வேண்டுகோளுக்கிணங்க சென்ற அவர் இல்லத்தின் குறைபாடுகள் தொடர்பில் கேட்;டறிந்து கொண்டார்.
இல்லத்தினை பார்வையிட சென்ற அவரை இல்லத்தலைவர் உள்ளிட்டவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இதன் பின்னராக இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்த அவர் உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இதேநேரம் இல்லத்தின் 30 வருட நிறைவு நிகழ்வின் முத்துவிழா தொடர்பான நூல் ஒன்றினை இல்லத்தலைவர் அபிவிருத்திக்குழுத்தலைவரிடம் கையளித்தார்.
இந்நிலையில் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்திற்கும் சென்ற அவர் தனது சொந்த நிதியில் சிறு நிதியினை உடன் பாடசாலை அதிபரிடம் கையளித்ததுடன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

 மாளிகைக்காடு நிருபர்



கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களை பற்றியும், மலையக மக்கள் பற்றியும் பேசிக்கொண்ட நாங்கள் இளம் தலைவரான எனது நீண்டகால நண்பர் செந்தில் தொண்டமானை மலையக மக்கள் மட்டுமின்றி கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்களும் வாழ்த்துவதுடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி கிழக்கு மாகாணம் சிறந்து விளங்க அவர் பயணிக்க வேண்டிய நேரிய பாதைகள் தொடர்பில் பேசினோம் என்றும் கிழக்கின் புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
 


 (சர்ஜுன் லாபீர்)


கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்கள் நடமாடும் சேவை இன்று(17) புதன்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம் பெற்றது.

இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல்  ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி,  தேசிய அடையாள அட்டை,  பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள்  கலந்து கொண்டு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் முதியோர் அட்டைகளும் சிலருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு சக்கர நாட்காலியும் , இயலாமை நிலையிலுள்ள முதியோர் களுக்கு ஊன்றுகோலும் மற்றும் மருதமுனை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை வழங்குவதற்கான நேர்மூகப் பரீட்சை என்பன நடைபெற்றது.இதில்  கல்முனை பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகளை முன் வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் ,  கல்முனை, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள்,
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  ஏ.ஆர்.எம்.சாலீஹ் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்..எச் ஜனூபா பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், 
உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி மற்றும் பொருளாதார  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 


(நூருல் ஹுதா உமர்)


டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக சம்மாந்துறை பிரதேச  சபையினால்   டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16)
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய கொள்கலங்களான, டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிக்கப்பட்டதுடன் நீர்தேங்கியுள்ள இடங்கள், வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டது.
இதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ  உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  பிரதேச சபையின் மேற்பார்வை உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையினால் சம்மாந்துறை மத்திய வலயம், சம்மாந்துறை கிழக்கு வலயம், சம்மாந்துறை மேற்கு வலயம் ஆகிய மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

( வி.ரி.சகாதேவராஜா)

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின்   கிழக்கு மாகாணத்திற்கான  பூப்பந்தாட்ட பயிற்சிப்பட்டறை முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இப்  பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கைக்கான இணைப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான அன்ரனி ஜெயகாந்தன்  கலந்துகொண்டார் . 

இதில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து சிறப்பித்தனர். 

இப் பயிற்சி முகாமானது இப் பிரதேசத்திலுள்ள வீர வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவும் திறமைகளை ஊக்கப்படுத்தும்  ஒரு பயிற்சி முகாமாகவும் அமைந்திருந்தது.

இப் பயிற்சி  முகாமின் போது கனடா நாட்டின் எல்சன் பூப்பந்தாட்டக் கழகமானது
வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவியிருந்தார்கள்.இந்த கழகமானது வடக்கு கிழக்கு வீரர்களுக்கு வருடந்தோறும் அவ்வாறான உதவிகளை வழங்கி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான ஒரு பயிற்சி முகாமினை எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி  எமது பிரதேசத்திலுள்ள வீரர்களை தேசியரீதியில்   வெற்றி பெறச் செய்வதற்கு உறுதுணையாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை கைகோர்த்து நிற்க வேண்டுமென  விளையாட்டு அதிகாரி பத்மநாதன் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


பாறுக் ஷிஹான்



டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநரின்  அறிவுறுத்தலின்விசேட டெங்கு ஒழிப்பு தினமாக இன்று மே 16ஆம் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் காணப்படும் அனைத்து குப்பைகள்,கால்வாய்கள், சாக்கடைகள் மற்றும் நுளம்பு வளரக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/கமு/அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தலைமையில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 இதன் போது இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன்  நிந்தவூர் அல் - மதீனா மகாவித்தியாலயத்திலும் அதிபர் எம் எல் எம் நிஹாறுடீன்  தலைமையில் இதே போன்ற மாபெரும் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் ஓய்வு பெறுவதையொட்டி பரவலாக பிரியாவிடை நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம் பெற்று வருகின்றது.

36 வருடகால அரச சேவையில் இருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரின் சேவையினைப் பாராட்டியும் வாழ்த்தியும் அவருக்கான பிரிவு உபசார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு கல்லடியைச்சேர்ந்தவர். சிறந்த விளையாட்டு வீரரான இவர் சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

இலங்கை நிர்வாக சேவையில் 32 வருடகாலம் சேவையாற்றிய இவர் முந்திய 04 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஆறு வருட காலமாக சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் பிரியாவிடை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மகத்தான பிரியாவிடை வைபவம் கடந்த வாரம் நடாத்நப்பட்டது.

இந்த நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி தலைமையில் இடம்பெற்றது. தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் நிகழ்வுடன் அரசாங்க அதிபர் மற்றும் அவரின் பாரியார் திருமதி மதிலதா இருவரும் வரேவேற்று அழைத்துவரப்பட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவை தொடர்பில் பிரதேச செயலாளரால் பாராட்டுக் கருத்துரை வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரை கௌரவப்படுத்தும் நோக்கில்  வாழ்துப்பாவும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்து மகிழ்விக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,  ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச  செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வாரம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இறுதியான மாபெரும் பிரியாவிடை வைபவம் நடைபெறுகிறது.


நூருல் ஹுதா உமர்

தன் நம்பிக்கையுள்ள இளைஞர், யுவதிகளினை உருவாக்கல் எனும்  தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு  கடந்த (14) ஞாயிற்றுகிழமை வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் H&D தாதியர் பாடசாலையின்  ஏறாவூர் கிளையினுடைய தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சி வழங்கப்பட்டது.

மனித மேம்பாட்டு அமைப்பின் தலைவர், எஸ். ஏ. முகம்மட் அஸ்லத்தின் வழிகாட்டலிலும் ,அமைப்பின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிராந்திய அமைப்பாளரான இஸட்.எப். சிஹானி, இஸட்.எப். சிமானி
ஆகியோர்களின் ஏற்பாட்டிலும் H&D தாதியர் பாடசாலையின்  ஏறாவூர் கிளையினுடைய முகாமையாளர் எம். யு. எப். றுஸ்னா அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி
நிலையத்தின் பொறுப்பதிகாரியான, லெப்டினன் கேர்ணல் எம். எச். எம்.ரவூப் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளர் மேஜர் கே.எம். தமீம் அவர்களினால் தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கு விரிவுரைகளும், பயிற்சிகளும், பலகளச் செயற்பாடுகளும் வழங்கப்பட்டது.  அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் எம். எச். எம்.ரவூப் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.