Showing posts with label Uva. Show all posts

பதுளை, கொகோவத்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பகங்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை (12) இரண்டு மாடிகட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த விற்பனை நிலையத்திற்கும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன்போது வியாபார நிலையத்தில் இருந்த நபர் பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

பதுளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)
பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் 09.08.2018 அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் உருத்திரதீபனும் கலந்து கொண்டார்.
கடந்த இரண்டாம் திகதி பதுளை பிரதேச சபை வளாகத்தில் வைத்து பதுளை பிரதேச சபையின் உறுப்பினரான முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகளினால் தாக்கப்பட்டு பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற கூடாது எனவும் தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)
பதுளை பிரதேச சபையினால் வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியில் குப்பை மேடு ஒன்று அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள தோட்ட காணியில் குப்பை மேட்டை அமைக்ககூடாது என பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் வேவெஸ்ஸ தோட்ட மக்களும், கிராம பகுதி மக்களும் பதுளை பசறை பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் வீதியை மறித்து பதுளை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் 01.08.2018 அன்று காலை ஈடுப்பட்டனர்.
வேவெஸ்ஸ தோட்ட மக்கள் 500ற்கும் மேற்பட்டோர் முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பதுளை பசறை பிரதான வீதியில் இரண்டு மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு மறித்து பதுளை பிரதேச சபை தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியை குப்பை மேடு ஒன்றை அமைப்பதற்காக வேவெஸ்ஸ தோட்ட நிர்வாகம் பதுளை பிரதேச சபைக்கு அண்மையில் வழங்கியுள்ளது.
இப்பகுதியில் 500ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும், 15 கிராம சேவகர் பிரிவும் காணப்படும் அதேவேளை, 7 பாடசாலைகளும் அதனையொட்டி பதுளை பிரதேச சபை காரியாலயமும், சுமார் 500 மீற்றர் தொலைவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகமும் அமைந்துள்ளது.
இது இவ்வாறிருக்க குப்பை மேடு அமைக்கும் பகுதியில் வேவெஸ்ஸ தோட்ட மக்களுக்கான குடிநீர் மற்றும் பவானைக்கான நீர் பெற்றுக் கொள்ளும் பகுதியும் காணப்படுகின்றது. ஆகையால் இவ்விடத்தில் குப்பை மேட்டை அமைப்பதனால் குடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என கோரிக்கைகளை முன்வைத்து இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பிரதேச சபை தலைவர் மக்களின் கோரிக்கைகளை ஏற்று வேவெஸ்ஸ தோட்ட பகுதியில் தோட்ட நிர்வாகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட குப்பை மேடு அமைக்கும் பகுதியில் “கொம்பஸ்ட்” இயற்கை பசளை தயாரிக்கும் வேலைத்திட்டம் மற்றும் குப்பை மேடு அமைக்கும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எழுத்து மூலம் தெரிவித்தள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றதையடுத்து பதுளை பசறை பிரதான வீதியின் வாகன நெரிசலும் பொலிஸாரின் கட்டுப்பபட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பாலித ஆரியவன்ச

பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமயந்தி பரணகம,  மாவட்டச் செயலகத்தில் வைத்து, இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, பதுளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுற்குள் ஆட்கள் இருக்கும் போதே மிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பதுளை, கல்கந்த பகுதியை சேர்ந்த 17, 21 மற்றும் 24 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் தொடர்ந்து இவ்வாறு திருடி வருவதாகவும் அவ்வாறு திருடும் பொருட்களை விற்று பெறும் பணத்தை ஹெரோயின் வாங்குவதற்கு பயன்படுத்துவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்களால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மூன்றும், தங்க மோதிரங்கள் மூன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலித ஆரியவன்ச
தியத்தலாவ, லிந்தஎல்ல பிரதேசத்தில், குளவிக் கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஜி.ஜயந்தி சிறியலதா (வயது 56) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸர பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து, பொது வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
பதுளை, பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “பண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்க உள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்த சவாலுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
இந்த நடவடிக்கைகளின் பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புக்கள் செயற்படுகின்றன. நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சமூகப் பொறுப்புக்கள் குறித்து தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று வாழ்க்கையிலும் சித்திபெறும் எதிர்கால தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு தமது பொறுப்புக்களை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

(க.கிஷாந்தன்)

பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பஉக பகுதியில் 19.05.2018 அன்று அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸர - கனவரெல்ல பகுதியில் பெய்த அடை மழை காரணமாக அப்பகுதியில் உள்ள மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது. 

இந்த மண்சரிவினால் விசாலமான கருங்கல் ஒன்றும் சரிந்து கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இன்று (15) காலை முதல் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்தை அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் ஏனைய 14 குடும்பங்களையும் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுள்ளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம் உதய குமார தெரிவித்துள்ளார். 

அப்பகுதிக்கு கடந்த 24 மணித்தியாளங்களாக 125 மில்லி மீற்றர் மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(க.கிஷாந்தன்)

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)
கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் காட்டுப்பகுதியில் 11.05.2018 அன்று அதிகாலை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு மற்றும் பதுளை பிரதேசங்களுக்கு சென்ற பயணிகள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
வட்டகொடை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவருக்கும், புகையிரதத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், இதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்தும் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தீடிரென புகையிரதங்கள் நிறுத்தப்பட்டதால் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்குமிடையில் வாய் தகராறு ஏற்பட்டதோடு, பயணிகள் தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமல் இரவு நேரத்தில் எங்கே செல்வது என்று தெரியாமல் சிறுவர்கள், பெரியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் பசி பட்டினியுடன் புகையிரதத்திலேயே காத்திருந்தனர்.
உடனடியாக பயனிகளின் பாதுகாப்பு நலன் கருதி நாவலப்பிட்டி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு பயனிகள் புகையிரத்திலேயே நித்திரை கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. மேலும் பயணிகள் நலன் கருதி 11.05.2018 அன்று  காலை முதல் அரச பேரூந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக உயரதிகாரியுடன் கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்ததன் பின்னர் இந்த பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.
கைவிடப்பட்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

(க.கிஷாந்தன்)

ஊவா மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் அரசாங்க தாதியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி 10.05.2018 அன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரையில் பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவரும் நோயளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அரசாங்க தாதியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் அரச சலுகைகள் நேர்த்தியான முறையில் கிடைக்கப்பெறாமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் வெலிமடை வைத்தியசாலையிலும் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதுடன், வைத்தியசாலையின் வளாகத்தில் தாதியர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.

எனவே இதற்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டதோடு, அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்படபோவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தாதியர்கள் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயம்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15.04.2018 அன்று மாலை 06.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தந்தையினால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். 

சின்னம்மை நோய் பரவல் காரணமாகவே பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை மூட தீர்மானித்ததாகவும் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 

நேற்று (12) வரை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 27 மாணவர்கள் சின்னம்மை நோயினால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
பொரு நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சுப் பதவியில் ரஞ்ஜித் மத்துமபண்டார தொடர்ந்தும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக 1982 ஆம் ஆண்டு ரஞ்ஜித் மத்துமபண்டார நியமனம் பெற்றார்.
1988 ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாண சபைக்கு தெரிவாகிய அவர் 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்தின் போது சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்ஜித் மத்துமபண்டார் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தியத்தலாவ – கஹகொல்ல பகுதியில் பஸ்ஸிற்குள் கைக்குண்டொன்று வெடித்ததால் தீ பிரவியதை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸின் ஒரு வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும் நடுவில் அமர்ந்திருந்தவர் எழுந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலமளித்ததாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நடுவில் அமர்ந்து வந்தவர் இராணுவ உறுப்பினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ உறுப்பினர் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குணமடைந்ததும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் மேலதிக விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் உயர் அதிகாரி கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தியத்தலாவ வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் கூறினார்.

தீவிர கண்காணிப்புப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ என்ற இடம் நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 அரசாங்க படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 7 ராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் அடங்குவர். இரு படையினரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பண்டாரவளை என்ற இடத்துக்கு வந்த போது, குண்டு வெடிப்பதற்கு முன்னதாக இந்த பேருந்து தியத்தலாவ செல்லும் பயணிகளை வேறு ஒரு தனியார் பேருந்துக்கு மாற்றியதாக ராணுவத்தின் சார்பிலான பேச்சாளர் பிரிகேடிய சுமித் அத்தப்பத்து செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே இந்த பேருந்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு கையெறி குண்டு ஒன்று வெடித்ததே காரணம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தோர்
Image captionவிபத்தில் காயமடைந்தோர்
ஒரு பயணியின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததே இதற்கு காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவும் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

போர் நடந்து முடிந்த வடபகுதியில் இருந்து விடுமுறையில் வரும் படையினர் இந்த வழியாக பேருந்தில் தமது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

(க.கிஷாந்தன்)
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியும் 31.01.2018 அன்று ஹட்டன் நகரில் பொது மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு முன்பாக மதியம் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், ஆர்.இராஜாராம், சரஸ்வதி சிவகுரு என பலரும் பொது மக்களுடன் கலந்து கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியாறு சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதேவேளை அட்டன் பொலிஸாரால் வீதியை மறித்து போராட்டத்தை நடத்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிர்த்து அட்டன் நீதிமன்றத்தின் ஊடாக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

ஊவா மாகாண கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒரு வருட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆசிரியைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது தொகுதி முன்பள்ளி ஆசிரியைகளை பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியைத் தொடர விரும்புகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுடையவர்கள் ஊவா மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவின் இடைநிலைக்கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் வீ.கருணாகரன் மற்றும் பதுளை கோட்ட கல்வி காரியாலய ஆசிரிய ஆலோசகர் ஸ்ரீதேவி ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.