Showing posts with label Slider.Sports. Show all posts


 ( வி.ரி.சகாதேவராஜா )

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் போட்டியின்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவான  ஒரேயொரு தவிசாளர் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆவார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியொரு சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது திருக்கோவில் பிரதேச சபையில் மாத்திரமே என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்றின் அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார்  தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்திருந்தது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை தெரிந்ததே..

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றிருந்தது.

எனவே அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த மே மாதம் 22 ந் திகதி, டெய்லி மெயில் பத்திரிகையில், போதைப் பொருள் வைத்திருந்த சந்தேக நபர்-Charlotte May Lee,சிறைச்சாலையிலிருந்து பேசும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.

வெலிக்கடை  சிறைச்சாலைக்குள் இங்கிலாந்து போதைப்பொருள் சந்தேக நபர் படமாக்கப்பட்ட வீடியோவை அடுத்து, சிறை அதிகாரிகளை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

பார்வையாளர் ஒருவர் மறைக்கப்பட்ட பொத்தான் கேமராவைப் பயன்படுத்தி காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரான பிரித்தானிய யுவதியை மன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தார். யுவதியின் பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட 46 கிலோ குஷ் போதைப் பொருள் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதனை நீதிமன்றத்தின் வழக்கு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் அறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி சம்பத் பெரேரா மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.  அண்மையில் சிலர் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு  எனது சேவை பெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு  சென்று காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

இதன் ஊடாக எனது சேவை பெறுநர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த யுவதியின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வருகை தந்து அவரை பார்வையிட அனுமதி கோரினர். சாதாரண நடைமுறையின் கீழ் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கினோம். அதில் ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள சிறிய கமராவை பயன்படுத்தி அங்கு நடந்த விடயங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் எனக்கூறினர்.

இதற்கமைய இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திறந்த மன்றில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு  சிறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 


இந்த சந்தேகநபரை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


#DailyMailUk/DMSriLanka 22/5/2025


 


அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக  அமைக்கப்பட்ட     டென்னிஸ் விளையாட்டு கூடம் (  tennis court ) இன்று  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மேற்குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் (DIG)  எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய சிறி, இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின்  இஸ்ஹாக் , இலங்கை  இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்  கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி, உள்ளிட்ட  அதிதிகள்  இணைந்து   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

அத்துடன்   அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் (DIG ) எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய சிறி உள்ளிட்ட அதிதிகள்   டென்னிஸ் விளையாட்டு கூடத்தை   பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து    வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை நகர சபை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் இதன்போது  விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,   உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ,  கிழக்கு மாகாண  முப்படை உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் ,பொதுமக்கள்,  என பலரும் கலந்து கொண்டனர்.

இது தவிர டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை இலங்கை இராணுவம் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது.இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்காக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.