Showing posts with label education. Show all posts



அக்கரைப்பற்று வலய ஆங்கில தினப் போட்டி, அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலத்தில், இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. அக்கரைப்பற்று பாடசாலைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


 மன்னார் மாவட்டத்திலுள்ள 
திருக்கேதீஸ்வரம் இந்து சமய தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மினுக்கன் அரசினர் முஸ்லீம் பாடசாலை ஆகிய இரு பாடசாலை மாணவர்களுக்கு
இணைந்த கரங்கள் அமைப்பினால்  45 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு  பாடசாலையின் அதிபர்.  பி.சே. தட்குருஸ்  தலைமையில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கிவருகின்றது .


மேலும் இப் பாடசாலைகள் கடந்த காலங்களில் யுத்ததித்தினால்  பாதிப்படைந்த பாடசாலைகளாகும்.

இணைந்த கரங்கள் இலங்கையில் இனமதம் மொழி பாராமல் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் மேலதிக கல்வி செயற்பாட்டிற்காண நிதி உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய வாண்மை விருத்தி முகாமையாளர் சோமஸ் பெரேறா , இரு பாடசாலையின் ஆசிரியர்கள்,
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
.காந்தன்,சுரேஸ்விவேக்,
.ஆனந்தன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.


 மாளிகைக்காடு செய்தியாளர்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் பெட்மிண்டன் பயிற்சி நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.

கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச  செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாரை மாவட்ட பொறியியலாளர் ஏ. எம். ஸாஹீர் உட்பட கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எம்.எம். முதர்ரிஸ், அஸ்மா மலிக் ஆசிரிய ஆலோசகர்கள், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஆலோசகர் எம்.ஏ. கலீலுர்ரகுமான், பாடசாலை முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


 வி.சுகிர்தகுமார் 

 அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான டபிள்யு.டி வீரசிங்கவின் 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நிர்மாண பணி நிதி மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஒதுக்கீட்டிலிருந்து மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி வழங்கும் நிகழ்வும் நேற்று (22) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான டபிள்யு.டி வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் ஆலையடிவேம்பு இணைப்பாளர் நவனீதன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வசந்த ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் கிந்துஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆலய நிருவாகத்தினர் விளையாட்டுக்கழகங்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புனரமைப்பு வேலைத்திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் என பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இதேநேரம் சோலார் பவர் இணைப்பினுள் உள்வாங்கப்படாத ஆலயங்கள் இரண்டாம் கட்டத்திற்குள் இணைத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பல இலட்சம் ரூபாவினை அம்பாரை மாவட்டத்திற்கென ஒதுக்கி பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவரது இணைப்பாளர் குறிப்பிட்டார்.

 



எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


வாகரை பிரதேசத்தில் உள்ள வெருகல் கல்லரிப்பு பழங்குடிக் கிராம மாணவர்களுக்கு கல்வி வசதி வழங்க வள்ளுவம் அமைப்பு முன்வந்துள்ளது.

 கல்லரிப்பு பழங்குடி கிராமத்தில் பாடசாலை இல்லை. மூன்று கிலோமீட்டர் தொலைவில் மாவடிச்சேனை மற்றும் வெருகல் பாடசாலைகள் உள்ளன.இம் மாணவர்கள் அங்கு சென்று தான் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது.

அதனால் அங்குள்ள மாணவர்கள் மாதக்கணக்கில்  பாடசாலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

 இந்த நிலையை உணர்ந்த வள்ளுவம் அமைப்பு தினமும் காலையில் அம் மாணவர்களை மாவடிச்சேனை  பாடசாலைக்கு கொண்டு செல்ல வாகன வசதியை வழங்கி உள்ளது. அதேபோன்று பாடசாலை முடிந்ததும் அவர்களை கிராமத்தில் கொண்டு செல்லவும் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

 பல மாத காலமாக பாடசாலை செல்லாதிருந்த அந்த மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்த இந்த வாகன வசதி அவர்களுக்கு கல்வி வாசனையை மீண்டும் ஊட்ட வாய்ப்பு அளித்தது .
இதற்காக கிராம மக்கள் வள்ளுவம் அமைப்புக்கு பலத்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

 


பாறுக் ஷிஹான்


கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் பூரணப்படுத்தப்பட்ட இரண்டாம் மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக  ஞாயிற்றுக்கிழமை(14) மாலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான  செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான தனது தனிப்பட்ட செலவில்    நான்கு வகுப்பறைகளை கொண்டமைந்த புதிதாக பூரணப்படுத்தப்பட்ட  கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின்   இரண்டாம் மாடி கட்டிடத்தை ஏனைய அதிதிகளுடன் இணைந்து  திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வானது  கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா(எல்.எல்.பி) தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது  1987 ஆண்டு பிறந்த நான் இப் பாடசாலையின் பழைய மாணவன்.1993 ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரை தரம் 1 தொடக்கம் 5 வரை கல்வி  கற்றேன்.என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள்.இது எனது முதல் மேடை.கன்னி பேச்சு.30வருடத்திற்கு பின்னர் இந்த இடத்தில் பேச வைத்த இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன்.இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க மாட்டான்.கல்வி பொருளாதாரம் அறிவு இவ்வாறு இதில் ஒன்றை கொடுப்பான்.இறைவன் இவ்வாறு எமக்கு கொடுக்கின்ற கொடை சமூகத்திற்கு பயன்படாமல் இருந்தால் நாம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.நாம் வாழ்ந்ததற்குரிய அடையாளம் எமது சமூகத்தில் கிடைக்கப் பெற வேண்டும்.அது அறிவாக கூட இருக்கலாம்.அது நீங்கள் பெற்ற பொருளாதாரமாக இருக்கலாம்.அது சமூகத்திற்கு சேரவில்லையாயின் நாம் வெறும் ஆட்கள்.நாம் இந்த சமூகத்தில் என்ன நன்மைகளை பெற்றோமோ அதை நான்கு பேர் பயன்பெற ஆவண செய்ய வேண்டும்.மிகப்பெரும் தர்மம் யாதெனில் நாம் பெற்றதை அல்லது நாம் கற்றதை மற்றுமொருவருக்கு சொல்லிக்கொடுப்பதாகும்.கற்பித்தல் ஆகப்பெரிய தர்மம் என இந்த சமூகத்திற்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய  36 வயது மதிக்கத்தக்க பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான  செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் குறிப்பிட்டார்.

பின்னர் வரவேற்பு மற்றும்  தலைமை உரையினை தொடர்ந்து   கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து பிரதம அதிதி கௌரவ அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளால் பாடசாலை அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு ஏனையவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  .எம்.எஸ்.சஹுதுல் நஜீம்,கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர்,ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளரும் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான  யூ.எல்.றியால் ,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ரி.எம் அனப்,கல்முனையான்ஸ் போரம் அமைப்பின்  தலைவர்  எம். முபாரிஸ்,சிவில் பொறியியலாளர் எம்.வை .அஸாம்,பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத்,தென்கிழக்கு பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம் நிஜாம் , பாடசாலை ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், ,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ரி.எம். இர்பான்,எம்.ஜெ.எம் ஜெசில், எம்.எம்.எம்.ஜெளபர், எம்.எம் சமீறுல்லாஹி,  ஐ.ஹசீனா பானு ,  ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று  முடிவடைந்து.

அத்துடன் இந்நிகழ்வில் இப்பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான எம்.ரி.ஏ.அஸீஸ் மற்றும் ஏ.எல்.அப்துல் கமால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வு இரவு இராப்போசனத்துடன் சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


காத்தான்குடி அல் - ஹிறா மகா வித்தியாலய மாணவன் நீச்சல் போட்டிகளில் சாதனை


நேற்று 13.07.2024 சனிக்கிழமை மற்றும் இன்று 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட நீச்சல் போட்டியில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவன் KMM. Aakil U18 பிரிவில் பின்வரும் போட்டிகளில் வெற்றி பெற்று பங்கு பற்றிய அனைத்து போட்டிகளிலும் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Butterfly 100M - 1st Place
Freestyle 400M - 2nd Place
Freestyle 200M - 2nd Place

அல்ஹம்துலில்லாஹ் இம்மானவன், அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

 


மாளிகைக்காடு செய்தியாளர்.


பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள டி- 100 வேலைத்திட்டத்தினூடாக பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்யத்தேவையான பணிகள் இதன்மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி. நஸார் ஹாஜியின் தலைமையில் நடைபெற்ற நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்யத்தேவையான நிதியொதுக்கீட்டு ஆவணங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.ஆர். அமீர், நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, இணைப்பாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எம். நெளபர், பாராளுமன்ற உறுப்பினரின் ஏனைய இணைப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுவினர், வட்டார அமைப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இன வேறுபாடுகள் இல்லாது நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த டி- 100 திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெருந்திரளான மக்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. 2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்  தலைவர்களை தெரிவு செய்யும் தகுதிகாண் காலத்தில் உரிய தகைமைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இவ்வாறு சின்னங்கள் சூட்டப்பட்டன.


பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  முதல் சின்னத்தை அதிபர் அவர்கள் சிரேஷ்ட மாணவத் தலைவருக்கு சூட்டியதோடு  பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ஏனைய மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களைச் சூட்டுவதனையும் படங்களில் காணலாம் (நூருல் ஹுதா உமர்)


 (எஸ்.அஷ்ரப்கான்)


அரசு, ஜூன் 26 தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலை முன்பாக அதிபர் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் இன்று (02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இடம்பெற்ற இப்போராட்டம் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம்  முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்றது. இதில், சாதாரண வேண்டுதலுக்கு தீர்வு கொடு ! , ரணில் விக்கிரமசிங்கவின் ஒடுக்குமுறை அறிக்கைக்கு எதிராக போராடுவோம் !  என பல்வேறு சுலோகங்களை ஏந்தி அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இப்போ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடும்போது, போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத விடத்து தொடர்ந்தும் போராட்டத்தை முன் கொண்டு  செல்லப் போவதாக கருத்து வெளியிட்டனர். 





இலங்கை நிருவாக சேவை(மட்டுப்படுத்தப்பட்ட ) பரீட்சை முடிவுகளின் படி 41 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


Appointment List of Open Recruitment of  Sri Lanka Administrative Service has been released.

Appointment Date - 15 July 2024

Appointment List is attached Below



 மாளிகைக்காடு செய்தியாளர்


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இன்று (01) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட புதிய அதிபர் காரியாலயம் மற்றும் பாதை என்பவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஏ. சஞ்சீவன், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர், செயலாளர் நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக்கோட்ட அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிம் அவர்களின் கல்விச் சேவையை பாராட்டி பாடசாலை சமூகம் பொன்னாடை போத்தி கௌரவித்ததுடன் கல்வியில் சாதித்த மாணவர்களுக்கும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.


 .(சுகிர்தகுமார் 0777113659)


 அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடகாவியலாளர் சந்திப்பு நேற்று மாலை அக்கரைப்பற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் ஜீவா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் செயலாளர் பஸ்லியா உறுப்பினர்களான ரம்சானா சுஜீவன் ததுசனா ரசீட் முக்சீன் உள்ளிட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது அரசிடம் பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்ததுடன் தேர்தலுக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராட வேண்டிவரும் எனவும் எச்சரித்தனர்.
குறிப்பாக பட்டப்படிப்பனை பூர்த்தி செய்து 40 வயதை தாண்டிய பட்டதாரிகளின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
டிப்ளோமா நிறைவு செய்தவர்களுக்கு உடன் தொழில் வழங்கும் அரசு பல வருடம் கஸ்டப்பட்டு பட்டத்தினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளை மறந்தது ஏன் எனவும் கவலை தெரிவித்தனர்.
சுற்று நிருபங்களுக்கமைவாக வெளிநாடு சென்றுள்ள அரச உத்தியோகத்தர்களின் இடத்திற்கு ஏன் தங்களை நியமிக்க முடியாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
மிகவும் கஸ்டத்தின் மத்தியில் பல சுமைகளுடன் பட்டத்தினை பெற்றுக்கொள்ளும் பெண்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
8 9 தரங்களில் கல்வி கற்றவர்களுக்கு தொழில் வழங்கிய அரசு பட்டதாரிகளை கணக்கெடுப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.
ஆகவே பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான தீர்வினை தேர்தலுக்கு முன்னர் பெற்றுக்கொடுக்குமாறும் இதற்கென சிறந்த பொறிமுறையினை நாட்டில் உருவாக்கி பட்டதாரிகளாக தாங்கள் வெளியேறுகின்றபோதே தொழிலொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினர்.  இல்லையேல் பாரிய போராட்டங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் கூறினா

 


பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு!


பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னோடிப் பீடங்களுள் ஒன்றாகிய முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பீடத்தின் பீடாதிபதியினைத் தெரிவு செய்வதற்காக 28.06.2024 ஆம் திகதி அன்று இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் பீடத்தின் உயர் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பேராசிரியர் முஸ்தபா பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்கு முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் முஸ்தபா பணியாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.    


பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்கள் மீராலெப்பை அப்துல் மஜீத், முஹம்மது இஸ்மாயில் பாத்துமத்து தம்பதியினருக்கு 1970 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் பிறந்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபாரப் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், தனது முதுதத்துவமாணிக் கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிக் கற்கையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேறினார். பேராசிரியர் முஸ்தபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக பொருளியல் கட்டுரையாளர், உதவி விரிவுரையாளர்இ தற்காலிக விரிவுரையாளர், ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர்இ பேராசிரியர்  என பல பதவி நிலைகளினூடாக, கடந்த 25 வருடங்களாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறார். 


பேராசிரியர் முஸ்தபா முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஒரேயொரு வியாபார பொருளியல் விரிவுரையாளராக கடமையாற்றி பல பொருளியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருவதோடு பல்கலைக்கழக மட்டத்தில் பகுதிநேர கடமையாளராக மாணவர் நலன்புரி பிரிவின் பணிப்பாளராகவும், வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நெறியின் பணிப்பாளராகவும் கல்விசார் விடுதி பொறுப்பாளராகவும், விசேட தேவையுடைய மாணவர்களின் இணைப்பாளராகவும், இடர் முகாமைத்துவ இணைப்பாளராகவும், வெளிவாரி கற்கைநெறியின் இணைப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். 


அதேவேளை, Journal of Management மற்றும் journal of Business Economics இன் பிரதான ஆசிரியராகவும், விரிவுரையாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பொருளாளராகவும், பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளராகவும் சிறப்பாக கடமையாற்றியதோடு, முகாமைத்துவ துறையின் தலைவராகவும் கடமை ஆற்றிவந்த நிலையில் தற்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் தேசிய ரீதியில் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராக கடமை ஆற்றுவதோடு  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு மதிப்பீட்டாளராகவும் நியமிக்கப்பட்டதோடு இலங்கை பல்கலைக்கழக பொருளியல் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 


உலகளாவிய ரீதியில் பல கல்வி ஆய்வு மாநாடுகளில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டதோடு அமெரிக்க பொருளியலாளர் சங்கம் மற்றும் உலக பொருளியலாளர் சங்கத்திலும் ஆயுட்கால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பேராசிரியர் முஸ்தபா இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 

பல்கலைக்கழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்கான விருதில் முதலாம் இடத்தினை பெற்றதோடு வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல சிபார்சுகளை பொருளியலளவை மூலம் ஆய்வு செய்து இலங்கையின் சுற்றுலாத்துறை கொள்கை வகுப்பாளர்களுக்கு பல சிபாரிசுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கால தொடர் தரவுகளும்; நுஎநைறள பயன்பாடும், ஐரோப்பிய யூனியனும் GSP+ உம், சர்வதேச நாணய நிதியம், சுற்றுலா பொருளியல் ஒரு அறிமுகம், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு, பணவீக்கம், பொருளியல் சொற்களஞ்சியம், தென்கிழக்காசிய நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு, நிலையான அபிவிருத்தியும் சமூக பொருளாதார போக்கும், நுண்ணியல் பொருளியல், பேரினப் பொருளியல், இலங்கையின் பொருளாதார வரலாறு, வெளிநாட்டு நேரடி முதலீடு கோட்பாடுகள், சர்வதேச வர்த்தகமும் நிதியும், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற பல புத்தகங்களை வெளியீடு செய்துள்ளமை இவரின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகும். 


இவர் ஆய்வுக்கட்டுரைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமர்ப்பித்துள்ளார். ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, UAE ஜப்பான், இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மட்டத்திலும் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் முதலாவது வியாபார பொருளியல் பேராசிரியராக 10.12.2019 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பதவியுயர்வு பெற்றார். 


பல்கலைக்கழகமொன்றில் உள்ளக ரீதியாக உள்ள பல்வேறு பதவி நிலைகளில் சிறப்பாக செயற்பட்ட ஒருவராக பேராசிரியர் முஸ்தபாவினை அடையாளப்படுத்த முடியும். அவரது அயாரத சேவைக்கு உயரிய கௌரவத்தினை அளிக்கும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அடைவினை மனதார வாழ்த்துவதோடு அவரது அடைவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது மனைவி உம்மு பரீதா முஸ்தபாவும் பாராட்டுக்குரியவர்.


வாழ்த்துக்கள்

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர்தரத்தில் சிறப்பு சித்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட வைத்தியத்துறை, சட்டத்துறை மற்றும் உயர் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இம்முறை 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் பாடசாலை ரீதியாக பாடத்துறையில் முதலிடங்களை பெற்ற மாணவர்கள் 13 பேர் மாத்திரம் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
ஆலயத்தின் தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நீதிபதி த.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட திட்ட பொறியியலாளர் ந.லோகிஸ் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கதிரியக்கவியல் நிபுணர் கோ.சாருலதன் விசேட அதிதிகளாகவும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் சுதாகரன் இந்துமாமன்ற தலைவர் தணிகாசலம் அதிபர்களான சண்டேஸ்வரன் மற்றும் தயாரூபன் நேசராஜா கணக்காய்வாளர் கோபாலபிள்ளை உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசியினை ஆலய உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ சுதர்சன் குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கேதீஸ்வரக்குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னராக கௌரவ நீதிபதி அவர்கள் ஆலய நிருவாகம் மற்றும் திருப்பணிச்சபை மகளிர் அணியினரின் ஏற்பாட்டில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன் பின்னராக கல்வி சாதனையாளர் கௌரவிப்பு விழா இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய நீதிபதி மற்றும் குருமார்கள் ஆலய நிருவாகம் முன்னெடுக்கும் கல்வி அபிவிருத்திக்கான பணியை பாராட்டியதுடன் பல்கலைகழக மாணவர்களை வாழ்த்தி ஒழுக்கமுடைய எதிர்கால அரச அதிகாரிகளாக வரவேண்டும் என அறிவுரை வழங்கினர்.
ஆலயத்தில் நடைபெற்றுவரும் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டு இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


ஆலையடிவேம்பு கோட்ட தமிழ் மொழி தின போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (24) திங்கட்கிழமை 
 அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது.

முன்னதாக வாசலில் இருந்து அதிதிகள் மலர்மாலை அணிவித்து கலாசார நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டனர்.

முதலாம் கட்ட நிகழ்வானது ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையில் 16 பாடசாலை சேர்ந்த மாணவர்கள்  பங்கேற்புடன் கோலாகலமாக  ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலைகளின் அதிபர்களும், திருக்கோவில் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் அகில இலங்கை தமிழ் தின போட்டி திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடி வேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தமிழ்த் தின போட்டி முதலாம் கட்ட நிகழ்வான எழுத்தாக்க போட்டியில் வெற்றியீட்டிய  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 



2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


கல்வி என்பது சுயசெயற்பாடு எனும் கூற்றிற்கு இணங்க பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படகூடாது என்பதற்கிணங்க அவர்களுடைய சமநிலை ஆளுமையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக அவருடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.எடுத்துக்காட்டாக பாடசாலை தமிழ் தின போட்டி, ஆங்கிலத்தினப்போட்டி மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன் போட்டி போட்டு செயல்படும் விதத்தை அறிந்து கொள்ள, சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு நற்குணங்களை வளர்த்துக்கொள்ள, தோல்வியை ஏற்றுக் கொள்ளல், வெற்றி பெற்றவர்களை பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்பு வளர்க்கப்படுகின்றது.

இணைந்த கலைத்திட்ட செயல்முறைகளாக கல்வி சுற்றுலா, விளையாட்டுப் போட்டி, முதலுதவி,சாரணியம், மாணவர் மன்றம்,  விழாக்கள்,பெருங்காட்சி மற்றும் கண்காட்சி பல்வேறு மன்றங்கள் அல்லது கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக மாணவர்கள் எவ்வாறு சமூகமயமாக்கப்படுகின்றார்கள் என்பதனை பின்வருமாறு ஆராயலாம்.இதன்படி கல்வி சுற்றுலாவை எடுத்துக் கொள்வோமானால் பாட நூல்களில் அல்லது ஆசிரியர் கை நூல்களில் காணப்படும் இடங்கள் அல்லது பிரசித்தி பெற்ற இடங்களை நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இக்கல்வி சுற்றுலா அமைகின்றது மேலும் விழுமிய பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு மேடையாக இச்செயல் முறையானது காணப்படுகின்றது.
அதாவது கல்வி சுற்றுலாக்களின் மூலமாக தேவாலயங்கள், விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல்வேறு மத ஸ்தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதனால் அங்கு எவ்வாறான விழுமிய பண்புகள் காணப்படுகின்றது என்பது தொடர்பாக அறிந்து பல்வேறு மதம் தொடர்பான அறிவினையும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. இதன் மூலமாக சமூகமயமாக்கம் மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது எனலாம்.
மேலும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக மாணவர்கள் ஏனைய பாடசாலை மாணவர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுவதனால் ஏனைய பாடசாலைகள் தொடர்பான சட்டதிட்டங்கள், விழுமியப்பன், விதிகள்,நடைமுறைகள் என பல்வேறு விடயங்களையும் அம்மாணவர்கள் தொடர்பு கொள்வதன் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.அதே நேரம் ஏனைய பாடசாலை மாணவர்களுடன்  நட்புறவும் மாணவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே விளையாட்டு போட்டிகள் மூலமாக சிறந்த சமூகமயமாக்கல் தன்மையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
சாரணிய இயக்க செயற்பாடுகளின் மூலமாக சாரணியர் பாடல், சர்வதேச சமய வழிபாடு, உடற்பயிற்சி, விளையாட்டு போட்டி,  முதலுதவி சிகிச்சை, மனக்கட்டுப்பாடு, ஒழுக்க பண்பு, சேவை மனப்பான்மையை வளர்த்தல், தலைமை பண்பு, பிறருக்கு உதவுதல், கூடாரம் அமைத்தல், தீயணைப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகள் விருத்தி பெற சாரணிய இயக்கம் உதவுகின்றது. ஏனைய பாடசாலை மாணவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை சாரணிய இயக்கம் ஏற்படுத்திக் கொடுப்பதனால் மாணவர்கள் மத்தியில் சமூகமயமாகும் தன்மை விருத்தி அடைகின்றது.
பாடசாலைகளில் ஒளிவிழா, சரஸ்வதி பூஜை, மீலாத்து நபி விழா போன்ற பல்வேறு விழாக்கள் பாடசாலைகளில் இடம்பெறுவதனால் ஒவ்வொரு மதத்தை சார்ந்த விடயங்கள் கலை கலாச்சார அம்சங்கள், பண்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்றது. அத்தோடு மாணவர்கள் ஏனைய மதத்தவர்களுடைய விழாக்களில் இணைந்து நிகழ்வுகளில் பங்குபெற்றுதல், அவர்களுடைய விழாக்களுக்கான உதவி வேலைப்பாடுகளை செய்தல் போன்றவற்றின் மூலமாக சமூகமயமாக்கல்   மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது. இதற்காக இணைபாடவிதான செயல்பாடுகளாக காணப்படும் பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான விழாக்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறலாம்.
மாணவர் மன்ற  செயற்பாடுகள்  மூலமாக பாடசாலைகளில் இடம்பெறும் தமிழ் இலக்கிய கலாமன்றம்,  சமய சமூகம் சார்ந்த மன்றங்கள் நடத்தப்படுவதனால் மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதோடு அவர்களுடைய திறமைகளையும் வெளிக்காட்டுவதற்கான களமாக அமைகின்றது. இதன் மூலமாக சமூகத்தின் மத்தியில் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. இதன் மூலமாக ஆசிரியர் மாணவர் தொடர்பும்,மாணவர் மாணவர் தொடர்பு என்பன சிறந்த முறையில் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் சமூகமயமாக்கல் தன்மையானது மேலும் விருத்தி அடைவதற்கு மாணவர்மன்ற செயல்பாடுகள் முக்கியமானதாக அமைகின்றது எனலாம்.
கல்வி என்பது வாழ்கைக்கான பொருத்தப்பாடு என்பதற்கு இனங்க மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, சுயகௌரவம், சுயதிறன் விருத்தி என்பவை ஏற்படுவதோடு தலைமைத்துவ பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, குழு முயற்சி, கூட்டுறவு பண்பு, நம்பிக்கை, தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, தமது சுற்றாடலை பேண வேண்டும் என்ற உணர்வு போன்ற சமூகமயமாக்கல் தன்மைகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடியதாக அமைகின்றது அவ்விதத்திலேயே இணைந்த கலைத்திட்டமானது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
அந்த விதத்தில் விளையாட்டு போட்டிகளாக இருக்கட்டும், சுற்றுலாவாக இருக்கட்டும், சாரணியம், விழாக்கள், கழகங்கள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கு கொள்வதினால் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகள் சீரழிய வாய்ப்பு உள்ளது என பெற்றோர்கள் எண்ணுகின்றனர். இதன் மூலமாக மாணவர்கள் சமூகமயமாகும் தன்மையானது குன்றி குறுகிய வட்டத்துக்குள்ளேயே மாணவர்கள் புத்தகப் பூச்சிகளாக உருவாக்கப்படுகின்றனர். எனவே இணைந்த கலைத்திட்டம் தொடர்பான தெளிவான அறிவினை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரியான விதத்தில் வழங்குதல் வேண்டும்.
ஆனால் மாணவர்கள் இதில் பங்கு கொள்ளும் விதமானது மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு தோல்வியை கண்டு துவண்டு விடும் பண்பு, மற்றவர்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் உள்ள அச்சம், பயம், கூச்சம் போன்ற விடயங்களின் மூலமாக பல்வேறு சிக்கல்களுக்கு மாணவர்கள் உள்ளாக நேரிடக் கூடியதாக உள்ளது. சிறந்த சமூகமயமாக்கல் தன்மை மாணவர்கள் மத்தியில்  இல்லாத காரணத்தினால்  இன்றைய காலகட்டங்களில் பல மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இவ்வாறான நிலைமைகளிலிருந்து  மாணவர்களை விடுவித்து ஒரு சுமுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு சமூக மயமாக்கல் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை எனலாம்.

காராளசிங்கம் ஷயந்தினி,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.