Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 ( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன.

 கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் இரவு பகலாக திருத்தம் செய்யப்பட்டு வந்தது.

இன்று (7) சனிக்கிழமை பகல் குறித்த குழாய்கள் திருத்திப் பொருத்தும் பணி நிறைவு பெற்றிருக்கின்றன.

குறித்த குழாய்கள் எதிர்வரும் வெள்ள அனர்த்தத்தின்போது சேதமடையாமல் இருக்க உரிய தடுப்புஅணை  நடவடிக்கைகள் நேற்று எடுக்கப்பட்டன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஹைதர்அலி, பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் நேற்றும் களத்தில் நின்று இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த 12 நாட்களாக தண்ணீர் இன்றி 28 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான குழாய்கள் இருந்தன. அவற்றில் முதலாவது தண்ணீர் ஏற்றி பரிசோதிக்கும் சோதனை நிகழ்வும் இடம்பெற்றது.

அனைத்தும் பூர்த்தியாகும் பட்சத்தில் நாளை (8)   ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் குடிநீர் விநியோகம் வழமைபோல் இடம்பெறலாமென கூறப்படுகிறது.

கடந்த 12 நாட்களாக நிந்தவூர் காரைதீவு மாளிகைக்காடு  சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் குழாய் நீர் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார்       


கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும் உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்;தல் முடிவுகள் கூறுகின்றது என குறிப்பிட்ட அம்பாரை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவீந்திரன் கோடீஸ்வரன் எதிர்காலத்தில் உரிமை சார்ந்த விடயங்களுடன் அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் அதிக கவனம் செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் இத்தேர்தலில் தமிழரசுகட்சிக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழர்களுக்கும் நன்றி கூறும் அதேநேரம் வாக்களிக்காத மக்களையும் ஒன்றிணைந்து சிறந்த பலமான கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்குவேன் என்றார்.
கிழக்கு மாகாணத்தில் 5 ஆசனங்களை எமது கட்சி பெற்றுக்கொண்டு முன்னிலை வகித்தாலும் தமிழரசுக்கட்சியை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சில சதித்திட்டங்கள் காரணமாக வட மாகாணத்தில் பின்னடைவை கண்டுள்ளோம். இதனை நிவர்த்தி செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.
அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் கல்வி அபிவிருத்த, புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கம், புதிய பிரதேச சபைகள், புதிய வலயக்கல்வி அலுவலகம், பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்தல், விவசாய மீன்பிடி கால்நடை அபிவிருத்தி உள்ளிட்ட ஏழம்ச கோரிக்கையினை முன்னிறுத்தி தமிழர்களின் இருப்பை பாதுகாக்க செயலாற்றுவோம் என்றார்.
கிடைத்துள்ள தேசிய பட்டியலை கட்சியின் முடிவுகளின் பிரகாரம் தமிழர் உரிமை பாதுகாக்கின்ற சிறந்த செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கின்ற ஒருவருக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதுடன் தமிழ்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் கட்சிகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் கூறினார்.

 



பாறுக் ஷிஹான்


ஊம்பல்(ஹம்மிங் மீன்) என கூறப்படும் ஒரு வகையான மீனினங்கள்  கரையொதுங்கி இறப்பதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதி  கடற்கரை பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகின்றது.

அண்மைக் காலமாக கிழக்கு மாகாண  கடலில் கரையொதுங்கி வரும்  ஊம்பல் மீன்கள் எனப்படும் மீன் இனங்கள்  இறந்த நிலையில் அப்பகுதியில் கரையொதுங்குவதனால் இவ்வாறு துர்நாற்றம் வீசுகின்றது.

இதன்காரணமாக அப்பகுதி மீனவர்கள் முதல் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.காலநிலை மாற்றம் மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக  இவ்வாறான   மீன்கள்  கரை ஒதுங்குவதாக  மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.அத்துடன்   இம்மீன் இனம் கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர்   கரை ஒதுங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில் உள்ள கடற்கரை பிரதேசங்களில் இவ்வாறு மீனினங்கள் கரையொதுங்கி வருவதுடன் சிறிய மற்றும் நடுத்தர  அளவிலான  மீன் இனமே  இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து கிடக்கின்றன.

நாவல் - கறுப்பு நிறம்  கொண்ட  மீன்கள் பல்லாயிரக் கணக்கில் இறந்து  கரையொதுங்கியுள்ளதுடன்  25 சென்மீட்டர் நீளமுள்ள இவ்வகை  மீன் இனமானது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் கலிபோர்னியாவிலிருந்து அலாஸ்கா வரை வாழ்கின்றன.

இவ்வகையான மீன் இனம் தங்களது இனத்தை பெருக்கி கொள்வதற்காக காலநிலை மாற்றங்களின் போது கற்பாறைகளினுள் இருந்து வெளிப்படுவதுடன்
பெரும்பாலும் இவை இரவு வேளைகளிலேயே கரைக்கு வருவது வழமை என்றும் இந்த மீன்கள் ஒரு வகையான இரைச்சல் சத்தத்தினை ஏற்படுத்தக் கூடியது எனவும்
அமெரிக்க பகுதிகளில் வாழும் இவ்வகையான மீன் இனம் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்குகிறது என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானங்கள் பிரிவு மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அகமட்  தெரிவித்துள்ளார்.

இந்த மீன் இனம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாததால் இதனை சாப்பிட வேண்டாம் என அங்கிருக்கும் மீனவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இவ்விடயம் மீனவர்கள் மத்தியிலும்  மக்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்களையும்  சில வகையான ஐயங்களையும் தோற்றுவித்துள்ளன.


பாறுக் ஷிஹான்


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-  களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம்  உல்லாசப் பிரயாணிகளால்   அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில்பல்வேறு தர  இடத்தினைப் பெற்றிருக்கின்றன.அந்த வகையில்  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால்  இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள்  ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

கடந்த கால கொரோனா அனர்த்தம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொருளாதார சீர்கேடு (எரிபொருள் பற்றாக்குறை எரிவாயு பற்றாக்குறை)  அரகல கிளர்ச்சி  உள்ளிட்ட  அசாதாரண சூழ்நிலை காரணமாக  இப்பிரதேச சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.எனினும்  தற்போது நாடு  மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின்  பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அண்மையில் கூட உள்ளுர் பயணிகள்  5 பேர் கடலலையில் சிக்குண்ட நிலையில் அங்கு நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையின் உயிர் காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர இப்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.இதனால் தங்குமிட வசதிகள் உணவகங்கள் அதிகளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் இக்கடற்கரைப் பிரதேசதம் உலகரங்கில் மிகப் பிரபல்யம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.இங்கு சர்வதேச ரீதியிலான நீரலைச் சறுக்கு விளையாட்டு இக்கடற்பரப்பில் வருடந்தோறும் இடம்பெறுவதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவது இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கு வழிகோலியாகவும் அமைகின்றது.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன. இதனால் பெருந்தொகை அந்நியச் செலாவணி நாட்டுக்கு வருமானமாய் கிட்டி வருகின்றன.இந்த  மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் ஏப்ரல் மாதம் முதல்  ஒக்டோபர் மாதம் வரை பொத்துவில் அறுகம்பே பிரதேசம்  உல்லாசப் பிரயாணிகளின் வருகை   மற்றும் பொழுது போக்கும் பருவ கால  இடமாக கூறப்படுகின்றது.இதை விட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  பேராதனைப் பூங்கா,  நுவரெலியா , பாசிக்குடா, உல்லை , போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள் .

 
இந்த வருடத்தில் இதுவரை  பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.இதற்கமைய பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.குறிப்பாக  அறுகம்பை உல்லை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் சரளமாக இணைந்து குதூகலமாக பொழுதைக்   கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.

இதை விட கணிசமான வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகளுடன்  உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக அறுகம்பே சுற்றுலா வலயத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த அருகம்பே  வளைகுடா கடற்கரையோரத்தில் பிரபலமாக விளங்கும் நீர் பனிச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் கணிசமான வருமானத்தை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன்கடந்த காலத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

2035 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10% பங்களிப்பை வழங்கும் என உலகளாவிய அறிக்கைகள் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான   மாற்றத்திற்கு இலங்கை முன்கூட்டியே தயாராகி வருவதைனை அருகம்பே வளைகுடா கடற்கரை வெளிநாட்டு உள்ளுர் பிரயாணிகளின்  வருகை உறுதிப்படுத்துகின்றன.
  


 நூருல் ஹுதா உமர்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் அடிக்கடி யானை தாக்குதலை சந்தித்து வரும் சம்மாந்துறை கல்வி வலய வாங்காமம் கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை சுற்று மதில் நிர்மாணிக்க 4.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் யூ.எல். பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுமதில் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நிஷார், வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலய அதிபர் யூ. எல்.தாஹிர், வாங்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஐ.எல். சபின், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், இணைப்பாளர் எம்.எப்.எம். பர்ஹான், அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை முன்னாள் அதிபர் எம். ஹார்தீன்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து போட்டோ கொப்பி இயந்திரம், அலுவலக தளபாடங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

 


பாறுக் ஷிஹான்


தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஒன்று கூடி காரைதீவு சந்திக்கு அருகில்    தமது பிள்ளைகளுடன் வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது வேலை வேண்டும், நாம்கண்ட கனவு பொய்யாகிவிடுமோ, பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில்  "பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்", "கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?", "அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்? போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என  கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

குறித்த கவனயீர்ப்பு  போராட்டமானது சிறிது தூரம் பேரணியாக இடம்பெற்றதுடன்  அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க  தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன்  , செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் உட்பட குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக  அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பேரணியிலும் இணைந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.


 ( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் லயன் மதுரநாயகம் சுதர்சன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 கல்முனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் பல சமூக நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் வகிப்பவருமான எந்திரி லயன் எம்.சுதர்சன்  கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ எம் எம் ரியால் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஆரம்பக் கல்வியை காரைதீவு இ.கி. மிஷன் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கல்லடி சிவானந்த வித்யாலயத்திலும்  மட்டக்களப்பு  மத்திய கல்லூரியிலும் பூர்த்தி செய்தார்.
 மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரியான இவர் தற்பொழுது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.


பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2024 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் நிலைய  மைதானத்தில்   இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்    தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு   பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில்    சம்மாந்துறை ,பெரியநீலாவணை,  சாய்ந்தமருது,   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.


 


மாளிகைக்காடு செய்தியாளர்


சீரற்ற காலநிலையினால் இவ்வருட ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அம்பாறை மாவட்ட காரைதீவு-01,06,07 மற்றும் 11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பத்தொன்பது வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கான முற்பண தொகை 10,000/- வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சசிந்திரன் தலைமையில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், நிர்வாக கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 



குப்பைகள் நிறைந்த பலூன்களை   வட கொரியா அனுப்பத் தொடங்கியதிலிருந்து,தென்கொரியாவின் Incheon விமான நிலையத்தில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 போதிய நீரின்றி சேதமாகும் விவசாய நெற்கதிர் கண்டு கவலை அடைந்துள்ள விவசாயிகள் உரிய அளவு நீரினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
அக்கரைப்பற்று நீத்தையாறு தென் மற்றும் நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் வயல் நிலங்கள் போதிய நீரின்றி சேதமாகும்; நிலை ஏற்படப்போவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
நெற்செய்கையானது குடலைப்பருவத்தை அடைந்து நெற்கதிர் வெளிவரும் நிலையில் இவ்வாறு போதிய அளவு நீருன்றி நிலம் காய்ந்துள்ளதால் விளைச்சல் பாதிப்படையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
பன்னலகம மற்றும் அம்பலோயா குளங்களில் இருந்து நீரினை பாய்ச்சல் மூலமாக பெறும் பயிர் நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சிறுபோகச் செய்கையின் ஆரம்ப கூட்டத்தில் குறித்த வயல் நிலங்களுக்கு பாய்ச்சல் நீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தும் தற்போது போதிய அளவு நீர் வழங்கப்படாமை தொடர்பில் அதிருப்தி அடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 




( வி.ரி. சகாதேவராஜா)


தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைதீவு கமநல சேவைகள் நிலையத்தில் மரம் நடுகை காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியை திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் விவசாய உதவிப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காரைதீவு பிரதேச விவசாய பெரும்பாக  உத்தியோகத்தர்  பாத்திமா சர்ஜானா  விவசாய போதனாசிரியர் ( மத்தி)பி.பிரதீப் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 (எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி  வலய  அமைப்பாளராக  ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை வேட்பாளர் எஸ்.எல்.எஸ்.முஹீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி கல்முனைத் தொகுதியின் வட்டாரம் 12 தொடக்கம் 17ம் வட்டாரம் வரையான பகுதிகளுக்கே
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின்  பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்
பெண்களுக்கு மார்க்க கல்வியை புகட்டி வரும் நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை கையளிக்கும் நிகழ்வும், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக்கல்லூரி வளர்ச்சி தொடர்பிலான கலந்துரையாடலும் இன்று (18) நடைபெற்றது.
நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட கிளை செயலாளருமான விரிவுரையாளர் மௌலவி ஏ.எல். நாஸர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதரஸாவில் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.

இதன்போது நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நலன் கருதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை மதரஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது பிரின்ஸ் காலேஜ் இற்கான நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் நிர்வாக இயக்குனர் எம்.எம். றியாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.எம். சாலிதீன் (ஹாமி), செயலாளர் ஐ. பாயிஸ், பொருளாளர் எம்.ஐ. யாகூப், இயக்குனர் சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜௌபர், உதவி செயலாளர் எம்.ஐ. நிரோஷ், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், மாணவிகள், அவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 கல்முனை வாடிவீட்டு வீதியில் அஷ்ரபுக்கு கட்டிடத்தொகுதி.- பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்


நூருல் ஹுதா உமர் 

கல்முனையில் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நினைவாக அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் சமகால அபிவிருத்தி மற்றும் அரசியல் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு ஒன்றை 2024.05.18 ஆம் திகதி கல்முனை மாநகரசபை கேட்போர் கூடத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கூட்டியிருந்தார்.

ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், திட்டமிட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதியானது 

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஆய்வு ரீதியான ஆவணங்கள் சேகரித்து அடுத்த தலைமுறைக்கு முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் இடமாகவும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் எதிர்மறைக்கருத்துக்களை சட்ட ரீதியாகவும் ஒருமித்த கருத்துக்கள் ஊடாகவும் எதிர்கொள்ள தீர்மாங்களை எடுக்கும் இடமாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரான பாதையில் இட்டுச்சென்று அவர்களில் இருந்து சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் இடமாகவும், மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கருத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாகவும் குறித்த கட்டிடத்தொகுதி அமையும் என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதிக்கான சரியான பெயரை புத்திஜீவிகளை அணுகி அவர்களின் ஒப்புதலுடன் வைப்போம் என்றும் இந்த கட்டிடத்தொகுதியானது கல்முனை வாடி வீட்டு வீதியில் அமையும் என்றும் தெரிவித்தார்.

குறித்த கட்டிடத்தொகுதியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தன்னுடன் இருந்து ஒத்துழைத்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமையவுள்ள கட்டிடத்தொகுதியானது சர்வதேச தரத்தில் அமையும் என்றும் தெரிவித்தார்.

முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், D100 என்ற 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் விடுபட்டிருந்த அபிவிருத்திப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் நலன் மற்றும் இருப்பு தொடர்பில் கட்சி கூடி, சரியான தீர்மானங்களை எடுக்கும் என்றும் பிரதேச அபிவிருத்திகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை கையாள்வது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளான தாங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹரீஸ்,

 கல்முனை தமிழ் முஸ்லிம் மக்கள் அவர்களது தேவைகள் அடிப்படையில் பிட்டும் தேங்காய் பூ போலவும் இருப்பதாகவும் பிரச்சனைகளை காரணம் காட்டி அரசியல் செய்ய முனைபவர்களே குறித்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னையும் மாற்றுப்போராட்டம் ஒன்றை செய்ய சிலர் கோருவதாகவும் அவ்வாறான குறுகிய எண்ணம் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்தார். 

பாரிய பிரதேசங்களை உள்ளடக்கிய கொழும்பு போன்ற மாநகர சபைகளை துண்டாட விரும்பாத சில அரசிய பிரமுகர்கள் கல்முனையை இனரீதியாக பிரிக்க முனைவது ஆச்சரியத்தை தருவதாகவும் தெரிவித்தார்.

உண்மையில் பல்வேறு அலகுகளாக பிரிவே வேண்டும் என இப்பிரதேச மக்கள் விரும்பினால் அதற்கு தான் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் இதய சுத்தியுடம் பேச்சுவார்த்தையூடாக அதனையும் செய்யத் தயார் என்றும் சரியான எல்லைகளை வரையறுத்து அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்றும் நிலத்தொடர்பற்ற எல்லை என்பது சாத்தியப்படாது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி வரும் போராட்டம் நாளை (13) திங்கட்கிழமை ஐம்பது நாட்களை எட்டுகிறது.

அதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பாரியமனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.

பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


ஊர்வலம் ஊர்வலமாக சுமார்  4000 பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் 
கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 வது நாளாக அப் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

இன்று சுமார் 4000 பொது மக்கள் பங்கேற்ற பேரணி வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகமனத்தை அடைந்தனர்.மிக நீண்ட நேரம் மக்கள் கோஷங்களை எழுப்பி பதாதைகளை தாங்கிய வண்ணம் வலம் வந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பது  தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள்போராட்டத்தில் கலந்துகொண்டமை ஏனைய மக்களையும் உணர்ச்சி வசப்படுத்திய து.


 


நூருல் ஹுதா உமர் 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வரிப்பத்தான்சேனை பிரதேச மத்திய குழு புனரமைப்பதற்கான முன்னேற்பாடு கூட்டம் இன்று வரிப்பத்தான்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஐ.நைசர் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.ஆசிக், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நசீர், வரிப்பத்தான்சேனை பிரதேச கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் மருத்துவ மாதுக்களின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை சர்வதேச மருத்துவ மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எம்.பாயிஸ், வைத்தியர்கள், தாதிய மேற்பார்வையாளர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள்,  சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் பலரும் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர். கல்முனைப் பிராந்திய வைத்திய அதிகாரி றிஸ்வின் அவர்கள் Online மூலமாக தனது வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்


வி.சுகிர்தகுமார் 0777113659  


 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபி;ர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


நூருல் ஹுதா உமர்

சமூகமாக முன்னேற வேண்டும் என்றால் இளைஞர்கள் தொடர்ச்சியாக அறிவைப்  பெருக்கிக் கொள்வதோடு ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலே தான் நாம் சமூகமாக முன்னேற முடியும் என அக்கரைப்பற்று அனைத்து  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்

பாலமுனை பிரதேசத்தில் இருந்து கிழக்கின் கேடயத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாக கொண்ட சமூகமாக நாம் வளர வேண்டும். அத்துடன் ஒருமைப்பாட்டுடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படுகின்றபோது நமது சமூகம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை பிரசவித்துக்கொள்ளும். அந்த முறையை கொண்டு வருவதே எங்களது முதல் பணியாகும் என்றார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.