Showing posts with label Daily Information. Show all posts



( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.


அதன் போது  பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சடங்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரிடமும் ஏற்பாடு தொடர்பாக கலந்துரையாடினார்.
அங்கு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.

ஆலய தர்மகத்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகன், அனைவரும் இணைந்து இப்பெரும் சடங்கை நடாத்த அழைப்பு விடுத்ததுடன் நன்றியுரையுமாற்றினார்.

இறுதியில் இவ்வருட திருக்குளிர்த்தி விஞ்ஞானம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊர்ப்பிரசித்தம் தொடர்பான பட்டய நிகழ்வு இடம்பெறும்

சடங்குப் பெருவிழா எதிர்வரும்  13ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன்   ஆரம்பமாகின்றது.

இச்சடங்குப்பெருவிழா  தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று   எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 

இரண்டாம் நாள் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
20ஆம் திகதி திங்கட்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் மாலை 3 மணிக்கு பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

மறுநாள்(21) செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 27ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
.

மேலும் இந்நிகழ்வில் கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கர்கள், பரிபாலன சபையினர், பொலிஸ் உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், காரைதீவு பிரதேசத்தில் இயங்குகின்ற அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர், ஊடககர்கள்,பொது அமைப்புக்கள், கழகங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாட்டின் தொழில்துறையில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்றனர். மற்றுமோர் வகையில் முறைசாறாத் தொழில்களில் அற்பணிப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதித்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது. அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம்; பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமும் கிடைப்பதில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.

பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான கூட்டம் 2021.02.25 அன்று கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் போது கருத்;துத் தெரிவித்த அஸீஸ்,  பிள்ளை வளர்ப்பு விடயத்தில் அதீத அக்கறை காட்டி ஒவ்வொரு தாய்மாரும் தங்களை சிறந்த நிர்வாகிகளாகவும், வாழ்க்கைத் துணைவனான கணவனின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்பட்டு தன்னை அறிவாற்றல்மிக்கவளாய் குடும்ப சூழலில் ஒரு பெண் எத்தகைய நிலையிலும் வாழப் பழகி;க் கொள்கிறாள். எமது நாட்டில் இன்று போதைப்பொருள் பாவனை சிறியோர் முதல் வயோதிபர் வரை மலிந்து காணப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தாய்மார்களே.

சொகுசு வாழ்க்கையில் விருப்பம் காட்டி எத்தனையோ வங்கிகள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெண்களை கடன்காரர்களாக ஆக்குகிறது. ஆடம்பரப்பொருட்களை கொள்வனவு செய்து அதனை மாதாந்த தொகையுடன் செலுத்த முடியாமல் எத்தனையோ பெண்கள் பரிதவிக்கின்றனர். பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது.
 
பெண்களுக்கான உரிமை இல்லாதவிடத்தில் மனித உரிமைகள் இருக்க முடியாது. மணமுடித்த கணவன் மனைவியையும், பிள்ளைகளையும் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும், குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண் அதனை நடவடிக்கைக்காக கொண்டு வருவதில்லையெனவும், கொரோனா தொற்று காலத்தின் போது வீட்டில் அனைவர்களும் முடங்கிக் கிடந்த போது பெண்ணானவள் இயந்திரம் போல் வேலை செய்து குடும்பச் சுமைகளுடன் உருக்குலைந்து போனதையும்  நாம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும், இவ்விடயங்களை பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள்  பொறுப்புடன் கையாள வேண்டும் என அஸீஸ் கருத்துத் தெரிவித்தார். 

 


“உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்து கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது குறைந்தது அதைப்போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்.” (குர்ஆன் 4:86)இஸ்லாமிய வாழ்வியல் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எப்படி முகமன் கூறவேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. அதுதான் “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) எனும் வாழ்த்து. வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் கட்டத்திலும், இன்பமான நேரங்களிலும், துயரத்தின்போதும் இந்த வாழ்த்தைச் சொல்லமுடியும். இது ஒருபுறம் வாழ்த்து, இன்னொரு புறம் பிரார்த்தனையும் ஆகும். மரணம் அல்லது நோய் பாதித்த வீட்டிற்குச் செல்லும்போதுகூட அங்குள்ளவர்களுக்கு நம்மால் ஸலாம் சொல்லமுடியும்.

ஏனெனில் அது ஒரு பிரார்த்தனையாகவும் இருப்பதால்.ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளரைப் பார்த்து “உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்” என்று சொல்லும்போது தெளிவான வாக்குறுதி ஒன்றையும் அளிக்கிறார்.அது என்ன வாக்குறுதி?“என் கைகள் மூலமாகவோ என் செயல்கள் மூலமாகவோ உங்களுக்கு எந்தத் தொல்லையும் அளிக்கமாட்டேன். சாந்தியும் அமைதியும் உங்கள் வாழ்க்கையில் நிலவ உதவியாக இருப்பேனே தவிர, ஒருபோதும் உங்கள் நிம்மதியைக் குலைக்கும் வகையில் தொல்லை தரமாட்டேன்.”அதனால்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: உங்களிடையே ஸலாமைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அது அன்பை வளர்க்கும்.”ஒருமுறை தோழர் ஒருவர் அண்ணல் நபிகளாரிடம், “மார்க்கத்தில் சிறந்த செயல் எது?” என்று கேட்டார்.

அதற்கு நபிகளார், “பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதும், அறிந்தவர்கள் - அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் - முகமன் கூறுவதும் ஆகும்” என்று கூறினார். மார்க்க அடிப்படையில் ஸலாம் கூறுவது நபி வழியாகும். ஒருவர் ஸலாம் கூறிவிட்டால் அதற்குப் பதில் அளிப்பது கடமையாகும். பதில் கூறாமல் இருப்பது குற்றமாகும். சிலர் நாம் ஸலாம் கூறினால் வாய் திறந்து பதில் கூற மாட்டார்கள். கையைத் தூக்கிக் காட்டுவார்கள் அல்லது தலையை மட்டும் அசைப்பார்கள். இது தவறாகும். நன்றாக வாய் திறந்து பதில் ஸலாம் கூற வேண்டும்.“அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) என்று மட்டும் கூறினால் பத்து நன்மைகள் கிடைக்கும். ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி’ (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்) என்று கூறினால் இருபது நன்மைகள் கிடைக்கும்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் அருள்வளமும் பொழியட்டும்) என்று கூறினால் முப்பது நன்மைகள் கிடைக்கும். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. (திர்மிதீ, அபூதாவூத்) இரண்டு நண்பர்கள் அல்லது இரண்டு சகோதரர்கள் சண்டை போட்டுக்கொண்டு நாள் கணக்கில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்பார்கள். “இத்தகைய கோபதாபங்களை எல்லாம் மூன்று நாட்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள். சண்டை போட்டுக்கொண்ட இரு சகோதரர்களில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே இறை வனின் பார்வையில் சிறப்புக்குரியவர்” என்று கூறுகிறது  இஸ்லாமிய வாழ்வியல்.  இறைத்தூதர் காட்டிய இனிய வழியில் அனைவருக்கும் ஸலாம் சொல்லி இறைவனின் அருளைப் பெறுவோம். மனிதர்களின் அன்பையும் பெறுவோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

RELATED STORIES:

>

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.