Showing posts with label Eastern. Show all posts

#Rep/PottuvilSiyaath 

பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொத்துவில் -5 கிராமத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற கிராம சேவையாளர் அபுல் ஹசன் அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று அல்-பஹ்ரியா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையானது, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலை என்பவற்றின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்திருந்த, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விஷேட விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில், வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் (01.12. 2023 ) இடம்பெற்றது.

இதன்போது நிந்தவூரைச் சேர்ந்த அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை, மதினா வித்தியாலயம், அரபா வித்தியாலயம், மினா வித்தியாலயம், இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் மற்றும் அட்டப்பளம் விநாயகர் வித்யாலயம் ஆகிய பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் பங்குபற்றியதோடு, நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் பொலிஸ் நிலைய பிரதிநிதிகளும், பிரதேச செயலக பிரதிநிதகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர் 


காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாவடிப்பள்ளி மேற்கு பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250,000 பெறுமதியான அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு திறந்து வைத்து பயனாளியிடத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் கலந்து கொண்டதுடன், மேலும் விசேட அதிதியாக காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் அவர்களும் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாவடிப்பள்ளி பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

 (வி.ரி.சகாதேவராஜா)


 

பொதிகளில் மிளகாய்ச் செய்கை செய்யும் முறைமையை ஊக்குவிக்கும் வகையில் காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில்
கூட்டு விளம்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

காரைதீவு விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி எஸ்.நிலக்க்ஷியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று  வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் , கௌரவ அதிதியாக விவசாய போதனாசிரியர் ஜே.எம் . பாஸில் ஆகியோர் கலந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

 விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் பேசுகையில்..

பொதிப் பயிர் செய்கையானது நிலம் அற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். எமது பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளம் கடும் வறட்சி என்பவற்றால் மாறி மாறி வரும் அனர்த்தங்களால்  பயிர் செய்கை பாதிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை குறைக்கும் வகையிலும் நிலமில்லாத பிரச்சினை தீர்க்கும் வகையிலும் இப் பொதிப் பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக நகர மாடி வீடுகளுக்கு ஏற்ற முறையாகவுமுள்ளது.
எனவே விவசாயிகள் இத்தகைய புதிய முறைகளையும் பின்பற்றி வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

விவசாயிகள் பங்கேற்ற இந் நிகழ்வின் இறுதியில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 


பாறுக் ஷிஹான்




அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு  மாவீரர் துயிலும் இல்லம் அருகே  மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது.


நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி  முறியடிக்கப்பட்டு  அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டபடி கடும் மழைக்கும் மத்தியில் கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தின் அருகில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

என்றுமில்லாதவாறு   அதிகளவான பொலிஸார்  குவிக்கப்பட்டிருந்தனர் . அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொலிஸாரின் வாகனங்களை காணக்கூடியதாக இருந்தது.

கஞ்சிகுடிச்சாறு  மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி என்பதால் அஞ்சலி செலுத்த வந்தவர்களை  பொலிஸார்  உள்  நுழைய அனுமதிக்கவில்லை .

இதன் போது அப்பகுதியில் இருந்த பொலிஸாருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தின் அருகில்  பொலிஸாரின்  அடக்கு முறைகளுக்கு மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று  தங்களுடைய உறவுகளை சுடர் ஏற்றி  நினைவு கூர்ந்தனர்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கவீந்திரன் கோடீஸ்வரன் குழுவினரையும்  பொலிஸார்  உள்  நுழைய அனுமதிக்கவில்லை.  இதனை தொடர்ந்து துயிலும் இல்லம் அமைந்துள்ள காணிக்கு முன்பாக  அஞ்சலி செலுத்தப்பட்டது .  


நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தில் அதிகளவு பொலிசார் , கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்பன முன்னெச்சரிக்கையாக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இது தவிர குறித்த நினைவேந்தலுக்கான கல்முனை பகுதியில் இருந்து பஸ் வண்டியில் வருகை தந்த மக்கள் அக்கரைப்பற்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும்  அடக்கு முறைகளுக்கு  அடி பணியாது தமிழ் மக்களின் நினைவு கூறும் உரிமை தற்போது  நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் எமது மக்களின் உரிமையை மதிக்காத வரை எவ்விதத்திலும் இணக்கப்பாடு ஏற்படாது என்றதுடன் பொலிஸாரது  அச்சுறுத்தல்களை கடந்து   சுடரேற்றுவதற்கான  முயற்சியினை எமது மக்கள் மேற்கொண்டிருந்தமை வரலாற்று பதிவாகும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


(B.M.பயாஸ்)

ஜனாதிபதி விருதுபெற்ற பஹிமா சுக்ரிக்கு சிறந்த தொழில் முயற்சியாளருக்கான மற்றுமொரு விருது.
அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தவிசாளர் உணைஸ் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கை சாதனை மன்றம் நடாத்திய விருது வழங்கல் விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
பல்துறைகளில் உள்ள சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
கைத்தொழில் அதிகாரசபையின் வியாபார மேம்படுத்தல் உத்தியோகத்தர் நா.கோகுலதாஸ் இன் வழிகாட்டலில் சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
காத்தான்குடியை சேர்ந்த பஹிமா சுக்ரி (SF மொடலிங் & கார்மண்ட் ) மற்றும் அக்பர் முஹம்மட் உனைஸ் (அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனம்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவம், புத்தாக்கம், பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதிஉச்ச கடமை என பல்துறைகளில் உள்ள ஆளுமைகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர், கலாநிதி. மது கிருஷ்ணன் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் AUGP / UNUGP USA இன் தலைமை அதிகாரியும் தலைவர் நிறுவனர்,
கலாநிதி பினா காந்தி தியோரி
(துணை இயக்குநர் சார்க் ஆராய்ச்சி
கலாச்சார மையம் - ஸ்ரீலங்கா),
பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், இலங்கை அழகி வியானா பீட்டர்ஸ் மற்றும் இலங்கை சாதனையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


#Reports/Maathaven

 அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையின் ஊழியர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில்,உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான, சிநேகபூர்வ சைக்கிள் சவாரி இடம்பெற்றது.

குறித்த இந்தச் சவாரி, ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து ஒலுவில் வரைச் சென்று மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நோக்கி விரைந்தது.

குறித்த இந்தச் சைக்கிள் சவாரியில், வைத்திய அத்தியட்சகர் உட்பட, ஏனைய வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




 ( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை   ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின்  சுகாதார உதவியாளர்களுக்கான "அவசர உயிர் காப்பு" செயன்முறை  பயிற்சி பட்டறையானது  வைத்தியசாலையின்  கேட்போர்கூடத்தில் நேற்று முன்தினம் (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சி பட்டறையில் வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்.இரா. முரளீஸ்வரன், மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி,  வைத்திய அதிகாரிகள், இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை சிற்றூழிய மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் , மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி மற்றும் அவருடைய  வைத்திய உத்தியோகத்தர்கள் குழுவினரும் இணைந்து  செயற்கை மனித உடல் மாதிரிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்களும்   வழங்கப்பட்டன.


நூருல் ஹுதா உமர்

கிழக்கின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான கல்முனை சாஹிறாக் கல்லூரியின் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவன் எம்.டீ.எம். அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்து கல்லூரியின் புகழை மிளிர வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் யூனடெட் நேஷன்ஸ் அஸோஸியேஷன் கவண்ட்ரி கிளையினால் நடத்தப்பட்ட சர்வதேச நிகழ்நிலை மூலமாக கட்டுரை போட்டியில் "அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு" எனும் துணைப் பொருளில் ஆங்கில மொழி மூலம் கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றிய இம்மானவன் சர்வதேச ரீதியில் 15-17 வயது பிரிவில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினை பெற்று இச்சாதனையை படைத்துள்ளார்.

இம்மானவனின் இச்சாதனைக்காக சர்வதேச தரத்திலான சான்றிதழும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான பண பரிசினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் யூனடெட் நேஷன்ஸ் அஸோஸியேஷன் கவண்ட்ரி கிளையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இச்சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அவரது பெற்றோருக்கும், கல்லூரியின் முதல்வர் எம். ஐ.ஜாபீர் அவர்களுக்கும், இணைபாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எச்.எம். அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் தரம் பதினொன்றின் பகுதி தலைவர் ரீ.கே. எம். சக்கீர் அவர்களுக்கும் ஏனைய வழிகளில் உதவி புரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. 

 


பொத்துவில் ஆத்திமுனை கிராமத்திற்குள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.


இதே வேளை இன்று அதிகாலை ஆத்திமுனை ஹிஜ்ரத் நகரத்திற்குள் உட்புகுந்த காட்டு யானை பல் வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள அல்-ஸபா பள்ளிவாயலின் வேலியையும் உடைத்துள்ளதாக பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


 இப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்குள் பல் வேறு பகுதிகளிலிருந்து அகற்றப்படும் திண்மக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்.


இக் குப்பை மேட்டில் குவிந்து காணப்படும் திண்மக்கழிவுகளை உட்கொள்வதற்காக குவியும் யானைகள் அப் பகுதில் உள்ள விவசாய பயிர்களையும் மற்றும் பயன்தரும் மரங்களையும் சேதமாக்குவதுடன் வீதியால் பயணிப்பவர்கள் மற்றும் அதனை அன்மித்த பிரதேசங்களில் வசித்து வரும் மக்களையும் அச்சுறுத்தி வருவகின்றது.


இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பிரதேசத்திற்குள் நுழைந்து குடியிருக்கும் வீடுகளையும் தாக்கி சேதமாக்கி வருவதாக பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன்  குறித்த திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரையும் அண்மையில் தாக்கி பலியாக்கியுள்ள சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தனர்.


இவ்வாறு அண்மையில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றையும் முழுமையாக சேதமாக்கியதுடன் பொது மையவாடியின் வேலிகளையும் தாக்கி சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டில் காட்டு யானைகளினால் இப் பகுதியில் அதிகாமன சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த பகுதியில் உள்ள மர்வா பாடசாலையிலும் அன்மைக் காலத்தில் பல சேதங்களை ஏற்படுத்தியதுடன் பாடசாலை வளாகத்திற்குள் சென்று அட்டகாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இது சவாலாகவே அமைவதாக சுட்டிக்காட்டினர்.


எனவே இதனை கருத்திற் கொண்டு இக் கிராமத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில்  யானை வேலிகளை அமைத்துதரும்படி கிராமவாசிகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


-பொத்துவில் சியாத்-


 (வி.ரி.சகாதேவராஜா)


பாரிய மாமரம் ஒன்றை அடியோடு முறித்து வீழ்த்தியது காட்டு யானை.

இச் சம்பவம் சம்மாந்துறையை அடுத்துள்ள கந்தன்வெளி  வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த இராஜநாயகம் ரமேஷ் என்பவரின் கந்தன்வெளி வயலில் இருந்த பாரிய மாமரமே இவ்விதம் முறித்து வீழ்த்தப்பட்டது.

 அத்தோடு அவரது விதைக்கப்பட்ட வயலும் யானை திரிந்ததால்  சேதத்துக்குள்ளானது.

இவ்வாறு காட்டு யானையின் அட்டகாசம் தினமும் அந்த பகுதியிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் அச்சத்துடன் விதைப்பில் ஈடுபட வேண்டி இருக்கின்றது.

 


#PottuvilSiyaath

கிழக்கு மாகாண  பிரதம  உள்ளக கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir ஓய்வு பெற்றார். ************************************** Accontant றஸீட் என எல்லோராலும் அழைக்கப்பட்ட கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir தனது 60 வயதில்  39 வருட அரச பணியை நிறைவு செய்து கடந்த 10.11.2023 அன்று ஓய்வு பெற்றுள்ளார் .ஆசிரியராவும் ,பல்வேறு திணைக்களங்களில்  கணக்காளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண உள்ளக பிரதம கணக்காய்வாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.


 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் ஏற்பாட்டில் பிராந்திய வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான "Basic Life Support and First Aid" தொடர்பான பயிற்சி செயலமர்வு (11) பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியானது பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்சாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

 பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர் உரையாற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பிரதானியும், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான டொக்டர் ஆர்.ராஜவர்மன் வளவாளராகக் கலந்துகொண்டு மூச்சுத்திணறல், மயக்கம், அதிர்ச்சி, மாரடைப்பு, எலும்பு முறிவு, நீரில் மூழ்குதல், விஷக்கடிகள், வலிப்பு, எரிகாயங்கள், தலையில் காயங்கள் ஏற்படும் பாரதூரமான நிலைமைகளின்போதும், ஆபத்து நிலைமைகளின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி வழங்குவது தொடர்பில் செய்முறைப் பயிற்சிகளின் ஊடாக விரிவுரையாற்றினார்.





வி.சுகிர்தகுமார் 0777113659 



 


  திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று(10) இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று பனங்காடு எனும் பிரிவைச்சேர்ந்த ரவீந்திரன் டிசாலன் எனும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் கடந்த வருடம் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கல்வி பயின்று பரீட்சைக்கு தோற்றிய 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் எதிரே வந்த கல் ஏற்றிய லொறி ஒன்றுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு (10) 11 மணியளவில் உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய லொறியும்; மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்
அன்மைக்காலமாக விபத்துக்கள் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருவதுடன் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் செயற்படவேண்டியுள்ளமையும் சுட்டிக்காட்டுகின்றது.

 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான பெற்றோரினால்   அமைக்கப்பட்ட  கல்லாசனங்களுடன்  ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரினால்   அமைக்கப்பட்ட குறித்த  ஓய்வு நிழல் குடை வழங்கும்  நிகழ்வு இன்று (10)  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில்  இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள்  மாலை அணிவிக்கப்பட்டு   அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன்  அமைக்கப்பட்ட  ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. 

பின்னர் தொடராக  இடம்பெற்ற  நிகழ்வில் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.குறித்த வரவேற்புரையினை தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் நிகழ்த்தினார்.

இதன் போது பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

எமது பாடசாலையின் தேவைகளின் ஒன்றாக இருக்கின்ற மாணவர்களின் ஓய்வு நேரங்கள் மற்றும் பாடசாலை நிறைவடையும் நேரங்கள், பாடசாலை இடைவேளை நேரங்கள் மற்றும் எமது பாடசாலைக்கு வருகை தருகின்ற பெற்றோர்கள் இருப்பதற்கும் இந்த இருக்கையுடன் கூடிய நிழற்குடையை  இங்கு கல்வி கற்கின்ற மாணவி ஒருவரின் தந்தையான மௌலவி ஒருவர் மரணித்த  தனது தாயின் பெயருடன்   ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்திருக்கின்றார்.இவ்வாறான  செயற்பாடுகள் ஏனையோருக்கு சிறந்த எடுத்து காட்டாகும் என்றார்.

இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பெற்றோரின் நன்மதிப்பும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தொடர்பில் சிறப்பாக உரையாற்றினார்.


இந்நிகழ்வில் அதிதியாக மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்  பாடசாலை பிரதி அதிபர் ஏ.எஸ். சலாம்    உதவி அதிபர் திருமதி இ.றினோஸ் ஹஜ்மீன் யு.எல். ஹிதாயா   பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர்  பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்    நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் சுபைதா அவர்களின் நினைவாக அவர்களின் மகன் மௌலவி எஸ்.எம் நிம்ஸாத் மற்றும் அவரது பாரியார் எஸ்.எச். மிஹ்றூன் நிஷா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கல்லாசனங்களுடன்  ஓய்வு நிழல் குடை அமைக்கப்பட்டிருந்ததுடன் இன்றைய நிகழ்வில்  அதிதியாக கலந்து சிறப்பித்த  மௌலவி எஸ்.எம் நிம்ஸாத்   பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னமும்  வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


பலஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்ப்பாட்டமும், துஆப்  பிரார்த்தனையும், இன்று இடம்பெற்றது


பாறுக் ஷிஹான்


யானை மற்றும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகள்  கையளிப்பு
பணிப்பாளர்  ஊடகவியலாளர்  எம்.ரீ.எம்.பாரிஸின்  மூலம் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் உதவிப்பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சீ. அஹம்மட் நஸீல் ,சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன்  கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த உதவிப்பிரதேச செயலாளர்கள், " இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறான உதவிகளை தனது சொந்த நிதியிலிருந்து மேற்கொண்டு வரும் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா சமூக நல்லிணக்கத்தின் ஒரு சிறந்த முன்மாதிரி" எனத் தெரிவித்தனர்.

அவருக்கும் இவ்வாறான பணிகளை ஒருங்கிணைத்து தந்த ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் பாரிஸ் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் " இவ்வாறான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தியாகி ஐயா தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கான முயற்சிகளை அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

 பணிப்பாளர்  ஊடகவியலாளர்  எம்.ரீ.எம்.பாரிஸின்  மூலம் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் உதவிப்பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சீ. அஹம்மட் நஸீல் ,சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன்  கையளிக்கப்பட்டது.


இதன் போது கருத்து தெரிவித்த உதவிப்பிரதேச செயலாளர்கள், " இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறான உதவிகளை தனது சொந்த நிதியிலிருந்து மேற்கொண்டு வரும் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா சமூக நல்லிணக்கத்தின் ஒரு சிறந்த முன்மாதிரி" எனத் தெரிவித்தனர்.

அவருக்கும் இவ்வாறான பணிகளை ஒருங்கிணைத்து தந்த ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் பாரிஸ் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் " இவ்வாறான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தியாகி ஐயா தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கான முயற்சிகளை அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்செயலாளரும்,ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான றகுமத் மன்சூர் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டம் சவளக்கடை 06ம் கிராமம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ரஹ்மத் மன்சூரின் கல்முனை அலுவலகத்தில் நேற்று இரவு (08)புதன்கிழமை இடம்பெற்றது.

 இதன்போது ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தேவைகள் மற்றும் சவளக்கடை 06ம் கிராமத்தின் கல்வி நிலை அதன் செயற்பாடுகளையும் ரஹ்மத் மன்சூர் கேட்டறிந்து கொண்டதுடன்,ஜனாஸா நலன்புரி சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார். 

 ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் ஏ.எம்.சீறாஸ், ஜனாஸா நலன்புரி சங்க செயலாளர் ஏ.எம்.அஸ்மீர், சவளக்கடை 6ம் கிராமம் பிலால் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளரும்,ஜனாஸா நலன்புரி சங்க ஸ்தாபக தலைவருமான வை.பாரிஸ், 6ம்கிராமம் பிலால் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.ஐ.எம்.
முபீன்,ஜனாஸா நலன்புரி சங்க ஆலோசகர் எம்.ஐ.
யுனைதீன்,ஜனாஸா நலன்புரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொன்டனர்.

இச்சந்திப்பின் போது முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்
செயலாளரும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் சவளக்கடை 6ம் கிராமத்திற்கு தனிப்பட்ட முறையில் பள்ளிவாசல் மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்ட சேவைகளை நினைவு கூர்ந்து பிரதேச மக்கள் சார்பாக ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்தனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தும் இரத்ததான நிகழ்வானது( குருதிக்கொடை)  இவ் வருடமும் களுவாஞ்சிக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது நேற்று புதன்கிழமை (08.11.2023) மு.ப  8.30 மணி தொடக்கம் பி.ப 5.000 மணி வரை  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை  மற்றும் வழிகாட்டுதலில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

விளையாட்டு கழகங்கள், இளைஞர்  கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும்  பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர் .

இவ் இரத்ததான நிகழ்வானது  பிரதேச செயலக  நலன்புரிச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன்  தொடர்ச்சியாக 6வது தடவையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.