Showing posts with label SriLanka. Show all posts



 நாகலகம் தெருவில் உள்ள களனி கங்கையில் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது ↘️ நீர்ப்பாசனத் துறையின் கூற்றுப்படி.


பெரும்பாலான ஆறுகள் இப்போது சாதாரண மட்டத்தில் உள்ளன, மேலும் பெரிய மற்றும் சிறிய ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை சீராகக் குறைந்து வருகிறது ↘️.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் 

 


திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.


 


மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.


 


நூருல் ஹுதா உமர்
நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக திரள்வது அதிகாரிகளின் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாவடிப்பள்ளி மற்றும் கிட்டங்கி போன்ற பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக சரிந்து விடாத நிலையில், நதிக்கரைகள், பாலத்தடைகள், ஆறு கரைகள் போன்ற இடங்களுக்கு மக்கள் மிக அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், வெள்ளநீர் வடிந்தோடும் இத்தகைய இடங்களின் அடிப்பகுதியில் ஆழ்ந்த பள்ளங்கள் உருவாகியிருக்கலாம், மணல்வரடு தளர்ந்திருக்கலாம், திடீர் நீரோட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சிலர் குடும்ப சகிதம் வாகனங்களுடன் வெள்ளப்பாதைகளுக்கு நெருக்கமாக செல்வதும், ஆற்றங்கரையில் நிற்கும் பாதைகளில் தங்குவதும் சறுக்கி விழும் அபாயத்தை அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும் முயற்சியால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது அபாயத்தை ஏற்படுத்தும் செயல் என பாதுகாப்பு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் சுற்றுலா பயணிகள் போல படையெடுத்து வருகிறார்கள்.

வெள்ள நீர் வழிந்தோடும் எந்தப் பகுதியிலும் தேவையற்றுச் செல்ல வேண்டாம் என்றும் ஆறு/ஏரி கரைகள், உடைந்த தடைகள், பாலங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை இத்தகைய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இருக்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பொதுமக்கள் தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுமாறு மக்களை பாதுகாப்பு படை கேட்டுக்கொண்டுள்ளது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை  கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.

 மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

கல்முனையின் கரையோர கடல் பகுதிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

குறிப்பாக  பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது. 

கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகிறது.
 மீனவர்களது. மீன்பிடி படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன. கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு பெரிய நீலாவணை பொலீசார். மக்களை அறிவுறுத்துவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று கல்முனையில். மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம். சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வெள்ள. நிலையும் தொடர்கிறது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை  விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்ட மீட்புக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரையும் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மீட்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திட்க்கு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் போன்றோர்களும் விஜயம் செய்திருந்தனர். மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 .


(சுகிர்தகுமார்)


அக்கரைப்பற்று அலிக்கம்பை பிரதான வீதியில் உள்ள தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் அப்பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் அலிக்கம்பை பிரதான குடிநீர் இணைப்பு குழாய் வெள்ளத்தினால் அள்ளுண்டதனால் குடிநீர் இணைப்பும் தடைப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த காற்றுடனான மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளம் பாய்ந்து வருவதால் பிரதான வீதிகள் சில போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அம்பாரை பிரதான வீதியில் அதிகாலையில் வீழ்ந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
இதேநேரம் வெள்ளம் புகுந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் இடப்பெயர்ந்தும் வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஆயினும் வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக இருந்த பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரங்களை நீர்ப்பாசன திணைக்களம் கனரக வாகனத்தின் உதவியோடு அகற்றி வருகின்றது.
வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் 135 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 24 குடும்பங்கள் இடப்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

 


தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம்  (25) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

 

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

 

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.

 

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம்(24)  வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

 

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.

 

இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.

 

பெயர் பதாகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ்பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்கமுடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக்கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தது.

 

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேசசபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

 


இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து. இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

வீரமுனை செய்தியாளர்

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஏதென்ஸில் நடைபெறும் 2025 ஐரோப்பிய தன்மை செலவு பகுப்பாய்வு சங்கத்தின் (SBCA) மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிற்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான எம்.எச்.எம். இஸ்மாயில் இன்று முதல் காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையேற்றார்.

இன்று (25) முதல் 05.12.2025 வரை காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையாற்ற தனது பொறுப்புகளை காரைதீவு பிரதேச சபை செயலாளர் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான அறிவித்தலை முறையாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு காரைதீவு பிரதேச சபை தெரியப்படுத்தியுள்ளது.

 


வி.சுகிர்தகுமார்    


அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்று முதல் ஆரம்பித்த பலத்த மழை இன்று (25) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மரமொன்றும் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவி;ற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான பனங்காட்டு பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாசவின் பணிப்பின் பேரில் வெள்ளத்தை வடிந்தோடச் செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சுகாதார குழுவினரால் வெள்ள அபாயத்துடன் தொடர்பான சிறப்பு களவிஜயம் இன்று 2025.11.25  மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்திருப்பதை கருத்தில் கொண்டு, குறிப்பாக நிறைமாத கர்ப்பிணிகள், வயோதிபர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், சாய்ந்தமருது பிரதேச செயலாளருடன் ஒருங்கிணைந்த கலந்துரையாடலின் பின்னர், மக்கள் பாதுகாப்பாக தங்கக்கூடிய  வகையில் அல்-ஹிலால் பாடசாலை  தற்காலிக பாதுகாப்பு முகாமாக தெரிவு செய்யப்பட்டது. தேவையான தங்குமிடம், சுகாதார வசதி, குடிநீர், சுத்தம், பாதுகாப்பு ஆகியன உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பாதுகாப்பு முகாமில் பொதுமக்கள் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எந்தவித சுகாதார பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் அடிப்படை மருத்துவ சேவைகள், அவசர சிகிச்சை வசதிகள், மருந்துகள், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கள விஜயத்தின் போது, வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்கள் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்வதன் அவசியம்  குறித்து சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் முக்கிய ஆவணங்கள், குழந்தைகளின் தேவைகள், அவசர மருந்துகள், குடிநீர், உலர்ந்த உணவு போன்றவற்றை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகைக்கு நேற்று (23) காலை 6.00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளாதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதன் காரணமாக இப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அவ் வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் தாழ்வான பகுதிகளில் பயணிப்பதை தவிர்ப்பதும் சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வெள்ள அபாயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 




 பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.


பஸ் கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துகின்றன.


முதற்கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இணைந்தார்.

இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை அவர் கரம்பிடித்தார்.

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்.


மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (21) கிடைத்தது.


ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில், பெறுமதிமிக்க மரக்கன்றுகளும் நிறுவனத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.


ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட விரிவுரையாளர் கிம்ஹான் சூரியபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் பதிவாளர், களுவாஞ்சிகுடி பொலிசாரால் . நீதிமன்ற  காப்பகத்திலிருந்த சுமார் 1 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட  நகைகள் காணாமல் போனதை அடுத்து 20.11.2025 அன்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

குறிப்பிட்ட நகைகள் அனைத்தும் வழக்குகளுடன் தொடர்புடையாதாகும். குறிப்பிட்ட நகைகள் நீதிமன்ற  சான்றுப் பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபரான பதில் பதிவாளரின் சொந்த ஊரான வாழைச்சேனைக்கும் சென்று களுவாஞ்சிக்குடி பொலிசார்  இன்றைய தினம் விசாரணைகளை  மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. 

விசாரணைகளின் பின்னர், இவர் இன்று மாலை களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி திரு.பிரதிபன் முன்னிலையில், களுவாஞ்சிக்குடி பொலிசாரால், ஆஜர் படுத்திய வேளையில் குறித்த பதிவாளரை டிசம்பர் மாதம் 5 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற கௌரவ நீதிபதி இன்று கட்டளை பிறபிப்பித்தார்.



 *மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு* 


தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 21.11.2025ஆந் திகதி  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி TJ பிரபாகரன் ஐயா தீர்ப்பளித்துள்ளார்.


குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று  கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.


குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர், சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்.

குற்றவாளி சார்பில் சட்டத்தரணி.பிரகாஸ் ஆஜரானார்.

 


"முழு நாடும் ஒன்றாக " என்ற தலைப்பிலான தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தென் மாகாணத்தில் இன்று (20) ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. 

 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் பாதுகாப்பு படையினருக்காக தாம் துணை நிற்பதாகத் தெரிவித்தார்.

 

 


( வி.ரி. சகாதேவராஜா)


"மக்கள் வரிப்பணம் மக்களின்     அபிவிருத்திக்கு"
 என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக
நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட  பணிகள் இன்ட (20) வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 

ஏலவே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன்   நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நடாத்திய நேரடி சந்திப்பின் பயனாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அதன் போது கடந்த முப்பது வருடங்களாக போக்குவரத்துக்கு சிரமமாக இருந்த பழைய உஹன வீதியை செப்பனிட்டுவதற்கான திட்ட வரைவுகள் கையளிக்கப்பட்டது.

.இதன் பலனாக நேற்று அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பழைய உஹன வீதிக்கு 10369413.50 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.