Showing posts with label North Western. Show all posts

 


புத்தளத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மின்சாரம் தடைப்படுவதை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.


புத்தளம் தில்லையடி, ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி, பாலாவி, நாகவில்லு , மதுரங்குளி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆம் நிகதி முதல் மின்சாரத் தடை ஏற்படுகின்றது

 


மூத்த ஆசிரியரும், புத்தளம் ஆசிரியர் வாண்மை நிலையத்தில் பல வருட காலம் முகாமையாளராக கடமையாற்றிய எம்.எச்.எம். நவாஸ் ஆசிரியர் கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வு புத்தளம் வலய கல்விப்பணிப்பாளர் டப்லிவ்.பீ.எஸ்.கே. விஜேசிங்க தலைமையில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் (13) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள், பாட இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கலந்து சிறப்பித்தனர். இதன் போது 41 வருட காலம் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் எம்.எச்.எம். நவாஸ் ஆசிரியருக்கு புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் பொன்னாடை அணிவித்து, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.


 


வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹுமைட் அல் தமீமி அவர்களினால், பெரோஸா முஸம்மில் அம்மையாரின் தலைமையில் இயங்கும் 'காந்தா சவிய' மகளிர் அமைப்பிற்குத் தையல் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மகளிரை ஊக்குவிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் பெறுமதியான குறித்த தையல் இயந்திரங்கள், குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் 'காந்தா சவிய' மகளிர் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 23 வரிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹுமைட் அல் தமீமி, 'காந்தா சவிய' மகளிர் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பித்தனர்.  

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு நாடும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுக்காப்பு காரணமாக அனைத்துப் பாடசாலைகளும் சுமார் 4 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டது. 


அவ்வாறு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம், வடமேல் மாகாண றோயல் கல்லூரி, ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஹிந்து தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆராய, கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோது...

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது...

இந்தக் கலந்துரையாடலில் நகர பிதாக்கள், பிரதேச சபை தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், வடமேல் மாகாண பிரதான செயலாளர், மாவட்ட செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தத் தருணத்தில் எமது நாடு மட்டுமன்றி முழு உலகையும் கவலையில் ஆழ்த்தி கொவிட்-19 எனும் கொடிய தொற்றுநோய் பலரின் உயிரைக் காவுகொண்டு, முழு உலகிற்கும் பாராதூரமான தீங்கினை விளைவித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கொடிய பேரழிவொன்று தலைதூக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அக்கொடிய வைரஸிலிருந்து ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும், இலங்கை மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான மகத்தான பொறுப்பை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அது தொடர்பாக வடமேல் மாகாண ஆளுநர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றிகளை வடமேல் மாகாண மக்கள் சார்பாக அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் இத்தகைய அர்ப்பணிப்பானது எவ்வாறானதென்றால், உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்ற தரவுறுதி பெற்ற நாடுகளால்கூட நிறைவேற்ற முடியாத இந்தப் பயங்கரமான தொற்றுநோயிலிருந்து எமது நாட்டினையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாப்பதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில் தற்போது அவர் வெற்றியடைந்துள்ளார். அந்த வெற்றியானது எத்தகையது என்றால் இந்தக் கொடிய தொற்றுநோயினை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஐந்து நாடுகளில் ஒன்றாக எமது இந்தச் சிறிய தாய் நாடானது தற்போது உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ளமையானது எமக்குக் கிடைத்த விசேட வெற்றியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அதனால் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் இந்தப் பாரிய போராட்டத்திற்கு வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எங்களது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இதற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றி சிரமமான காலத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு நான் முழு வடமேல் மாகாண மக்களிடமும் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். இக்கொடிய வைரஸிற்கு நாம் வசிக்கும் வடமேல் மாகாணத்திலும் ஒரு பகுதி இரையாகியுள்ளமை தொடர்பாக உங்களது விசேட கவனத்தைச் செலுத்தியாகவே வேண்டும். வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த நாமும் இந்தப் பயங்கரமான வைரஸிற்கு இரையாகியுள்ளமையை நினைவுபடுத்துகின்றேன்.

தலைதுதூக்கியுள்ள இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வடமேல் மாகாண மக்கள் எவ்விதப் பிரச்சினைகளுமின்றி தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பற்றாக்குறைகளின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் செய்முறையொன்றினை நான் தயார்படுத்தியுள்ளேன். அவ்வாறே வடமேல் மகாண மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமையொன்றை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக, வடமேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து விசேட கொவிட்-19 தடுப்புச் செயற்றிட்டமொன்றையும் நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் அத்தியவசிய பணிகளை நிறைவேற்ற வேண்டி ஏற்பட்டால், அவற்றை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பாக நான் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும் தயாராகவுள்ளேன்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரச் சட்டதிட்டங்களை அவ்வாறே பின்பற்றித் தாமும் தமது குடும்பமும், அயலவரும் பாதுகாக்கப்படும் விதத்தில் செயற்படுமாறும் நான் வடமேல் மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதுபோன்றே, வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் இருப்பார்களாயின் அது பற்றிய தகவல்களை மறைக்காது சுகாதார அலுவலர்களிடம் வெளிப்படுத்தி தனிமைப்படுத்தலுக்கு நடவடிக்கை எடுத்து இப்பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவித்துக் கொள்வதற்கு ஒத்துழைக்குமாறும் தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இந்த கொடிய அச்சுறுத்தலிலிருந்து வடமேல் மாகாணத்தைக் காப்பாற்றி, உங்களுக்கு சிறந்த, ஆரோக்கியமான இடமாக வடமேல் மாகாணத்தை உருவாக்குவதனையே நான் இவையெல்லாவற்றிலிருந்தும் எதிர்பார்க்கின்றேன். இதற்காக, வடமேல் மாகாணத்தில் உள்ள உங்கள் அனைவரையும், நாட்டையும் தேசத்தையும் கொடிய கொரோனாப் பேரழிவிலிருந்து விடுவித்து ஒன்றிணைக்கவும், பலப்படுத்தவும் சாதி மத, குல, அரசியல் பேதமின்றிக் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!


ஏ.ஜே.எம். முஸம்மில்
வடமேல் மாகாண ஆளுநர்

#HassanSajith.
முஹம்மட் மன்சூர் பாத்திமா ஹப்ஸா சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்
செய்து கொண்டார். இவர் 13.02.2020 அன்று பிரதம நீதியரசர் முன்ணிலையில் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழத்தில் தனது சட்டக் கல்வியை மேற்கொண்ட இவர்
குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைத்துள்ள #எதுன்கஹகொட்டுவ முஸ்லிம் மத்திய
கல்லூரின் பழைய மானவியும், எதுன்கஹகொட்டுவ கிராமத்தின் முதல்
முஸ்லிம் பெண் சட்டத்தரணியும் ஆவார்.

.

புத்தளம் – மன்னார் பிரதான வீதி மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வண்ணாத்திவில்லு பழைய எலுவான்குளம் பகுதியில் உள்ள சம்பாத்துப் பாலத்தின் கீழ் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால், பாலத்தின் ஒரு பகுதியில் கலா ஓயாவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமித்து வைத்த நிலையில், இந்த பாலத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சேமித்து வைக்கப்பட்ட நீர் வெளியேறி வருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், எலுவான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், விவசாய நிலங்களுக்கு நீரை அனுப்புதலில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எலுவான்குளம் சப்பாத்துப் பாலத்தின் கீழ் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த பாலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால், புத்தளம் – மன்னார் பாதை உடனான சகல போக்குவரத்துக்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பாலத்திற்கு கீழ் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விவசாயிகள் ஆகியோரின் ஒத்துழைப்புக்களுடன் புத்தளம் பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இறால் குஞ்சுகளின் இனப் பெருக்கத்தினை அதிகரிக்கவும், அதனுாடாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுமென புத்தளம் ”வாணமீ” இறால் பண்ணையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்தனர்.

மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு நேற்றிரவு வாக்களிக்க வந்த முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒலியாமடுவில வைத்து தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இ.போ.ச சொந்தமான பஸ்களின் கண்ணாகெள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. பிரதான வீதிகளக்கு தடையை ஏற்படுததும் விதமாக மரங்களை வெட்டி வீதிகளில் குறுக்காக இட்டு போக்குவரத்தை தடை செய்யும் விதத்தில் பெரு மரங்கள் இடப்பட்டுமிருந்தன.

#Flood.
கலா ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக புத்தளம் மன்னார் வீதியில் சப்பாத்துப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இராயாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 4 தற்பொழுது திறக்கப்பட்டிருப்பதால் கலா ஓயாவின் நீர் மட்டம் 8 அடியினால் அதிகரித்திருப்பதாக புத்தளம் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பி.எ.ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கலா ஓயாவிற்கு அருகாமையில் இருந்த எழுவான்குளம் கடற்படை முகாம் மற்றும் வனஜீவராசி அலுவலகம் ஆகியவற்றை அந்த இடங்களில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவின் பின்னர், அந்த மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு எச்.எம்.டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்த வெற்றிடத்திற்காக தான் நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ஷாந்த பண்டார இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அநியாயக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட Dr. ஷாபி ஷிஹாப்தீன் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என சிஐடியினர் இன்று குருநாகல் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டி. பிடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந் நிலையில் வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின் போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என  சி.ஐ.டி.யினர் 70  சத்திர சிகிச்சைக் கூட தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளபோதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
“வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி மீதான விசாரணைகளுக்கு அரச தரப்பால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. அத்துடன், விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வைத்திய சரத் வீரபண்டாரவுக்கு இடமாற்றம் வழங்க சுகாதார அமைச்சு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியர் ஷாபிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.
தேரர்கள் உட்பட இரண்டாயிரதுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குருணாகல் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டு, தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


பெருமளவு மக்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை காணப்படுகின்றது.

குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (புதன்கிழமை) முதல் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நுகேகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவுக்கு அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் குளியாப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குளியாப்பிட்டிப் பொலிஸ் அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழுக்காக, புத்தளத்திலிருந்து
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமமொன்றுக்கு பிபிசி தமிழ் சென்றது.
இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய - துன்மோதர பிரதேசமாகும்.
முஸ்லிம்
இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள் அனைத்திலும் இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களே வாழ்ந்து வருகின்றனர்.
துன்மோதர பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வேளையில் முகங்களை மூடியவாறு சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி பிரவேசித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
துன்மோதர பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், தமது கிராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான நிஷ்தார் தெரிவிக்கின்றார்.
அதன்பின்னர், தமது கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கான குறுக்கு வழிகளை கண்டறிந்த முகங்களை மூடிய இளைஞர்கள், அந்த வழியாக தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்த வன்முறையாளர்கள், முதலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதனை சூழ்ந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
தமது சமூகத்தினர் நோன்பு துறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்த தருணத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
முஸ்லிம்
தாக்குதல் நடத்தப்படுவதனை அவதானித்து பிரதேச பெண்கள், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமத்திற்குள் அருகிலுள்ள காடுகளை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு காடுகளுக்குள் சென்ற பெண்கள், அதிகாலை வேளை வரை காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், அத்துமீறி பிரவேசித்தவர்கள், துன்மோதர பகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பல வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்து, கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆன்களையும் வன்முறையாளர்கள் தீக்கரையாக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கட்டடங்கள், வாகனங்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவமானது, பாதுகாப்புப் பிரிவின் முழுமையாக அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்பட்டதாக அந்த பிரதேச இளைஞரான நிஷ்தார் குற்றம் சாட்டுகிறார்.
பாதுகாப்பு பிரிவினர் குறித்த பகுதிகளில் இருந்த சந்தர்ப்பத்திலேயே தமது சொத்துக்களின் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் தாக்குதல் நடாத்தப்பட்டமையினால், தமக்கு பாதுகாப்பு பிரிவினர் மீதான நம்பிக்கை முழுமையாக அற்று போயுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புத்தளம் - நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்
புத்தளம் - நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியின் பாதுகாப்பு தரப்பினர் இருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குமாயின், அது பாரதூரமான குற்றம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், ராணுவ தளபதியின் ஆலோசனைகளை பெற்று, இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க தாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் ஏதேனும் தவறுகள் அல்லது குற்றங்கள் இழைக்கப்படுமாயின்; அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தமது கிராமத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முழுமையாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என நாத்தாண்டி - துன்மோதர பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி. அலவத்துவல ஆகியோர் இன்று (14) நேரில் சென்று பார்வையிட்டனர்.

கொட்டம்பாபிடிய பிரதேசத்துக்கு விஜயம்செய்த பிரதமர், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு சென்று அழிவுகளை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் குளியாப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளையும், மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனையவர்கள் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த பிரதமர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கலவரங்கள் ஏற்படலாமென்ற அச்சம் நிலவுவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அங்கு சமூகமளித்திருந்த பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் முதலில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரயோகிப்பதில் ஏற்பட்ட பலவீனமே நேற்றைய வன்செயல் நடவடிக்கைகள் உக்கிரமடைவதற்கு காரணமாக அமைந்ததென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கூட, தாக்குதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான வன்செயல்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்தளவு நிலைமை மோசமடைந்திருக்காது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதாகவும் பிரதமர் அங்கு உறுதியளித்தார். கடந்த வருடம் திகன மற்றும் அம்பாறையில் நடைபெற்ற சம்பவங்களின்போது இழப்பீடுகள் வழங்கிய அதே சுற்றறிக்கையின் பிரகாரமே, இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த துரதிஷ்டமான நிலைமை உரிய முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அத்துடன் மக்கள் அச்சமின்றி வாழவேண்டிய சூழ்நிலையொன்றை உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

இத்தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்ட தருணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பஸ் மற்றும் மோட்டார் வண்டிகளில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்தியதாக பிரதமரினதும் அமைச்சர்களினதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினார்கள்.

மேற்படி அசம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வந்து விடுவித்துச் சென்றதாகவும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை இந்த தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்னணியொன்றும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை காரணமாக வைத்து, ஆட்சி மாற்றமொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த குண்டர்கள் இவ்வாறான தாக்குதல்களை தொடுத்திருந்ததாக சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை சி.சி.ரிவி. கமெராக்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகள் மூலம் இனம்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற இடங்களில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.

ஆயுதங்களோடு வெளியூர் மக்களும் உள்ளூர் மக்களும் ஒன்றாக சேர்ந்து தங்களை தாக்கியபோது தாங்கள் அனுபவித்த மன வேதனைகளை பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோக்குகின்ற நோன்பை ஒழுங்காக நோற்க முடியாமல் செய்ய இத்தகைய விஷமிகளின் செயற்பாடுளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை தொடர்பில் கவலை தெரிவித்தனர்.

இத்தாக்குதல் காணொளிகள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சி.சி.ரி.வி. பதிவகத்தை (ஹார்ட் டிஸ்க்) சீருடைகளில் வந்தவர்கள் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். அவ்வாறான நிலைமைகள் மேலும் நிகழாது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக தமக்கு அறியத்தருமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இதில் இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான உட்பட வடமேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எச்.எம். ஜெஸ்மின் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் நேற்று அட்டகாசம் புரிந்துள்ளது.
முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சிலவற்றை இந்தக் கும்பல் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீண்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் மீண்டும் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்தே மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நேற்று இரவு முதல் குறித்த பகுதியில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை நீக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.