பல ஆயிரம் மக்கள் முன் தோன்றி ஈஸ்டர் வாழ்த்து கூறிய மறுநாளே சோகம்
போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
விளம்பரம்
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.
ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்
"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''
''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.
உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.
இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.
உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி
மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.
அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.
காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.
"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.
யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.
பவுன்சராக பணியாற்றிய போப்
பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.
சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.
இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.
வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.
வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.
உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.