Showing posts with label criminal. Show all posts

 


பாறுக் ஷிஹான்


30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும்  கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து வெள்ளிக்கிழமை(16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதுடன் 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்க கல்முனை அனுராதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் ஆடம்பர உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை   அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை  மாவட்ட    உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான  சம்பத் குமார,அசித ரணசூரிய  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான  அதிகாரிகள்   இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 தற்போது கைதான  சந்தேக நபர்கள்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில்  மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்)


ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80  மில்லி கிராம்  பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை(20)  கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு  போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


(சுகிர்தகுமார்) 


 அக்கரைப்பற்று 7/4 பிரிவில் 15 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கிய  நிலையில் மீட்க்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (09)மாலை இடம்பெற்ற நிலையில் மாணவன் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கில் தொங்கிய மாணவன் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவந்த நிலையில் சில நாட்களாக பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளதுடன் வர்ணப்பூச்சு வேலைக்கும் சென்று வந்துள்ளான்.
இவ்வாறு இருக்கையில் நேற்று சில நண்பர்களுடன் வெளியே சென்று வந்துள்ளதுடன் தந்தை வெளியே சென்று வந்ததையும் தேவையற்ற நண்பர்களின் நட்பை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பின்பாக அருகில் இருந்த அப்பம்மாவின் வீட்டில் தூக்கிட்டுள்ளதுடன் இதனை அவதானித்த உறவினர்கள் உடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது இவ்வாறிருக்க மாணவர்கள் மீதும் சிறிய வயதுடைய இளைஞர்கள் மீதும் இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகள் தமது வியாபாரத்தை மிகச்சூட்சுமமான முறையில் முன்னெடுத்துச் செல்வது அதிகரித்து வருகின்றமையும் அறிய கிடைக்கின்றது.
ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது உணர்த்தப்படுகின்றது.

 



யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்களும், 2 ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் வெட்டு காயங்களுடனும் மீட்பு. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
2

 


பாறுக் ஷிஹான்


கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என   நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரும் (PARL), மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று  விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் 

அம்பாறை மாவட்டத்தில் பல விவசாயிகளது நிலப் போராட்டங்களில்  என்னை இணைத்துக்கொண்டு  நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் மனித எழுச்சி அமைப்பின்   இயக்குநராகவும் செயற்பட்டு நான்   சிலருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற நிலையில்  கடந்த  ஏப்ரல் 5 ஆம் திகதி கல் ஓயா பெருந்தோட்டக் கம்பனியின் அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு  தகாத வார்த்தைகளால் பேசப்பட்டு மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளேன்.மொரவில் ஆறு பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன்  எமது  குழுவினர் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை   வன்மையாகக் கண்டிப்பதுடன்  மேலும் நில உரிமைகளுக்காகப் போராடும் ஆர்வலர்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  நாம் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தாக்குதலுக்கு உள்ளான தானும் தனது குழுவினரும் இரு நாட்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தோம்.


அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட விவசாயிகளது பாரம்பரிய நில உரிமை இழப்பு மற்றும்கரும்புப் பயிர்ச்செய்கை தொடர்பாக அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலையீடு செய்து வருவதுடன் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில பலமுறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி விவசாயிகள் இழந்த நிலம் தொடர்பான தகவல்களை சேகரிக்க நிஹால் அகமட் அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் தலைவர் பீ கயிருதீன் ஆலோசகர் எம் எம் எம் இப்திகார் மற்றும் விவசாயிகள் சிலரை உள்ளடக்கிய குழு குறித்த பிரதேசத்தில் களப்பயணத்தை மேற்கொண்டு சில பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகள் தொடர்பான முறைப்பாடுகளின்படி இழந்த நிலப் பிரதேசங்களை அடையாளம் காண சென்றிருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதே வேளை கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

2023 ஏப்ரல் 5 ஆம் திகதி சம்மாந்துறையில் உள்ள மொறவில் ஆறு பகுதியில் மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குனர் திரு. நிஹால் அஹமட், அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஆட்கள் உட்பட சுமார் இருபத்தைந்து நபர்களால் பல மணிநேரம் தாக்கப்படனர். இவ் சம்பவத்தினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (PARL) வன்மையாகக் கண்டிக்கிறது. திரு. நிஹால் அஹமட் PARL இன் முதன்மை உறுப்பினராகவும், அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான கூட்டணியின் இணைப்பாளராகவும், இலங்கையின் ஏழைகளது நில உரிமைகள் உட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளராகவும் பல வருடங்கள் செயல்பட்டு வருகின்றார்

PARL க்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 1950 ஆம் ஆண்டில், அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயிகள் பாரம்பரியமாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7250 ஏக்கர் நிலம் அப்போதைய அரசாங்கத்தால் கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டது. அரச சீனி கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியின் பாரம்பரிய நெல் விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டனர் கரும்பு பயிர்ச்செய்கைக்காக மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் கீழ் சிலருக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட மற்றும் விவசாயம் செய்வதற்கு நிலம் கிடைக்காத மற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது அவர்களின் வாழ்வாதார இழப்புக்கு எந்த நிவாரணமும் அல்லது தீர்வும் வழங்கப்படவில்லை. அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை, பாரம்பரிய நெல் விவசாயிகள் வெளியேற்றப்பட்ட நிலத்தில் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை நிறுவியது இந்த விவசாய சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது.  Hinguran அரச சீனி கூட்டுத்தாபனம் செயல்படுவதை நிறுத்தியது மற்றும் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதிகளில் நெல் பயிரிட்டனர் மற்றும் நெல் சாகுபடி அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது 2007 ஆம் ஆண்டு முதல், அரசாங்க தனியார் பங்காளியான கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நிலங்கள் நிர்வகிக்கப்பட்டன. இதில் அரசாங்கம் 51% பங்குகளைக் கொண்டுள்ளது நில பயன்பாடு முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரும்பு இப்பகுதியில் பயிரிடுவதற்கு பொருத்தமற்ற பயிராக இருந்ததாகவும், பயிரிடலில் ஏற்பட்ட தோல்வியால் பல விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் நிர்க்கதியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேற்குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 பாறுக் ஷிஹான்


லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது

லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம்   நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   பல  பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக  இன்று   மாலை  நிந்தவூர் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம்  ஆலோசனையில்  சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும்  உப பொலிஸ் பரிசோதகருமான  குணரட்ன, பொலிஸ்   விசேட புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால்  சுமார் 50க்கும் மேற்பட்ட லேகியம்  போதைப்பொருட்னள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது கைதான  73 வயது மதிக்கத்தக்க  சந்தேக நபர் உட்பட சான்று  பொருட்கள்    சட்ட நடவடிக்கைக்காக   நீதிமன்றத்தில ஆஜர்படுத்த  நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


பாறுக் ஷிஹான்


பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக   சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த    சந்தேக நபர் பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் வேளை  விமான நிலையத்தில் வைத்து   கைதானார்.அச்சந்தேக  வழங்கிய தகவல் ஒன்றிற்கமைய பொத்துவில் பகுதியில்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் இன்று குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் போது   கைதான   சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது 3 ஆவது மனைவி என கூறப்படும் பெண்ணின்  வீட்டில் இருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த  பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக  சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பனவற்றை பொலிஸ் மோப்பநாய் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பிற்கு விசேட அதிரடிப்படையின் உதவியும் பெறப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக  சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மீட்கப்பட்ட கார் பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகாக்கள் பயணித்த நிலையில் வேறு ஒரு குழுவினரால்  துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு தப்பி சென்று பொத்துவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அத்துடன்  வெளிமாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயலுக்கு பாவிக்கப்பட்டு குறித்த கார்  மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் மூவரும்  வெள்ளிக்கிழமை (23) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்களில் ஏற்கனவே சம்பவ தினமன்று 2 பேரும்  மற்றுமொருவர் விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.மற்றுமொரு சந்தேக நபர் தொடர்ந்தும் தலைமைமறைவாகவே இருந்து வருகின்றார்.அச்சந்தேக நபரை தொடர்ச்சியாக பொலிஸார் தேடி வருகின்றார்கள்.இச்சந்தேக நபர் தனியார் காப்புறுதி  அலுவலகம் ஒன்றில் பணியாற்றுவதாக கூறி வாகனங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளதுடன் இவ்வாறான போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில்   நீதிமன்ற அனுமதியுடன்    கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்டுள்ள காரின் பெறுமதி சுமார் 1 அரைக்கோடி ரூபா பெறுமதி மதிக்கத்தக்கதாகவும்  கார் தற்போது கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.அந்த கார் சம காலத்தில் பல நபர்களின் பெயரில் பதியப்பட்டுள்ள விடயம்  விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குறித்த கார்   வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா என்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இதே வேளை அடையாளம் காணப்பட்ட காரின் உரிமையாளரை கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர். 
இதேவேளை  காரின் கதவுகளை திறந்து பொலிசார் சோதனையிட்டதில்  சில சான்று பொருட்களை கைப்பற்றியுள்ளனர். எனினும்  கார் இன்னும் முழுமையாக சோதனையிடப்பட்டு முடியவில்லை.இது தொடர்பில்  கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப்  தலைமையில்  பொலிஸ் சார்ஜன்ட்களான எம்.எம்.எம். அன்வர்  (63037) பொலிஸ் கன்ஸ்டபிள்களான வை.நவராஜ் (8475) எம்.இஷாக்(76433) ராஜபக்ஸ ( 86765) எஸ்.தர்சீகன்(99058)ஆர்.ஹேமானந்த(99059)  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



சம்பவத்தின் பின்னணி 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு இரு வாகனங்கள் ஒரு சந்தேக நபர் 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன் 36 வயது சந்தேக நபரையும் கடந்த வருடம் டிசம்பர்  வியாழக்கிழமை(22) நள்ளிரவு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்திருந்தனர்.

இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதன் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் எவராயினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி வந்த 02 ஊழியர்கள் நிதிக்கையாடலில் ஈடுபட்டுள்ள விடயம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நான் ஆணையாளருக்கு வழங்கிய ஆலோசனைகளின் பிரகாரம் அவர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, நிதிகையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


குறித்த ஊழியர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி, முறைகேடுகள் எவையும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. 

அத்துடன் குறித்த நித்திகையாடல் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இவ்விடயம் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை குறித்த இருவரும் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், எவ்வாறாயினும் இவர்களைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை நான் வலியுறுத்திக் கேட்டுள்ளேன்.

குறித்த விடயம் நிர்வாக மற்றும் பொலிஸ் புலனாய்வு விசாரணைகளின் கீழ் இருப்பதனால் மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவது உசிதமல்ல எனக் கருதுகின்றேன்.

இவ்விடயத்தில் எவர் மீதும் கருணை காட்டப்பட மாட்டாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிதி மோசடியுடன் எவர் சம்மந்தப்பட்டிருந்தாலும் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.



அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செ
ய்யப்பட்ட,
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதிவேட்டறைக்கு தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க- அக்கரைப்பற்று நீதிமன்றின் பதில் நீதவான் கே.சமீம் உத்தரவு பிறப்பித்தார்.


(முந்தைய செய்தி)

 தீ வைத்தமை தொடர்பில் மூன்று பேர் நேற்று கைது.!!

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குழுவுடன் இயங்கி வந்த,

24 வயதுடைய ஒருவர் உட்பட 3 இளைஞர்களை ஹெரோயின் போதைப்பொருளுடன் புதன்கிழமை (டிச.28) நீலாவணை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை நீதிமன்ற கட்டிடத்திற்கு இனம்தெரியாதேரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுதுவந்தனர்.

இதன்போது நீதிமன்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமரா மூலம் நீதின்ற கட்டித்திற்கு முகமூடி அணிந்தவாறு,

3 பேர் நீதிமன்ற பகுதிக்குள் உள்நுழைந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையில் நீலாவணை பகுதில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளாவில் பகுதியைச் சேர்ந்த 24, 20, 17 வயதுடைய மூன்று பேரை சம்பவதினமான நேற்று  புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு 9 நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன் இவர் யாழ் ஆவா குறுப்புடன் அங்கிருந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும்,

அவரின் நண்பர்களான 20, 17 வயதுடைய அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணை
களை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.