Showing posts with label Eastren. Show all posts


 ( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் லயன் மதுரநாயகம் சுதர்சன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 கல்முனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் பல சமூக நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் வகிப்பவருமான எந்திரி லயன் எம்.சுதர்சன்  கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ எம் எம் ரியால் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஆரம்பக் கல்வியை காரைதீவு இ.கி. மிஷன் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கல்லடி சிவானந்த வித்யாலயத்திலும்  மட்டக்களப்பு  மத்திய கல்லூரியிலும் பூர்த்தி செய்தார்.
 மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரியான இவர் தற்பொழுது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

 


மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல இறந்து கரையொதுங்கி வருகின்றன.


அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகில் அண்மைக்காலமாக முதலைகள் பல இறந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன்   பயணம் செய்வதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30க்கு அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுகின்றன.

அத்துடன் குறித்த பாலத்தை சுற்றி சட்டவிரோதமாக குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.


 பாறுக் ஷிஹான்


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிடிவி கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (12) காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே வேளை என்றும் இல்லாதவாறு கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 


பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2024 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் நிலைய  மைதானத்தில்   இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்    தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு   பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில்    சம்மாந்துறை ,பெரியநீலாவணை,  சாய்ந்தமருது,   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.




( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த  ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் சங்கமன் கிராமம் ,தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு ஆகிய கிராமங்களில் சௌபாக்கியா உற்பத்திக் கிராம செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 30  பயனாளிகளில் முதற்கட்டமாக 15 பயனாளர்களுக்கு  அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஆடுகள்  நேற்று முன்தினம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், உதவிச்செயலாளர் திருமதி எஸ்.நிருபா,கணக்காளர் ஏ.எல்.எம்..றிபாஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந்த்
மற்றும்  பயனாளர்களின் பிரிவுகளுக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில்  கல்முனை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய எஸ்.மிதுஷன் எனும் பாடசாலை மாணவன் நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்தில் பயற்றை செடிக்கு நாட்டப்பட்டிருந்த கிளிசரீடியா மரத்தின் கம்பு (2 அடி நீளமும் 2 ½ அங்குல விட்டமும் உடையது) குறித்த இளைஞரின் குத வழியாக பாய்ந்து சலப்பை, ஈரல், நுரையீரல், பிரிமென்றகடு உட்பட உடலின் முக்கிய பாகங்களாக காணப்படுகின்ற  15 பாகங்களை கிழித்துக் கொண்டு மார்பக பக்கமாக குறித்த தடி வெளியில் தெரிந்துள்ளது.

இச் சத்திரசிகிச்சையினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.டபுள்யூ.எம்.சமீம் மற்றும் மயக்கமருந்து வைத்திய நிபுணர் டொக்டர்.கே.சுதேஸ்வரி வைத்திய அதிகாரிகளான டொக்டர் ப(f)ஸ்மிர், டொக்டர் முக்சீத், டொக்டர் சிரோஷான், டொக்டர் வினுல தாதிய உத்தியோகத்தர்களான செல்வி.வர்சிதா, திருமதி.பி.நெத்திக்குமார, திரு.ஏ.என்.டீ.அல்விஸ், திருமதி.எஸ்.வேனுசா, திருமதி.எம்.யூ.ஐயர், செல்வி.ரீ.டிலக்சனா மற்றும் சுகாதார உதவியாளர்களான திரு.ஏ.எல்.ரிபா(f)ய் செரீப், திருமதி.எம்.கிருபாணந்தம் ஆகிய வைத்திய குழுவினரினால் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.40 மணி வரை இந்த சத்திர சிகிச்சையானது (EM/ Laparotomy + Throcotomy + Colostomy) மேற்கொள்ளப்பட்டது.

இச்சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் இரண்டடி நீளமுடைய தடியினை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது குறித்த இளைஞன் ஆரோக்கியமான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் தனது 25 வருட கால அறுவை சத்திர சிகிச்சை வரலாற்றில் இது ஒரு சவாலான அறுவை சிகிச்சை என குறிப்பிட்டுள்ளதுடன் இறைவன் உதவியால் இச்சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர்.ஏ.பீ.ஆர்.எஸ்.சந்திரசேன அவர்களினால் குறித்த அறுவை சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்  தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

 


(எஸ்.அஷ்ரப்கான்,சியாத் எம்.இஸ்மாயில், றியாஸ் ஆதம், பாறூக்  ஸிஹான்)


நிந்தவூர் ரோஸ் றீனா நிறுவனத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி அமைப்புக்களின் ஊடாக அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை சமூகத்திற்காக முன்னெடுத்த நலன்புரி அமைப்புக்களை பாராட்டிக்  கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (22) நிந்தவூர் அழகாபுரி தனியார் விடுதியில் இடம்பெற்றது.

ரோஸ் றீனா சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளரும், சமூக ஆர்வலருமான ஏ.ஜே.ஜனுபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், சம்மாந்துறை மஜ்லிஸ் சூரா அமைப்பின் தலைவருமான எம்.ஐ.அமீர் (நழிமி) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களான ஏ.எம்.அப்துல் லத்திப், எம்.எம்.ஆசிக் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகர்களான டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், டொக்டர் எம்.பீ.ஏ.அப்துல் வாஜித், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயிஸ், கல்முனை உதவிக் கல்விப் பணிப்பாளரும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான எம்.ஏ.எம்.றசீன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இவ்வமைப்பினால் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அர்ப்பணிப்பு மிக்க சமூக சேவைகளை முன்னெடுத்த நலன்புரி அமைப்புக்கள், சமூக சேவையாளர்கள் பாராட்டி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எதிர்காலத்தில் மேலும் பல சமூக சேவை அமைப்புக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளதோடு, சமூகப் பரப்பில் காணப்படுகின்ற சமூக விரோத செயற்பாடுகளை களைவதற்கும் சிறுவர்கள், இளைஞர்கள் செல்லுகின்ற பாதையினை  ஒழுங்கமைப்பதற்குமான பணியிலே  ரோஸ் றீனா சமூக சேவை பிரிவு போன்று அனைத்து சமூக சேவை அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அழைப்பினை ரோஸ் றீனா சமூக சேவை  அமைப்பின் ஸ்தாபகர் சமூக ஆர்வலர் ஏ.ஜே. ஜனுபர்  விடுத்திருந்தார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர்  வைத்திய கலாநிதி டாக்டர் தர்மலிங்கம்  பிரபாசங்கருக்கு அங்கு பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் பெரு வரவேற்பளித்தனர்.

தாதியர் சங்கப் பிரதிநிதிகளான எஸ்.சந்திரகுமார் எம்.அன்வர் ஏ.பரீஷ் ஏ றசூல் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பிரபா சங்கருக்கு மாலை சூட்டி வரவேற்றார்கள்.

இந் நிகழ்வு நேற்று  வைத்திய சாலையில் நடைபெற்றது.

அவர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. புதிய வைத்திய அத்தியட்சகர் குறைநிறைகள் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்தார்.

சம்மாந்துறை மண் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம் பெற்றது.

ஏலவே வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அவரை வாழ்த்தி வரவேற்றது.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி டாக்டர் பிரபாசங்கர் முன்னதாக ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய. அதிகாரியாக கடமையாற்றி இருந்தார்.

இருவருட வைத்திய நிருவாக துறை பட்டப்பின் பயிற்சி முடித்து வைத்திய அத்தியட்சகராக தெரிவாகிய முதல் காரைதீவு வைத்தியர்  இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல பல் வைத்திய அதிகாரி டாக்டர் தர்மலிங்கம் உமாசங்கரின் சகோதரராவார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


யாழ். செல்வச் சந்நிதி கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் விசேட மருத்துவ முகாம் கல்லடி விபுலானந்த மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஏற்பாட்டில் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் இவ் விசேட மருத்துவ முகாம்  மிசன் சிவபுரியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.நவலோஜிதன் டாக்டர் ரி.வாமதேவன் உள்ளிட்ட மருத்துவர்கள்  பாதயாத்திரை குழுவினருக்கு சிகிச்சை அளித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒரு மாதகாலம் பாதயாத்திரை பூர்த்தி செய்த நிலையில் இம் மருத்துவமுகாம் பெரிதும் உதவியது. இ.கி.மிசனின் இவ் ஜீவசேவைக்கு மனமார்ந்த நன்றிகள் என்று பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி தெரிவித்தார்.

அவ்வமயம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,முன்னாள் பட்டிப்பளை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சிவஞானம் அகிலேஸ்வரன் ,உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை ஆசிரியர் கவிமாமணி சாமி.புண்ணியமூர்த்திஆகியோர் கலந்துகொண்டனர்.


சுமார் 75 யாத்திரீகர்கள் இம் மருத்துவமுகாமில் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று குழுவினர் களுதாவளையில் தரித்திருந்தனர்.

 


திருக்கோவிலில் அரச அதிபர் முன்னிலையில் இரண்டாம் கட்ட அரிசி விநியோகம்.

(வி.ரி.சகாதேவராஜா)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட அரிசி வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  தங்கையா கஜேந்திரன்  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .

இதன் போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான சிவஞானம் ஜெகராஜன்  இன்று (10) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கரம முன்னிலையில் அவர் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அம்பாரை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையில் கலந்து கொண்டதன் பிற்பாடு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.
இதன்பிற்பாடு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத அனுஸ்டானத்தினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கர அவர்களிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டு கையொப்பமிட்டு கடமையினை ஆரம்பித்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் மேலதிக அரசாங்க அதிபருக்கு வாழ்த்தினை கூறியதுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கினர்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந் நியமனத்தை வழங்கி இருக்கின்றது .
2007 இல் இலங்கை நிருவாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சேர்ந்த சிவ.ஜெகராஜன் அவர்கள் காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றயதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி இருந்தார்.
2013 இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு பல மாற்றங்களை ஏற்படுத்தி சிறப்பான பணியாற்றி வந்த அவர் மீண்டும் 2019 இல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்டு
ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட  சிவஞானம் ஜெகராஜன் அவர்களுக்கு அம்பாரை மாவட்டம் மற்றும் ஆலையடிவேம்பு மக்கள் சார்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்


 ( காரைதீவு   சகா)

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இன்று பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான சிவஞானம் ஜெகராஜனுக்கு அவர் பிறந்த காரைதீவிலிருந்து கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

 இப் பதவியேற்பு வைபவம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் நடைபெற்றது.

அவ்வமயம் காரைதீவிலிருந்து அங்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய செயலாளர் ரி.சண்முகநாதன் ,சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் சங்கத்தலைவர் கே.கோபால் சமுக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் ஆகியோர் பதவியேற்ற ஜெகராஜனுக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.

காரைதீவுக்கு கிடைத்த அவரது சேவை மேலும் மாவட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

 



வி.சுகிர்தகுமார் 0777113659  

 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான உணவு பாதுகாப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இலவச அரிசி விநியோகம் இரண்டாம் கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் இரண்டாம் கட்ட அரிசி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
 ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர்; தலைமையில் இடம்பெற்ற இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 7302 குடும்பங்கள் இலவச அரிசி பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தொடர்ச்சியாக வரும் நாட்களில் பிரிவுகள் ரீதியாக இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


 (எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஷ்ரப்கான், ஏ.எல்.எம்.சினாஸ் )


கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சில் இணைந்து கொள்ளும் நிகழ்வு மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எல்.எம்.ஐயூப்கான் தலைமையில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கே.எம்.ஏ.
றசாக்(ஜவாத்), ஐ.எல்.எம்.மாஹிர்,எம்.எஸ்.சுபைர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,மற்றும் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வின் அங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் காரியாலயம் கல்முனையில் உள்ள றிஸ்லி
முஸ்தபாவின் அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

ரிஸ்லி முஸ்தபா அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வகையான சமூக நல உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 துணை மருத்துவ சேவை குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்ட 317 பேர் தங்களையும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகஜர்களை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 2021.01.01 ஆம் திகதிய 2,209 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி குடும்பநல உத்தியோகத்தர் பதவி ஆட்சேர்ப்பிற்கு தகைமைகளைப் பெற்று உரிய நேர்முகப் பரீட்சைக்கு பலர் தோற்றியிருந்தனர்.
இவர்களுள் 2836 பேர் தகுதியுடையவர்கள் என கருதி கடந்த 2021.12.22ம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் 2022.02.09 ஆம் திகதி வெட்டுப்புள்ளி; மதிப்பெண் அடிப்படையில் தகுதியுடையவர் பெயர் பட்டியலை இரு குழுவாக இரு கட்டங்களில் பயிற்சியில் இணைத்துக்கொள்வதாக சுகாதார அமைச்சின்வலையமைப்பில் பதிவேற்றம் செய்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த 2022.09.05 ஆம் திகதியில் முதல் குழுவிலிருந்து வெட்டுப்புள்ளி; மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் பயிலுனர்களை தெரிவு செய்து உரிய பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட்டதோடு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மிகுதி பயிலுனர்களை இரண்டாவது குழுவாக உரிய பயிற்சிக்கு உள்வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கடந்த மூன்று வருடங்களாக 1317 பயிலுனர்கள் பயிற்சிக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது கடந்த 08ஆம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சி நெறி இரண்டாம் பகுதி தெரிவுப்பட்டியலில் 1000 பயிலுனர்களை மாத்திரமே தெரிவு செய்துள்ளனர்.
இவரை காலமும் இப் பயிற்சி நெறிக்கான விதிமுறைகளை தவறாது பேணியும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டும் காத்திருந்த மிகுதி 317 பயிலுனர்கள் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதது எமக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 1000 பயிலுனர்களில் தொழில் நிபந்தனைகளையும் மீறி திருமணமானோர் ஏனைய அரச தொழிலில் உள்ளோரும் உள்ளடங்குகின்றனர்.
ஆகவே சரியான முறையில் இரண்டாம் பகுதி பயிற்சி நெறி தெரிவு இடம்பெறாமல் பெயர்பட்டியலில் 1000 பயிலுனர்களை மாத்திரம் கொண்டு வலையமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது தெரிவு செய்யப்படாத 317 பயிலுனர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே இத் தொழிலுக்காக கடந்த 2021 தொடக்கம் இன்றுவரை காத்திருக்கும் எங்களையும் எங்கள் மனநிலையையும் கருத்திற் கொண்டு; இரண்டாம் பகுதி பயிற்சி நெறி ஆரம்பமாகும் காலத்திலேயே உள்வாங்குவதற்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தங்களுக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்

 


நூருல் ஹுதா உமர்

இலங்கை தேசத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு அதன் முதல் கட்ட சிரமதானப்பணி இன்று (20) அவரது சொந்த தொகுதியான கல்முனையில் அடையாளம் காணப்பட்ட காணியில் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முன்னிலைப்படுத்தலுடன் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், தலைவர் அஷ்ரபின் அபிமானிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இந்த சிரமதானப்பணி இன்று காலை இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இத்திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்
அதனையொட்டியதாக துரிதமாக நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இந்த சிரமதான பணியில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், பொறியலாளர் அப்துல் ஹலீம் ஜௌஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், தலைவர் அஷ்ரபின் அபிமானிகள் எனப்பலரும் பங்குகொண்டிருந்தனர்.


(எஸ்.அஷ்ரப்கான்)

கட்சி கட்டமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின் கட்சிக்குள் இருந்து கட்சியை அழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை - 15 (தைக்கா நகரில்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு கூட்டம் தைக்கா நகர் வட்டார வேட்பாளர் அதிபர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாத்  தலைமையில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய எம்.எஸ்.உதுமாலப்பை தொடர்ந்தும் தனதுரையில்,

கட்சி விசுவாசம் என்பது மிக முக்கியமான விடயமாகும். நாம் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும்.  

அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கு காலம் எடுக்கின்றது. நாம் விசுவாசமாக செயற்பட்டு நமது கட்சியை வளர்த்து பலப்படுத்தும் நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்காமல், நமது கட்சியை சேர்ந்த நீண்ட கால அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சி பிரமுகர்களை மாற்றுக் கட்சி வேட்பாளர்களாக சேர்த்து தேர்தலில் போட்டியிட வைத்துள்ள விடயம் நம் கண் முன்னே நடைபெற்றுள்ளது.

இது குறித்து கட்சிக்காரர் என்ற ரீதியில் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 80 வீதமான ஆதரவு வழங்கிய சில பிரதேசங்களில் இன்று 60 வீதமான ஆதரவு வழங்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  இந் நிலைமையை ஏற்படுத்தியவர்கள் எமது கட்சிக்குள் இன்றும்  இருந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். 

கட்சியின் கிராம மட்ட கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக மாற்றும் போது இவ்வாறான செயற்பாடுகளை கிராம மட்டத்தில் இயங்கும் கட்சி கட்டமைப்பும், கட்சி போராளிகளும் இணங்காண்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. 

எனவே, கட்சியின் கிராம மட்ட செயற்பாடுகளில் கட்சி முக்கியஸ்தர்கள் உயிரோட்டமாக செயற்பட வேண்டும். கட்சி கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக அமைக்கப்பட்ட பின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கட்சியின் தேசியத் தலைவரால் மத்திய குழுக்கள்  புனரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்  படவுள்ளது. நாம் எல்லோரும் கட்சியின் செயற்பாடுகளில்  "மசூரா" அடிப்படையில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க வேண்டும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கட்சியின் செயற்பாடுகள் சிறந்ததாக அமையும் என்றார்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

 திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏபி. மசூத் தலைமையில் இடம் பெற்றது.

 இந்தக் கூட்டத்தில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார்.

(ECG mechine, portable ventilator, BP monitor, pulse oxymetry)
போன்ற உபகரணங்கள்  வழங்கப்பட்டன.

அச்சமயம் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மிக நீண்ட காலமாக ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி மாகாண அலுவலகத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்கின்ற டாக்டர் எம்.ஏ நபீல் மற்றும் பிராந்திய பற் சிகிச்சை நிபுணராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்கின்ற டாக்டர் எம்.ஏ.எம். சரூக் ஆகியோருக்கு இன்று பிரிவு தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் சேவை நலன் பாராட்டு விழா  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் டாகடர் எம்.ஏ நபீல் மற்றும் டாக்டர் எம்.ஏ.எம். சரூக்  ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வைபவத்தில் முன்னாள் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.பீ.அப்துல் வாஜித் அவர்கள் நினைவுப் பேருரை ஒன்றை ஆற்றியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தார்

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இன்று (04) சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எல். நழீம், சம்மாந்துறை மத்திய குழுவின் செயலாளர் ஏ.ஜே.எம். அஸாறுபீன், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.