Showing posts with label Sri lanka. Show all posts

 


ஜேவிபி ஆதரவாளரான சுரேக்கா சசிந்திரன் தமிழரசுக்கட்சியின் யாழ்/ கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற


தேர்தல்- 2024 வேட்பாளராக இன்று சுமந்திரனால் @MASumanthiran அறிவிக்கப்பட்டார்.

 


வி.சுகிர்தகுமார்/யதுர்சன்







அம்பாரையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாயின் ஒருங்கிணைப்பிற்கு முட்டுக்கடடையாக இருக்கும் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழவினர் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைப்பின் செயலாளர் ஆர்.யுவேந்திரா மற்றும் தலைவர் கே.வரதராஜன் ஆகியோர் குறிப்பிட்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள்; அனைத்தும் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனும்; அடிப்படையில் தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகளை நாம் முதலில் அனுகியபோது தமிழ்த்தேசியத்திற்கு அப்பாற்பட்ட கட்சிகளுடன் ஒன்றுபட தயாரில்லை என தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகள்; திட்டவட்டமாக மறுத்தனர்.
ஆயினும் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் முயற்சியில் குறைந்தபட்;சம் தமிழ்த்தேசியம் சார்ந்த இரு பெரும் கட்சிகளான ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியினை ஓங்கிணையுமாறு வலியுறுத்தினோம். இதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றும் முயற்சியை ஆரம்பித்தோம். இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுபட விருப்புடையவர்களாக தாம் உள்ளதாகவும் கட்சி உயர்பீடங்களே முடிவு எடுக்கவேண்டும் எனவும் கட்சிகளின் அம்பாரை மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சி சின்னத்திலும் அம்பாரையில் மாற்றுக்கட்சிகளின் சின்னத்திலும்; போட்டியிட சம்மதித்தபோதிலும் அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சியின்  பிரதிநிதிகள் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என விவாதித்ததாகவும் எனினும் ஒன்றுபடும் இலக்கை அடைய இன்னும் பேச விரும்புகின்றோம் என கூறியிருந்தார்.
ஆயினும் இதுவரை ஒருங்கிணைப்பு தொடர்பான உடன்படிக்கை எட்டப்படவி;ல்லை. சிலவேளைகளில் இவ்வாறான உடன்படிக்கை எட்டப்படாமல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு மீண்டுமொரு தரம் பிரதிநிதித்துவம் அம்பாரையில் இல்லாமல் போனால் ஒருங்கிணைப்பிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என நாம் கூறி வைக்க விரும்புகின்றோம்.
மேலும் இடம்பெறவுள்ள கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்பட்டு கட்சிகள் ஒன்றாக மாவட்டத்தில் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்பதே அம்பாரை பெரும்பான்மை தமிழ் மக்களின் அவாவாக இருக்கின்றது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கின்றோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரிந்து நின்று பிரதிநிதித்துவத்தை இழந்தபின்னர் உடனடியாக களம் இறங்கிய அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் எதிர்காலத்தில் ஒரே சின்னத்தில் அனைவரும் போட்டியிடவேண்டும் எனும் ஒரே நோக்கோடு மாத்திரம் உருவாக்கப்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 



நூருல் ஹுதா உமர்


 சுகாதார அமைச்சினால் புத்தாக்க சிந்தனை திறன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய ஆய்வுக்கூடத்தின் வளங்கள் மற்றும் பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் 2024.10.05 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச வைத்திய அதிகாரிகள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரி என் எம் இப்ஹாம் அவர்கள் விளக்கக் காட்சியுடன் கூடிய தரவுகளை முன் வைத்து பல விடயங்களையும் அதன் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாடுகளையும் விரிவாக தெளிவுபடுத்தியமையும் குறிப்பிடத்தக்கது


(பாறுக் ஷிஹான்)

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(5) குறித்த யானை அப்பகுதியில் குவிந்துள்ள  குப்பைகளை உண்ட நிலையில் திடிரென உயிரிழந்திருந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள்  வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன் யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.அத்துடன்  வனஜீவராசிகள் திணைக்களம்  குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று  மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.  அம்பாறை நகரப்பகுதி  உள்ளிட்ட ஏனைய புற நகர  பிரதேசங்களில் இரந்து   இப்பகுதிக்கு குப்பைகள்  மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு   கொட்டப்படுகின்றன.

 இதனால் அம்பாறை நகரில் இருந்து   குப்பைகள் வாகனங்கள் மூலம் தினமும்  கொண்டுவரப்பட்டு   கொட்டப்படுகின்றதுடன் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின்   பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன. தாவர உண்ணியான காட்டு யானைகள்இ குப்பைகள் இபொலீத்தீன்கள்இ பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது. யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும்   160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


 



பாறுக் ஷிஹான்


உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் கடந்த சனிக்கிழமை (05) மாலை  இடம்பெற்றுளள்துடன் குறித்த  விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை  சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவர்  ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.அத்துடன் மற்றுமொருவர்  காயமடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த விபத்தானது  உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில்   இடம்பெற்றுள்ளதுடன் உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



 நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயத்திற்கு இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பிரிவு ஐந்து பேச்சுப் போட்டியில், நிந்தவூர் கமு/கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் அ.ஹ.மு.அசாம்; பிரிவு ஒன்று ஆக்கமும் எழுத்தும்  போட்டியில் நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி ம .ஹஸ்னத் ஹனா ஆகியோரே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இருவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையிலான கல்முனை வலயம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் 22 முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர்


வைத்தியசாலைகளில் ஏற்படும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரத்த தான பணிகளை செய்கின்ற சமூக மட்ட அமைப்புகள் மற்றும் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எ.சீ.எம்.மாஹிர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரசிக்க ஹசன்த, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.பிராஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கே.வித்யா, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்  இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஹெரிசானன்ந் மற்றும் இரத்த தான பணிகளை செய்கின்ற சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று சாகாம வீதியில் அமையப் பெற்றுள்ள சிறுவர் இல்லத்தில், இராணுவ படைப்பரிவு ஏற்பாட்டில் சிறுவர் தினமானது சிறுவர் இல்லத்தில்  கொண்டாடப்பட்டது. சிறுவர்களுக்கான பரிசுப் பொருட்கள் உட்பட பல்வேறுபட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது


 


நூருல் ஹுதா உமர்


சர்வதேச சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை  முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான கலை கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டிலும், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீமின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் , சமுர்த்தி வங்கி  முகாமையாளர்  ஐ.எல்.ஹிதாயா , கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெமீல், அல் - ஜலால் வித்தியாலய அதிபர் யு.கே. சிராஜ், சமுர்த்தி பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எஸ்.சாஹிரா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட சமுர்த்தி அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



 ( வி.ரி. சகாதேவராஜா)


இலங்கை கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் 67 ஆவது ஆண்டு நிறைவு விழா கொக்கட்டிச்சோலை  கமநல சேவை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது .


பெரும்பாக உத்தியோகத்தர் கோ. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு இடம் பெற்றது.

 வரவேற்புரையை  கமநல குழுத் தலைவர் ம. கோபாலரெத்தினம் வழங்கினார்.

அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் எஸ். திவாகர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மாவட்ட கமநலஅபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் இ.சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலை கமநலஅபிவிருத்தி  சேவை நிலையத்திற்கு உட்பட்ட 25 கமநல அமைப்புகள் சேர்ந்து இதை நடத்தியது.

 இது ஒரு வார கால நிகழ்ச்சி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 



( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரி கணேசமூர்த்தி அருணன் அவர்களுக்கு இன்று (4)  வெள்ளிக்கிழமை சிவில் அமைப்புகளால் பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

 முன்னதாக காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில்  விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது.
பின்னர் அங்கிருந்து 
மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார்.

 பின்பு பிரதேச செயலாளர் பணிமனையில் மக்களின் வரவேற்பு கூட்டமும் இடம்பெற்றது. 

அங்கு அறங்காவலர் சபை செயலாளர் சி. நந்தேஸ்வரன்  தலைவர் இ.குணசிங்கம் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 மாவடி கந்தசாமி ஆலய  செயலாளர் சிவகுமார் நன்றி உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஆலய தலைவர்கள் பரிபாலன சபையினர் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 



( வி.ரி. சகாதேவராஜா)

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாராட்டு விழா நேற்று (4) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்ரசேன தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரும் ,கிழக்கு மாகாண பதில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளரும், கல்முனை  ஆதார வைத்தியசாலையின் முன்னாள்   வைத்திய 
அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன்  கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக  சிவஸ்ரீ கோபாலநிரோஷன், பற்றிமா தேசிய கல்லூரி அதிபர் அருட்சகோதரர்எஸ்.இ. ரெஜினோல்ட் கலந்து சிறப்பித்தனர்.

 வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிறா சபியுடீன்,பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன்( சாய்ந்தமருது ) டாக்டர் என்.ரமேஸ்( கல்முனை வடக்கு), கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நிகழ்வின் அனுசரணையாளர் சரவணாஸ் உரிமையாளர் என்.பிரகலதன், கல்முனை நெற் பி.கேதீஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

நோயாளர் பாதுகாப்பு விருது மற்றும் ஜனாதிபதி சூழலியல் விருதைப் பெறுவதற்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நினைவு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது 
. வைத்தியசாலை வைத்திய 
நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் ஏனைய 
உத்தியோகத்தர்களும் மாணவர்களுக்கும் பங்குபற்றினர்.

இன்று ஓய்வு பெறும் தாதிய உத்தியோகத்தர் திருமதி  ஜெயந்தி மகேசன் பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .



 இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி - IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய பேனரின் முன் நின்றிருந்தார்.

செவ்வாய் இரவு, இரானிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில் ஹொசைன் சலாமி தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ உத்தரவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த போர் அறையில் இருந்த அந்தப் பெரிய பேனரில் மூன்று நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஜூலை மாதம் டெஹ்ரானில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு இரான் இஸ்ரேலை குற்றம் சாட்டியது.

கடந்த வாரம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி குட்ஸ் படைத் தளபதி பிரிக்-ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோரௌஷன் ஆகியோரின் மரணத்திற்குப் பழிவாங்கவே இந்த மிகப் பெரிய தாக்குதலை நடத்துவதாக மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி கூறினார்.


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை(03.10.2024) இடம் பெற்றது.

காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.

இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர்.

கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.


இன்றைய கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றை அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்டகின்றது.


அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர்.

இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

  



( எம். என்.எம்.அப்ராஸ் ) 


மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சுய தொழில் புரிகின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப் பட்டது. மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தினர் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பி டம் வேண்டிக்கொண்டதற்கிணங்க 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக காசோலை மாவடிப்பள்ளி கிழக்கு கிராம உத்தயோகத்தர் காரியலத்தில் நேற்று பிற்பகல் (02) வழங்கி வைக்கப்பட்டது . 

 உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அம்பாறை மாவட்ட வலையமைப்பு நிறுவனமான பெண்கள் வலையமைப்பானது சமுக,சக வாழ்வு நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ் உதவித்திட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தின் தலைவர் இசட்.எம். நஸ்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி டி.வாணி,விஷேட அதிதியாக எச்.டி.ஓ.நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.ஐ.ரியால்,கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அலியார்,மாவடிப்பள்ளி கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எச்.ஹினாயா, ஆர்.தன்சிலா,மாவடிப்பள்ளி மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சகீனா,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எஸ்.அனிதா,சகவாழ்வு சங்க செயலாளர் ஏ.அஷ்ரப் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.




 பாறுக் ஷிஹான்


 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலையின் (Green witch English Nursery)  சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம் றிசாட் , பிரதி அதிபர் எம்.ரி.ஏ முனாப்  மௌலவி ,  ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் டி.கே.எம்.மௌசீன்  ,  மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இதன் போது மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இடம் பெற்று முடிந்தது.




( வி.ரி. சகாதேவராஜா)

தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில்   உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும்
ஒரு குடையின் கீழ் வந்தால் இணைந்து போட்டியிட தயார். 
தவறினால் நாங்கள் சுயேச்சையாக தனிவழி நின்று தேர்தலில் போட்டியிட்டு  ஆளுங்கட்சியுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி பணியாற்றுவோம்.

 இவ்வாறு  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார்  தெரிவித்தார்.

அம்பாறை ஊடகங்களுடனான விசேட  சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.ஏனெனில் கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து எமது மக்களின் வாக்குகளை சிதறடித்தனர்.இம்முறையும் அவ்வாறு எமது பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் இருப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைய சகலரும் ஒத்துழைப்பு செய்ய முன்வர வேண்டும்.

ஆனால் இன்று வரை எவரும் ஒன்றிணைவதற்கு முன்வராத சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கி தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் தயங்க மாட்டேன்.இன்றைய சூழலில் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலைமையே அம்பாறை மாவட்ட தேர்தல் களநிலவரங்களில் தெரிகின்றது.இந்த தேர்தலை பொறுத்தவரை பொதுமக்கள் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை எற்பட்டுள்ளது.விகிதாசார தேர்தல் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்களது நலனை நோக்காகவும் தேசியப்பட்டியலை இலக்காகவும்  நோக்கி பயணிக்கின்றார்களே அன்றி மக்களின் நலனில் அக்கறையின்றி காணப்படுகின்றனர்.

இது தவிர பொது கட்டமைப்பு ஒன்றின்  ஊடாக நாங்கள் போட்டியிடுவதன் ஊடாக மக்களின் விருப்பத்தை பெற முடியும்.அத்துடன் 35 ஆயிரம் வாக்குகளை இத்தேர்தலில்  பெறுவது தான் எமது இலக்காக உள்ளது.கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்ட  கருணா அம்மான் தந்த பாடம் தான் இவ்வாறான நிலைமையினை நாம் எதிர் நோக்க காரணமாகின்றது .எனவே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள  எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் தரப்பினர்சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 



பாறுக் ஷிஹான்


தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளரும் ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளருமான குணாளன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை(2)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பல்வேறு இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற மக்களுடைய இன்னல்களை கருத்தில் கொண்டு இந்த விடையத்தைதை பதிவிட விரும்புவதாகவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.


கடந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டது தற்போதைய நிலை. ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரதிநிதி ஒன்றை தெரிவு செய்தது வரலாறு. ஆனால் தற்போது அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து பல்வேறு குழுக்கள் கட்சிகள் எல்லாம் வாக்குப்பதிவுகளை பெறுவதற்காக முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனை தீர்மானிப்பது வாக்காளர் பெருமக்களே இன்று தேசிய கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகிறது. இது எங்களுடைய மக்களை வெறுப்புக்குள்ளாக்கும் நிலைக்கு ஆக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு தமிழ் பேசும் ஒருவர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.


தமிழரசு கட்சி உட்பட பிரிந்து கிடக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூரையின்கீழ் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட முன் வருவதனால் நிச்சயமாக பிரதேசத்தில் தமிழர் பிரதிநிதிதுவம் பாதுகாக்கப்படும்.

தேர்தல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தல் இதற்கான ஒரு பாடமாக அமைந்திருந்தது.

மேலும் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பொருத்தமானவர் யாராக இருந்தாலும் ஒரு கட்சியில் உள்ள ஒருவரை தெரிவு செய்வது இந்த பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான ஒரு செயற்பாடு எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


மக்களை அடிமைகளை ஆக்கி வேறு ஆசா வார்த்தைகளை காட்டி அவர்களை திசை திருப்பி விட வேண்டாம் ஏனையய தேசிய கட்சிகளிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது மேலும் சிறிய கட்சிகளும் உள்ளே புகுந்து இருக்கும் நிலையை குழப்பி விட வேண்டாம் எனவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்

ஏனைய பெரும் கட்சிகள் தமிழ் மக்களுக்கு எப்போதும் ஒன்று கூடுவார்கள் என்ற சிந்தனை அனைவருக்கும் இருக்கின்றது என்பதோடு அது ஒரே கூரையின் கீழ் என்பதுதான் நிச்சயம் சாத்தியமாகும். அதே நேரம் யார் பலம் உள்ளவர் யார் வேட்பாளர் என்பதை தெரிந்து நிறுத்துங்கள் எனவூம் மக்கள் நிச்சயமாக தெரிவு செய்வார்கள் அவ்வாறு மக்கள் தெரிவு செய்வதற்கு உங்களுடைய தெரிவு மிக முக்கியம் என்பது எங்களுடைய பணிவான வேண்டுகோள் எனவும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் குணாளன் தெரிவித்திருந்தார்.

 


வி.சுகிர்தகுமார் 


 உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் உயரிய எண்ணக்கருவிற்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (03)இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகளவான குருதி நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மேற்கொண்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் இரத்தம் சேகரிக்கும் பணியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர் மற்றும் சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் குருதி நன்கொடையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தேவைப்படும் காரணத்தால் இரத்தம் சேகரிக்கும் பணி பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.