சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு





சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

தனியார் வைத்தியசாலைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அமைவான ஆலாசனைகளை மறுசீரமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறை தொடர்பான பிரதிநிதிகளை அழைத்து அறிவிறுத்தியுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் தலைவர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன கூறினார்.

சிறுநீரக அறுவை சிகிச்சைகளை முறையான வகையில் முன்னெடுப்பது இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் தொடர்பில் காணப்படும் நிபந்தனைகளுக்கு மேலதிகமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் பின்னர் அவர்களது எதிர்காலம் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் உள்ள சட்ட விதிமுறைகளை மறுசீரமைக்கவுள்ளதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன கூறினார்.

அத்துடன் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை திட்டமிடப்பட்டு இடம்பெறாவிடின் அது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் தலைவர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு தற்காலிகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவரடங்கிய புதிய குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதிப்பணிப்பாளர் நாயகம் இருவரும், சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவரும், பணிப்பாளர்கள் இருவரும் புதிய குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜெயசுந்தர பண்டார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகள், இந்திய வைத்தியசாலைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் குறித்து விரிவாக ஆராய்ந்து அதன் அறிக்கையை புதிய குழு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.