மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா முடிவுக்கு வந்துள்ளது;




லைபீரியாவில் கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் இபோலா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அவசர இடர் மதிப்பீட்டு இயக்குநர் ரிக் பிரேனன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இபோலா தொற்றினால் பாதிப்புக்குள்ளான மூன்று நாடுகளில், லைபீரியா மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலப்பகுதியில் இபோலா நோய்த் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
சியாரா லியோன் மற்றும் கினி ஆகிய நாடுகள் இபோலா அற்ற நாடுகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நோய்த் தொற்றினால், மேற்கு ஆப்பிரிக்காவில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில், பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
எனினும் இந்த நோய் மீண்டும் பரவலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இபோலாவினால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய பதினேழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மருத்துவம் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.