வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை




வட கொரியா ஹைட்ரோஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்நாட்டின் அணு ஆயுத சோதனைத் தளம் ஒன்றுக்கு அருகில் ஐந்து புள்ளி ஒன்று அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
அந்த வெடிகுண்டு ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு தான் என்பதை நம்புவது சிரமமாக உள்ளதாக தென் கொரியாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் வட கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தை விட இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டின் சக்தி பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
பல தரப்பிலிருந்தும் கண்டங்கள்
வட கொரியாவின் இந்த அணு ஆயுத சோதனை பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்றும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறுவதான செயல் என்றும் தென் கொரிய அதிபர் பார்க் குவின் ஹீ தெரிவித்துள்ளார்.
இது ஜப்பானின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இந்த சோதனையை பலமாக எதிர்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, இது ஜப்பானின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையை உறுதி செய்யமுடியவில்லை என்று தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, எந்த ஒரு ஆத்திரமூட்டும் செயலுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏவுகணை சோதனைகள்
கடந்த டிசம்பரில் பியோங்யாங், நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஒரு ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தென் கொரிய ஊடகம் அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்ததா தோல்வியில் முடிந்ததா என்று தெளிவாக தெரியவில்லை.
கடந்த நவம்பர் மாதத்தில் வட கொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த மே மாதம் நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஒரு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அந்த ஏவுகணை சோதனையின் புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.