அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம்




அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற ஹென்ரி ஒர்ஸ்லி
அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார்.
அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.
இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி.
கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் மூலம் அவர் உதவி கோரியதைத் தொடர்ந்து மீட்பு விமானத்தின் மூலம் சிலிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரது நடைபயணத்தில் 71ஆவது நாளில் அவர் இப்படி மீட்கப்பட்டார். அவரது இறுதி இலக்கை அடைவதற்கு 50 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அவரால் தொடர்ந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
அவரது இந்த நடைபயண சாகசத்துக்கு போஷகர்களாக இருந்த பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரியும் தங்களின் நண்பனாகவும் தங்களுக்கு உந்து சக்தியாகவும் இருந்த ஒருவரின் மரணம் தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.