நிலச்சரிவு: 150க்கும் மேற்பட்டோர் நிலை தெரியவில்லை






இலங்கை கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை அரநாயக்க பிரதேசத்திலும், இரவு புலத்கோபிட்டிய பிரதேசத்திலும் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
அரநாயக்கா பிரதேசத்தில் இடம் பெற்ற நிலச்சரிவு சம்பவத்தின் பின்னர் பாதிப்புக்குள்ளான மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் இதுவரை 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.



68 ஆண்களும், 57 பெண்களும் என 125 பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் குடும்ப உறவுகளின் தகவல்கள் மூலம் அறிய முடிவதாக அரநாயக்க பிரதேச செயலாளரான இஸற் ஏ.எம்.பைஷால் கூறுகின்றார்.
66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிழந்துள்ளதாக கூறப்படும் 16 பேரில் இதுவரை 5 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்கின்றார் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான அ. பாஸ்கரன்.