கேரள சிறையில் தவிக்கும் நான்கு வயது சீன சிறுமி




தென்னிந்திய மாநிலமான கேரளாவில், சீன சிறுமியின் நலன், அந்த மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கீழமை நீதிமன்றத்துக்கும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹான் ரியு ஹெள என்ற அந்த நான்கு வயது சிறுமி, தனது பெற்றோரின் தவறுகளால், பாதிக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான மற்றும் அப்பாவியாகியுள்ளார்.
அந்த சிறுமியின் தாய் ஜியோலின். அவரது இரண்டாவது கணவர் இந்தியரான ஹஃபீஸ் அனாஸ்.
சீனாவில் ஹஃபீஸ் மருத்துவம் படித்தபோது, அந்நாட்டைச் சேர்ந்த ஜியோலினுடன் காதல் வயப்பட்டார். ஏழு மாதங்களுக்கு முன்பு ஹஃபீஸ் இந்தியா திரும்பியதும் காக்காநாட்டில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கினார்.
அவருடன், தனது குழந்தை ஹான் ரியு ஹெள, சகோதரர் சாங் க்வி ஹெள ஆகியோருடன் ஜியோலின் தங்கினார்.
இந்நிலையில் விசா காலம் முடிந்த பிறகும் கேரளாவில் தங்கியதாக காவல்துறையினரிடம் கடந்த ஜூலை 19-ஆம் தேதி மூவரும் பிடிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஹஃபீஸ் தலைமறைவானார்.

நதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் காக்காநாடு பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, தாயும் உறவினரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவதால் சீன சிறுமி தவிக்கக் கூடும் என்பதாலும், தாயின் இரண்டாவது கணவர் தலைமறைவாகி விட்டதால் வேறு எங்கும் செல்ல வழியில்லை என்பதாலும், தாயுடனேயே பெண்கள் சிறையில் அச்சிறுமி வசிக்கலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறைச்சாலையில் தாயுடன் சிறுமி ஹான் ரியு புதிய சூழ்நிலையில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் வசித்து வருகிறார்.
அங்கு நான்கு பெண் கைதிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தனது குழந்தையுடன் ஜியோலின் இருந்தார். அவர்கள் ஐவரும் சிறையின் சமையல் கூடத்தில் பணியாற்றினர்.
இது பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத சிறை அதிகாரி, "உள்ளூர் உணவகத்தில் இருந்து சிறுமிக்கு சீன உணவு அளிப்போம். முட்டைகள் அளித்தபோது அதன் வெள்ளை பகுதியை மட்டும் உட்கொள்வார். தினமும் இரு வேளை 200 மி.லி. பால் அருந்த கொடுக்கிறோம்" என்றார்.
மேலும், "மழலையர் பள்ளியில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டவும், பொம்மைகளுடன் விளையாடவும் அச்சிறுமி அனுப்பப்பட்டார். ஆனால், தன்னுடன் விளையாட வேறு குழந்தைகள் இல்லாததால் அங்கு செல்ல அவர் மறுத்தார்" என்றார் அந்த அதிகாரி.
"இதையடுத்து வண்ணம் தீட்டுவதற்காக கிரேயான்ஸ் வழங்கியபோது, தனது தாயுடன் சேர்ந்து அச்சிறுமி வண்ணம் தீட்டுவார். ஆனால், தனது தாயைத் தவிர வேறு யாரும் சீன மொழியில் பேசாததால் அச்சிறுமி துயரத்துடன் காணப்படுகிறார்" என்று அதிகாரி கூறினார்.

சிறையை மாற்றக் கோரி மனு

இந்நிலையில் வீட்டில் சமைக்கப்பட்ட சீன உணவு, குழந்தைக்கு கிடைக்கும் என்பதால், விய்யூர் சிறையில் இருந்து காக்காநாடு சிறைச்சாலைக்கு ஹான் ரியு ஹெளவை மாற்ற நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து ஹெள மற்றும் ஹபீஸ் அனாஸ் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பி.கே.சஞ்சீவன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "எங்கள் தரப்பு மனுவை ஏற்று சிறுமி ஹான் ரியு ஹெளவை காக்காநாடு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மாநில உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.
சிறுமியின் உறவினர்கள் மீது, மருத்துவ விசா பெறுவதற்காக மருத்துவமனை அதிகாரி அளித்ததாகக் கூறப்படும் சான்றிதழ் போலியானது என கேரளத்தின் மற்றொரு மாவட்டத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் சிறுமியின் தாய், உறவினர் ஆகியோருக்கு ஜாமீன் அளித்துள்ளது.

ஜாமீனுக்கு பிறகும் சிக்கல்

ஆனால், சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, விசா காலம் முடிவடைந்து இந்தியாவில் வசிப்பவர்களாகக் கருதி அவர்கள் மீது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
அதனால், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று வழக்கறிஞர் சஞ்சீவன் கூறினார்.