ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வுக்கு வருகின்றார்




(ஆஷிஷ் நெஹ்ராவுடன் கட்டுரையாளர்)

நியூஸிலாந்துக்கு எதிராக தன் சொந்த மண்ணான டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் டி20 போட்டியுடன் ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிக்கிறார்.
18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஷிஷ் நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 157 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 26 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகள 7.75 என்ற சிக்கன விகிதத்தில் கைப்பற்றியுள்ளார்.
1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுக டெஸ்டில் ஆடிய நெஹ்ரா, 2004-ல் ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார். ஒருநாள் போட்டிகளில் ஹராரேயில் 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக பயணத்தைத் தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா 2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடினார்.
செப்டம்பர் 2005 முதல் ஜூன் 2009 வரை இந்தியாவுக்காக ஒரு சர்வதேசப் போட்டியில் கூட நெஹ்ரா ஆடவில்லை. காரணம் உடலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் காயங்கள், அவரே ஒரு முறை நகைச்சுவையாகக் கூறும்போது, ‘என் உடலில் காயங்கள் என்பதை விட காயங்களுக்கிடையில் என் உடல்’ என்றார்.
12 அறுவைசிகிச்சை செய்து கொண்டு அவர் இன்னமும் பந்து வீசிவருவது மிக மிக ஆச்சரியமான ஒன்று. காயங்களையும் மீறிய மன உறுதி, இடையறாத பயிற்சியினால் 2011 உலகக்கோப்பையிலும் பிறகு 2016 டி20 அரையிறுதியிலும் ஆட முடிந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 2003 உலகக்கோப்பையில் நெஹ்ராவும் ஜாகீர் கானும் அமைத்த கூட்டணி இந்திய அணியை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றது.
குறிப்பாக வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் அந்த உலகக்கோப்பைப் போட்டியில் கைப்பற்றியது மறக்க முடியாத பயங்கரப் பந்து வீச்சு என்பதோடு, அந்தப் போட்டியில் வாந்தி எடுத்து உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரூ பிளிண்டாஃப் உச்சத்தில் வந்து கொண்டிருந்த காலம், இந்தியாவுக்கு எதிரான இந்த 2003 உ.கோப்பைப் போட்டியில் பிளிண்டாஃப் 10 ஓவர்கள் 2 மெய்டன்கள் 15 ரன்கள் மற்றும் சச்சின், சேவாக் விக்கெட்டுகள். இந்தியா 250 ரன்களையே எடுத்தது. இலக்கைத் துரத்திய இங்கிலாந்து ஆஷிஷ் நெஹ்ராவின் வேகம் மற்றும் அபாரமான ஸ்விங் பவுலிங்குக்கு 168 ரன்களுக்குச் சுருண்டது, ஆண்ட்ரூ பிளிண்டாப் பேட்டிங்கில் 73 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்து அச்சுறுத்தினார். நெஹ்ரா 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இன்றளவிலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவர் வீசும் ஆகச்சிறந்த பந்து வீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆஷிஷ் நெஹ்ரா நவம்பர் 1-ம் தேதியன்று தன் கடைசி டி20 போட்டியில் ஆடி 38 வயதில் ஓய்வு பெறுகிறார்.
#IsmailUvaizurRahman#Ceylon24