மாளிகாவத்தை சிறுவர் உஸ்மான் மரணத்தில் சந்தேகம்? பெற்றோர் கைது




மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தை, தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதாலே உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அந்த பரிசோதனையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து உயிரிழந்த குழந்தயின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் புதுக்கடை இல. 04 நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். 

நேற்று முன்தினம் (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தை ஒன்றை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி நேற்று முன்தினம் (14) பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதன்படி பொலிஸார் அங்கு சென்று சோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் இகம் என்ற குழந்தை உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன், உடம்பில் சீனியின் அளவு அதிகரித்ததால் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் இடது காலில் தீக்காயங்கள் போன்று இருந்ததை அவதானித்துள்ள நிலையில் சந்தேகத்திற்குறிய மரணம் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர். 

பின்னர் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்ற நிலையில், தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ​

மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.