மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...




(க.கிஷாந்தன்)
கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் காட்டுப்பகுதியில் 11.05.2018 அன்று அதிகாலை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு மற்றும் பதுளை பிரதேசங்களுக்கு சென்ற பயணிகள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
வட்டகொடை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவருக்கும், புகையிரதத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், இதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்தும் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தீடிரென புகையிரதங்கள் நிறுத்தப்பட்டதால் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்குமிடையில் வாய் தகராறு ஏற்பட்டதோடு, பயணிகள் தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமல் இரவு நேரத்தில் எங்கே செல்வது என்று தெரியாமல் சிறுவர்கள், பெரியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் பசி பட்டினியுடன் புகையிரதத்திலேயே காத்திருந்தனர்.
உடனடியாக பயனிகளின் பாதுகாப்பு நலன் கருதி நாவலப்பிட்டி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு பயனிகள் புகையிரத்திலேயே நித்திரை கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. மேலும் பயணிகள் நலன் கருதி 11.05.2018 அன்று  காலை முதல் அரச பேரூந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக உயரதிகாரியுடன் கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்ததன் பின்னர் இந்த பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.
கைவிடப்பட்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.