விளக்கமறியல்


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை சிறிமாபுர விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை  எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் (இன்று 13 ஆம் திகதி மாலை) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் திருகோணமலை, மகாமாயபுர பகுதியைச் சேர்ந்த பி. எச்.இனோகாநில்மினி  (40 வயது) எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது 2018 மே மாதம் 11ஆம் திகதி காலை 5.50 மணியளவில் விகாரைக்கு அருகில் உள்ள சந்தியில் அதே பகுதியை சேர்ந்த கே. விதானகே செலின் குமார (40 வயது) என்பவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய நிலையில் மரணம் விளைவித்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அத்துடன் திருகோணமலையில் கப்பம் பெற்ற மூன்று குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.