இலங்கையில் பால் மா குடிப்பது துர்ப்பாக்கியமான ஒரு நிலையாகும்-




உலகில் 10 அல்லது 15 நாடுகள்தான் பெட்டிப் பால் மா குடிக்கும் நாடுகளாக காணப்படுகின்றன எனவும், அதில் ஒரு நாடாக இலங்கை காணப்படுவது துர்ப்பாக்கியமான நிலையாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவ திம்புலாகல மகா வித்தியாலயத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சரும் பால் மாவுக்கு  நற்சான்றிதழ் வழங்கி கருத்துத் தெரிவித்திருந்தார். நான் என்றால், சுகாதார அமைச்சராக ஐந்து வருடங்கள் கடமை புரிந்துள்ளேன். அக்காலத்தில் பால் மா உற்பத்தி நிறுவனங்களுக்கு எனது வீட்டு வாயிலுக்குள் பிரவேசிக்க விட்டதில்லை. அவர்களுக்கு அமைச்சுக்குள் பிரவேசிக்கவும் இடமளிக்க வில்லை. நான் இன்றும் அதே கொள்கையில்தான் உள்ளேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டிலிருந்து எடுத்து வரப்படும் பால் மாவானது யார் என்னதான் சொன்னாலும், ஆரோக்கியமான மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், உள்நாட்டு பால் உற்பத்தி அபிவிருத்தியடைய வேண்டும்.
நாம் பால் மா கம்பனிக் காரர்களுக்கு அடிமைப்பட்டு, அந்த கம்பனிக் காரர்களுக்கு இந்நாட்டு மக்களின் சுகாதாரத்தை தீர்மானிக்கும் நிலைமையை ஏற்படுத்துவது பாரிய தவறாகும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.