உலகக் கோப்பை 2019




ஐசிசி உலகக் கோப்பை 2019 தொடரின் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
ப்ரிஸ்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸை வென்று பேடிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களை எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் ரமத் ஷா 60 பந்துகளில் ஆறு பவுண்டரிகளை விளாசி, 43 ரன்களை எடுத்திருந்தார். நஜிபுல்லா 49 பந்துகளில், 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்களை எடுத்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது
ஆப்கானிஸ்தான்படத்தின் காப்புரிமைAFGHANISTAN CRICKET/TWITTER
38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 207 ரன்களை எடுத்தது.
அதன்பின் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 209 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

சிறப்பாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி

அனைத்து விதத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 114 பந்துகளில் எட்டு பவுண்டரிகளுடன், 89 ரன்களை எடுத்திருந்தார் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 49 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களை எடுத்தார்.
இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி வியாழனன்று, ட்ரெண்ட் பிரிட்ஜில் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி செவ்வாயன்று கார்டிஃபில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நடைபெற்ற சர்வதேச போட்டி தொடர்களில் வெற்றிப் பெற்று நல்ல ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சர்வதேச போட்டிகளில் இது ஒன்பதாவது தொடர் வெற்றி.

இலங்கை அணியை வீழ்த்திய நியூசிலாந்து

முன்னதாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
கார்டிஃப்பில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே, ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 137 என்ற இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
கிரிக்கெட்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES
தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 51 பந்துகளில் 73 ரன்கள் மற்றும் காலின் மன்றோ 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தனர்.
அணித்தலைவர் திமுத் கருணரத்னே ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததே இலங்கை அணிக்கு அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், மேத்யூஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.
நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு முறை கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி, இந்த உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
புள்ளிகள் தரவரிசையில், 2 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி முறையே முன்று மற்றும் நான்காம் இடங்களிலும்உள்ளன.
வரும் ஜூன் 5ஆம் தேதி, சவுத் ஆம்ப்டனில் இந்தியா அணி தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.