சம்பந்தனைச் சமாளிக்க தீவிர முயற்சியில் ரணில்!




கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழு நிர்வாக அதிகாரத்துடன் தரமுயர்த்தும் விடயத்தில் ரணில் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் கொதித்துப் போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியிருக்கின்றார்.
இதன் ஓர் அங்கமாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன நேற்று வெள்ளிக்கிழமை 9.30 மணியளவில் இரா.சம்பந்தனை அவரது வீடு தேடிச் சென்று சமரசப் பேச்சில் ஈடுபட்டார்.
முன்னர் இரு தடவைகள் சம்பந்தனைச் சந்திக்க அமைச்சர் வஜிர எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து நேற்று வீடு தேடிப்போய் அவர் சந்தித்திருக்கின்றார்.
முன்னதாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் புறக்கணித்தனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. அதற்கு நிபந்தனையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டு கணக்காளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு உடன்பட்டு எழுத்துமூலம் உறுதி வழங்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை முன்வைத்திருந்தார். முதலில் கணக்காளர் நியமனம் இடம்பெறட்டும். அதன் பின்னர் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தொடர் சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்திப்புக்கு அழைத்துள்ளனர்.
வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளர் பதவியைப் பொறுப்பேற்கவில்லை. முதலில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். அதன் பின்னர் பேசலாம் என்று அவர்களிடம் தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் தொடர்புகொண்டு சந்திப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.
மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு, நீங்கள் சந்திப்புக்கு வரத்தேவையில்லை. கோடீஸ்வரனைச் சந்திப்புக்கு அழைத்துள்ளோம் என்று சாரப்பட சுமந்திரனிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும், வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமைச்சருக்குப் பதில் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை. இதனையடுத்தே கொதித்துப் போயுள்ள கூட்டமைப்பினரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ரணில் தரப்பு இறங்கியிருக்கின்றது.