தலைவர்கள் இல்லாத போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?

நவீனகால உலகம் இதுவரை பார்க்காத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹாங்காங் மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே இல்லாததே இப்போராட்டத்தின் சிறப்பம்.
ஆனால், ஹாங்காங் முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது ஒரு டெலிகிராம் (குறுஞ்செய்தி செயலி) குழுவில் இருப்பதாகவும், அவற்றை நிர்வகிப்பதற்கு பலர் தன்னார்வலர்களாக செயல்படுவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அதாவது, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து நடைபெற்று வரும் இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை, நூற்றுக்கணக்கான டெலிகிராம் குழுக்களை நடத்தும் சிலர் வழி நடத்துகின்றனர்.
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் வாக்குப்பதிவு

போராட்டங்களுக்கான அழைப்புகள் செய்தி பலகைகள், மறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் வழியாக முகம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில குழுக்களில் எழுபது ஆயிரம் பேர், அதாவது ஹாங்காங்கின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு சிலர் எங்கு, எப்போது போராட்டம் நடைபெறும் என்று அவ்வப்போது தெரிவித்து வரும் வேளையில், மற்ற உறுப்பினர்கள் போராட்டத்திற்கு எதிராக அரசாலும், காவல்துறையாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்கின்றனர்.
மேலும், வழக்கறிஞர்கள், முதலுதவி அளிப்பவர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றோருக்கென பிரத்யேக குழுக்கள் டெலிகிராம் செயலியில் செயல்பட்டு வருகிறது. போராட்டம் தொடர்பான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அவர்கள் வழங்குவார்கள்.
போராட்டம் தொடர்பாக பல்வேறு விடயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கும் , இணைந்து செயல்படுவதற்கும் இதுபோன்ற திறன்பேசி செயலிகள் மிகவும் பயன்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலைவர்கள் அற்ற ஹாங்காங் போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?
போராட்டம் தொடர்பாக அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் டெலிகிராம் செயலியில் வாக்குப்பதிவு நடத்தி, பெரும்பான்மையானோர் விரும்பும் வழி பின்பற்றப்படுகிறது. உதாரணமாக, கடந்த மாதம் 21ஆம் தேதி, சுமார் 4,000 போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை மாலைநேரத்தை கடந்து தொடருவதா அல்லது முடித்துக்கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வாக்கெடுப்பில் பங்கேற்றனர். டெலிகிராம் மட்டுமின்றி மற்ற சில செயலிகளும் போராட்டத்தை ஒழுப்படுத்துவதற்கு உதவியதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கிடையே கோப்புகளை எளிதாக பகிர உதவும் 'ஆர்டிராப்' எனும் செயலியின் மூலம் போராட்டம் தொடர்பாக விளம்பரங்கள் ஹாங்காங் முழுவதும் பரப்பப்பட்டது.
அதே வேளையில், இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச அளவிற்கு எடுத்துச்செல்வதற்காக செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்ய தேவைப்படும் நிதியை, பெயர் அறியப்படாத குழுவினர் இணையதளம் வாயிலாக அரை மில்லியனுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. தலைவர்களற்ற இந்த போராட்டத்தை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

அடையாள மறைப்பு

தலைவர்கள் அற்ற ஹாங்காங் போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?படத்தின் காப்புரிமைEPA / GETTY IMAGES
"ஹாங்காங் அரசு அதிகாரிகளின் மீதான அவநம்பிக்கையின் விளைவாகவே நான் இதை பார்க்கிறேன்" என்று கூறுகிறார் ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் எட்முண்ட் செங். "வரலாற்று சிறப்புமிக்க 'குடை இயக்க' போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று கடந்த 2014ஆம் ஆண்டு இதே ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி கூறுகிறார்.
"நீங்கள் ஒரு திட்டமிடப்பட்ட இயக்கத்திலோ அல்லது போராட்டத்திலோ பங்கேற்றால் உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது" என்று கூறுகிறார் தனது பெயரை வெளியிட விரும்பாத போராட்டக்காரர் ஒருவர்.
தங்களது மின்னணு செயல்பாட்டை கொண்டு அரசு தங்களை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் தெளிவாக உள்ளனர்.
"போராட்டத்தின்போது நாங்கள் பண அட்டைகளை பயன்படுத்துவதே இல்லை; கையில் எப்போதுமே பணம் வைத்திருப்போம்" என்று கூறுகிறார் தனது தோழியோடு இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள 25 வயதான ஜானி.
அதுமட்டுமின்றி, ஒவ்வொருமுறை போராட்டங்களில் பங்கேற்கும்போதும், இவர் தனது பழைய அலைபேசியையும், புதிய சிம் கார்டையும் பயன்படுத்துகிறார்.

பாதுகாப்பு

தலைவர்கள் அற்ற ஹாங்காங் போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
போராட்டம் குறித்த இடம், நேரம், வாசகங்கள் உள்ளிட்டவை குறித்து திட்டமிடுவதற்கும், வாக்கெடுப்புகளை எடுப்பதற்கும் திறன்பேசி செயலிகள் மிகவும் பயன்படுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரையும் அரசு கைதுசெய்யப்போவதில்லை. அது இயலாத ஒன்றும் கூட" என்று கூறுகிறார் தனது பெயரை வெளியிட விரும்பாத போராட்டக்காரர் ஒருவர்.
ஆனால், காவல்துறை இதுபோன்ற இணையதள குழுக்களின் முக்கியமான நபர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முயற்சிப்பதாக கூறுகிறார்.
ஜூன் 12 அன்று, டெலிகிராம் குழு ஒன்றின் உறுப்பினர் ஒருவர் ஹாங்காங்கின் அரசு வளாகத்தை தாக்கவும், அதனை சுற்றியுள்ள சாலைகளை மறிக்கவும் மற்றவர்களுடன் சதி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
"நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தி உங்களது அடையாளத்தை மறைத்து செயல்பட்டாலும், நாங்கள் உங்களை வீடு தேடி வந்து கைது செய்வோம்" என்று போராட்டக்காரர்களுக்கு உணர்த்துவதற்கு அரசு தரப்பு முயற்சிக்கிறது" என்று கூறுகிறார் கைதுசெய்யப்பட்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள் சார்பாக வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் பாண்ட்.


Advertisement