ஐ.தே. க. அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை




(க.கிஷாந்தன்)
50 ரூபாய்க்கு தீர்வு வராவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாகவும் நாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கந்தப்பளை பாக் கொலனி, நோனாதோட்டம், பூப்பனை கீழ் பிரிவு ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லியன் ரூபா வீதம் அமைக்கப்பட்ட மூன்று பாதைகளை திறந்து வைத்த பின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனை உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஒரு தொகை சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் ஊடாக தேயிலை சபையின் ஊடாக 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 50 ரூபாய் வழங்க முடியும் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்திருந்தார் இதனை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்றுக்கொண்டது.
ஆனால் இதுவரையில் அந்த ஐம்பது ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வில்லை இது பெருந் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
கடந்த வாரத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க இந்த கொடுப்பனவு தொகை வழங்கப்பட்டால் தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?இந்த தொகை கிடைக்காவிட்டால் நாங்களும் அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். இதனை எங்களுடைய முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் களில் ஒருவரான அமைச்சர் பழனி திகாம்பரம் தெளிவாக தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்த அளவில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அமைச்சிலிருந்து விளங்குவதாலும் அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து விலகுவதால் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை.
எனவே அமைச்சர் நவீன் திசாநாயக்க தொழிலாளர்களின் பக்கம் நின்று இந்த தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் இதனையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ஏனென்றால் அவர்கள் இந்த தொகையை ஏற்கனவே வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.
50 ரூபாய்க்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ள அல்லது ஏற்படுத்த உள்ள கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இடம்பெறுமா? அல்லது வேறு தீர்மானங்களை எடுக்குமா? என்பது தொடர்பாக கூட்டணியின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவைப்படும்.
எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அமைச்சர் நவீன் திசாநாயக்க அதேபோல பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.