சடலம் மீட்பு




(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் 30.09.2019 அன்று மதியம் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த குடும்பஸ்தரான பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் 2 நாட்களின் பின் 02.10.2019 அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் கெசல்கமுவ ஓயாவிற்கு அருகாமையில் தெரேசியா தோட்டப் பகுதியில் தோண்டப்பட்டிருந்த பாரிய மாணிக்ககல் குழி ஒன்றில் இருந்து  மீட்கப்பட்டுள்ளது.

30.09.2019 அன்று மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரபகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இவரை மீட்கும் பணியில் பொகவந்தலாவ பொலிஸார், பொகவந்தலாவ, தெரேசியா, கிலானி, மோரா ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த  மக்கள் கடந்த இரண்டு தினங்களாக தொழிலுக்கு செல்லாது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை காணாமல் போன நபரை தேடும் பணிக்காக பொகவந்தலாவ பொலிஸாரின் ஊடாக கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற் படையினர் வரவழைக்கபட்டு இரண்டு நாள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 02.10.2019 அன்றைய தினம் சடலமாக குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில்  மரண விசாரனையாளர் திருமதி. லக்சுமி தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.