ஜனாதிபதித் தேர்தல், கிழக்கில் முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?




ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு உருவான நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் கிழக்கு இலங்கை இஸ்லாமியர்கள், தற்போதைய ஜனாதிபதி குறித்து கடும் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். ஆனாலும், உள்ளூர் காரணிகளும் அவர்களின் வாக்களிக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
இலங்கையில் பிகில் படத்திற்காக வைக்கப்பட்ட கட் - அவுட்கள்கூட ஆங்காங்கே கண்ணில் படுகின்றன. ஆனால், தேர்தல் தொடர்பான கட் - அவுட்கள் பெரிதாக இல்லை. கடந்த மாதம் கட் - அவுட்களுக்கும் பேனர்களுக்கும் தேர்தல் ஆணையம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக, தேர்தல் அலுவலகங்கள், பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களைத் தவிர, இலங்கையில் வேறெங்கும் பேனர்களையோ கட் - அவுட்களையோ பார்ப்பது கடினமாக இருக்கிறது.
புதிதாக வரும் ஒருவருக்கு, இலங்கையில் உண்மையிலேயே தேர்தல் நடக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த அளவுக்கு சத்தமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது ஜனாதிபதி தேர்தல் பிரசாரம்.
ஆனால், பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் இந்தத் தேர்தலை வெகுவாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். "நாங்கள் முஸ்லிம்கள் என்ற அடையாளத்துடன் நாடு முழுவதும் செல்ல விரும்புகிறோம். வர்த்தகம் செய்ய விரும்புகிறோம். எங்கள் சமயக் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம். ஆனால், கடந்த சில மாதங்களாக எங்கள் அடையாளம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தேர்தலில் வெளிப்படுத்துவோம்" என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த ஜெஹ்மூத் நிஷா.
இலங்கைபடத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI
இது இஸ்லாமியத் தரப்பிலிருந்து கேட்கும் ஒரு முக்கியமான குரல். கிழக்கு மாகாணத்தில் இந்தக் குரல் பல்வேறு விதங்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது.
கொழும்பு நகரைத் தவிர, இலங்கையில் பல இன மக்கள் கலந்து வாழும் ஒரு பிரதேசம், கிழக்கு மாகாணம். மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய இந்த மாகாணத்தில் தமிழர்கள் (இந்துக்கள், கிறிஸ்தவர்கள்), சிங்களர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என மூன்று பிரதான இனத்தினரும் கலந்து வாழ்கிறார்கள்.
2012ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையில் 19,67,523 இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இது அந்நாட்டின் மக்கள்தொகையில் 9.66 சதவீதம். இலங்கையிலேயே அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக மக்கள் தொகையில், 43 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். திரிகோணமலையில் 42 சதவீதம் பேரும் மட்டக்களப்பில் 26 சதவீதம் பேரும் உள்ளனர்.
மொத்தமுள்ள சுமார் 19 லட்சத்து 60 ஆயிரம் இஸ்லாமியர்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே வசிக்கிறார்கள். அதாவது இஸ்லாமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வட-கிழக்கிலும் மீதமுள்ளவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் பரவி வசிக்கிறார்கள்.
ஆகவே, இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்கள் யாருக்கு வாக்களிக்கவிருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. பிரதான இஸ்லாமிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜீத் பிரேமதாஸவை ஆதரிப்பாதக முடிவுசெய்துள்ளன. அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும் பஷீர் சேகு தாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளன.
கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப்படம்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தற்போதைய ஆட்சி குறித்த அதிருப்தி, பொருளாதார நிலைமை போன்றவை வாக்காளர்களின் வாக்குகளைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த யுத்தமும் அதன் இறுதிக் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களும் இன்னும் இப்பகுதி மக்களின் நினைவுகளில் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி தொடர்பான அதிருப்தி இருந்தாலும், எதிர்க் குரல் கொடுப்பதற்கான ஜனநாயக வெளி உருவாகியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
ஆகவே போர்க் காலத்தில் பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மீது ஒரு அச்ச உணர்வு இன்னமும் நீடிக்கிறது.
இரண்டாவதாக, அந்தந்த பகுதிகளுக்கான உள்ளூர் பிரச்சனைகளும் இந்த ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைAFP
Image captionஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ
குறிப்பாக, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்த மருது பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நெடுங்காலமாக தங்கள் பகுதியைத் தனியாகப் பிரித்து, தங்களுக்கென ஒரு நகர சபையை அமைத்துத் தர வேண்டுமெனக் கோரி வருகிறார்கள்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை அந்தப் பகுதி மக்கள் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த கோரிக்கைக்கு கல்முனை பிரதேச முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால், எந்த அரசும் இதனை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.
சாந்த மருது நகர சபையை பிரித்துத் தருவதாக வாக்குறுதியளித்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதனை நிறைவேற்றாத காரணத்தால் இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லையென இப்பகுதி இஸ்லாமியர்கள் முடிவெடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
அதேபோல, கல்முனையிலும் 29 கிராமசேவைப் பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஒரு தனி உள்ளூராட்சி செயலகத்தை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்துவருகிறது. ஆனால், அதற்கும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகவே இங்கு தமிழர்களில் ஒரு பிரிவினரும் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவுசெய்திருக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸ (வலது)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸ (வலது)
இது தவிர, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா போன்ற உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கின் காரணமாக பேத்தாழை, சந்திவெளி, வாழைச்சேனை போன்ற இடங்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்குகள் கணிசமாக விழக்கூடும்.
இந்தப் பகுதிகளில் அவர்கள் வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி, வாக்குளைத் திரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
"கடந்த இரண்டு ஆட்சிகளிலுமே இஸ்லாமியர்கள் இனவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். ராஜபக்சே ஆரம்பித்தார் என்றால், ரணில் அதைத் தொடரவே செய்தார். இருந்தபோதும் சஜித்துடன் பேச முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறது" என்கிறார் உள்ளூராட்சி சபை உறுப்பினரான ஏ.எல்.எம். சபீல்.
ஞானசார தேரர் போன்றவர்களை ஊக்குவித்து, அளுத்கம போன்ற இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தியது ராஜபக்ஷ தரப்பு என சுட்டிக்காட்டும் அவர், அவர்கள் மீண்டும் வந்தால் அதைப் போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதம் மீண்டும் தலையெடுக்கும் என்ற அச்சம் இஸ்லாமியர்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: கிழக்கிலங்கை இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY IMAGES
ஆனால், இதனை வெறும் தமிழர், முஸ்லிம் பார்வையாக மட்டுமே பார்க்கக்கூடாது என்கிறார் சபீல். இதனால், அவரைப் போன்றவர்கள் ஜனதா விமுக்தி பெரமுன சார்பில் போட்டியிடும் அனுர குமார திஸாநாயகவை ஆதரிக்கின்றனர்.
"திரும்பத் திரும்ப இரு கட்சிகளில் ஒன்றைத் தேர்வுசெய்வது நாட்டைச் சீரழித்துவிட்டது. அதனால், எல்லோருக்கும் நல்லது செய்யக்கூடிய ஒருவரைத் தேர்வுசெய்ய வேண்டுமெனக் கருதுகிறேன்" என்கிறார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் இந்தப் பகுதியில் ஓர் அழிக்க முடியாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுந்த உணர்வு, இப்பகுதி மக்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது.
இதற்குப் பிறகு, இஸ்லாமியப் பெண்கள் முகம் முழுவதையும் மூடிச் செல்ல விதிக்கப்பட்ட தடை போன்றவை, தங்கள் சுதந்திரத்தில் கடுமையாகக் குறுக்கிடுவதாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
காத்தான்குடியில் வசிக்கும் பெண்களில் பலர் வெளிப்படையாகவே இது குறித்துப் பேசுகிறார்கள். "அந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது இடங்களில் முகத்தை மூடிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. எங்கள் மத அடையாளத்தின் காரணமாக கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டோம்" என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த ஃபஜ்மியா ஷெரீஃப்.
இந்தியாவைப் பொறுத்தவரை இனிமேல், பொருளாதாரம் சார்ந்தே இலங்கையுடனான உறவை வரையறுக்கும் - மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்படத்தின் காப்புரிமைRAVEENDRAN / GETTY IMAGES
Image captionஇந்தியாவைப் பொறுத்தவரை இனிமேல், பொருளாதாரம் சார்ந்தே இலங்கையுடனான உறவை வரையறுக்கும் - மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்
தவிர, கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்பட்ட கருத்தடை மாத்திரை விவகாரம் போன்ற நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள், தேர்தலுக்குப் பிறகு தாங்கள் தாக்கப்படுவோமோ என்ற அச்சம் ஆகியவையும் இப்பகுதி மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. இந்தக் கவலைகள், எதிர்காலம் குறித்த அச்சம், வளமான வாழ்வு குறித்த எதிர்ப்பார்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக இப்பகுதியில் அதிகம் வசிக்கும் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது மற்றொரு முக்கியமான முக்கியமான கேள்வி. அம்பாறை மாவட்டத்தில் சுமார் 17 சதவீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 72 சதவீதமும் திரிகோணமலையில் சுமார் 31 சதவீதமும் தமிழர்கள் வசிக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் பிரதான தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கில் வசித்த தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த மைத்திரி பால சிறிசேனவுக்கே வாக்களித்தனர்.
ஆனால், இந்த ஆட்சியில் தமிழர் அதிகாரப் பகிர்வு விவகாரம் தொடர்பாக ஏந்த முன்னேற்றமும் இல்லாதது தமிழர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
"தமிழ்தேசியக் கூட்டமைப்பு சொல்வதற்காக அல்ல, சஜீத் சிறந்தவர் என்பதற்காகவாவது அவரை இப்பகுதி மக்கள் தேர்வுசெய்வார்கள். குறைந்தது இப்பகுதியிலிருந்து 75 சதவீத தமிழர்களின் வாக்குகள் அவருக்குத்தான் கிடைக்கும்" என்கிறார் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரன்.
முஸ்லிம் பெண்கள்படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES
இது ஒரு பக்கமிருக்க, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும் தேர்தல் கணக்குகளை வெகுவாக பாதிக்கின்றன. பெரும்பான்மை முஸ்லிம்கள் சஜீத்தை ஆதரிப்பதால், தமிழ் மக்கள் சிலரிடத்தில் கோட்டாபயவை ஆதரிக்கலாம் என்ற எண்ணம் எழுந்திருக்கிறது.
"சஜீத் வெற்றிபெற்றால், இஸ்லாமியர்கள் இன்னும் மோசமாக நடந்துகொள்வார்கள் என பலர் இனவாதக் கருத்துகளைப் பேசிவருகிறார்கள். ஆனால், ராஜபக்ஷேவோடு யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அவரோடு உள்ள அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்கள் தமிழர்களுக்கு ஏதும் கிடைக்காமல் தடுத்தவர்கள். வடக்கு - கிழக்கு இணைப்பை எதிர்த்தவர்கள். ஆனால், சஜீத் பக்கம் உள்ள முஸ்லிம் தலைவர்கள் ஒப்பீட்டளவில் மோசமானவர்கள் அல்ல என்பதை தமிழர்கள் உணர வேண்டும்" என்கிறார் கோடீஸ்வரன்.
இப்போதைய சூழலில் இலங்கையில் வசிக்கும் சிறுபான்மையினருக்கான கட்சிகளில் பெரும்பாலானவை சஜீத்தை ஆதரிக்க முடிவுசெய்திருக்கின்றன. ஆனால், அந்த ஆதரவுக்கான காரணங்கள் வெவ்வேறானவை என்பதால், தேர்தல் முடிந்த பிறகும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் தமிழர் - இஸ்லாமியர் இடையிலான முரண்கள் தொடர்ந்து நீடிக்கக்கூடும்.