ஹேக் செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக இணையதளம்




குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வியாழக்கிழமை அன்று `Dark Knight' என்கிற பெயர் கொண்ட ஹேக்கர் ஒருவரால் ஊடுருவப்பட்டது.
Anti CAA Protest
Anti CAA Protest
AP
ஒருபக்கம் மாணவர் போராட்டங்கள் போலீஸாரால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றன. மற்றொரு பக்கம் போராட்டத்துக்கு ஆதரவாக பல போராட்டங்கள் ஆங்காங்கே கிளர்ந்து வருகின்றன. ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள், பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள், ஜாதவ்ப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் என நாடு முழுவதும் அரசு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மாணவர்கள் மேல் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அவர்களது பேரரசின் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.
இந்த நிலையில் நேற்று மாலை ஜாமியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் `Dark Knight' என்ற பெயரைக் கொண்ட ஹேக்கர் ஒருவரால் ஊடுருவப்பட்டது. ஊடுருவப்பட்ட இணையதளத்தில் ``ஜாமியா மாணவர்களை ஆதரிக்க டார்க் நைட்டால் (dark knight) ஊடுருவப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாமியா போராட்டம்
ஜாமியா போராட்டம்
மேலும், "ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் அடிக்கும்போது வலிமையாக எழுந்திருங்கள்! மோடி - ஷா இருவரும் நம்மை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டனர். நாம் மாணவர்கள். குடிமக்களின் தேசிய பதிவின் கீழ் மக்கள் எப்படி வெளிநாட்டவர்களாக்கப்பட்டு பின்பு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களில் முஸ்லிம்கள் தவிர்த்து மற்றவர்கள் குடியுரிமம் பெறுவார்கள் என்பது தெரியும். மாணவர்கள் மேல் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அவர்களது பேரரசின் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டிய நேரம் இது. ஹாங்காங் மாணவர்களைப் போன்று உலக மேடையில் நமது போராட்டத்தையும் தெரியப்படுத்த வேண்டும். இது நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய நேரம்" எனவும் எழுதப்பட்டிருந்தது. ஊடுருவப்பட்ட சில மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டாலும் இந்தப்பதிவு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.