உலகில் முதல் ஐந்து அழகிப் பட்டங்களை வென்று சாதனை படைத்த கறுப்பினப் பெண்கள்




சனிக்கிழமை நடந்த உலக அழகிப் பட்டத்துக்கான 69வது போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த டோனி-ஆன் சிங் மகுடம் சூட்டினார். இன பாகுபாடு உணர்வுடன் நடந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு முடிவு மாறுபட்டதாக இருந்தது.
இந்தப் போட்டியில் பட்டம் வென்ற ஜமைக்காவைச் சேர்ந்த நான்காவது நபராக 23 வயதான இந்த மாணவி உள்ளார். 111 நாடுகளில் இருந்து வந்தவர்களின் போட்டியை முறியடித்து இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.
உளவியல் மற்றும் மகளிர் குறித்த ஆய்வுகள் துறையில் பட்டப்படிப்பு பயின்று வரும் டோனி-ஆன் சிங், மருத்துவம் பயின்று டாக்டராக விரும்புவதாக, பின்னர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
``ஜமைக்காவில் புனித தாமஸில் உள்ள சிறுமியும், உலகெங்கும் உள்ள அனைத்து சிறுமிகளும் - தயவுசெய்து உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது, உங்கள் கனவுகளை உங்களால் எட்ட முடியும், நீங்களும் முக்கியமானவர்கள் என்பதை தயவுசெய்து அறிந்திடுங்கள்.'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


டோனி-அன் சிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஉலகில் மாற்றத்தை கொண்டு வரும் பெண்களின் தலைமுறையை இவர் பிரிதிநிதித்துவப்படுத்துவதாக டோனி-ஆன் சிங் தெரிவிக்கிறார்.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோஜிபினி ட்டுன்ஜி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இந்தத் துறையில் அழகு என்பதற்கான வரையறைகளை வெளிப்படையாக விமர்சித்தவர் அவர். இயற்கையான தனது தலைமுடியுடன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
``என்னைப் போன்ற தோற்றம் உள்ள - என்னைப் போன்ற தோல் மற்றும் தலைமுடி உள்ள - பெண்கள் ஒருபோதும் அழகானவர்களாக மதிக்கப்படாத உலகில் நான் வளர்ந்திருக்கிறேன்'' என்று வெற்றிக்குப் பிறகு அவர் கூறியுள்ளார்.
``அது இன்று முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் என்னையும், என் முகத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தங்களுடைய முகங்கள் என்னில் தெரிவதை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.''
தொலைக்காட்சி நட்சத்திரம் ஓப்ரா வின்பிரே அவரைப் பாராட்டியுள்ளார். ``பாராட்டுகள் மிஸ் தென்னாப்பிரிக்கா, புதிய மிஸ் யுனிவர்ஸ் @zozitunzi ! உமது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். இன்றைய இளம்பெண்களுக்கு நாம் தலைமைத்துவம்தான் வலிமை மிக்கது என்பதை கற்பிக்க வேண்டும்'' என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
அவருக்கு முன்னதாக மூன்று அமெரிக்க அழகிப் போட்டிகள், நீண்டகாலமாக பாரபட்சமான செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டவற்றில், அனைத்திலுமே 2019 ஆம் ஆண்டுக்கான பட்டங்கள் கறுப்பினப் பெண்களுக்கே அளிக்கப்பட்டன.
செப்டம்பரில் மிஸ் அமெரிக்காவாக நியா பிராங்கிளின் தேர்வு செய்யப்பட்டார். மிஸ் டீன் யு.எஸ்.ஏ.வாக கலியக் கேரிஸ் தேர்வானார். மிஸ் யு.எஸ்.ஏ.வாக செஸ்லி க்ரிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
1940கள் வரையில், ``வெள்ளையர் இனம்'' அல்லாதவர்கள் மிஸ் அமெரிக்கா போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் விதிகள் மாற்றப்பட்ட போதிலும், 1970 வரையில் கறுப்பர் இன பெண்களில் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
மிஸ் வேர்ல்டு போட்டியில் மிஸ் ஜமைக்கா பட்டம் பெற்றிருப்பது சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அழகுக்காக மட்டும் தேர்வு செய்யப்படுவதில்லை என்றும், சமூகத்துக்கு அர்த்தம் உள்ள பங்களிப்பு செய்யும் தன்மையின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் அமெரிக்க சிவில் உரிமைகள் வழக்கறிஞர் கிரிஸ்டன் கிளார்க் கூறியுள்ளார்.
``மிஸ் வேர்ல்டு டாக்டராக வேண்டும் என திட்டமிட்டுள்ளார். மிஸ் யு.எஸ்.ஏ. சிறைவாசிகள் சார்பாக பணியாற்றுகிறார். மிஸ் யுனிவர்ஸ் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். மிஸ் அமெரிக்கா, கலைகளுக்கு முக்கியத்துவம் தருபவராக உள்ளார். மிஸ் டீன் யு.எஸ்.ஏ.வாக தேர்வானவர், மாற்றுத்திறன்கள் கொண்ட மக்களுக்காக லாப நோக்கமற்ற உதவி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள் அனைவரும் கறுப்பர் இனத்தவர்கள்'' என்று அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமை சிங் வெற்றி பெற்றது குறித்து மிஸ் நைஜீரியா கூறிய கருத்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் தருணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் ஐந்தாவது இடம் பெற்ற நியெகச்சி டக்ளஸ், வெற்றியாளர் பெயரை அறிவித்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, உற்சாகமாகக் குரல் எழுப்பினார்.
பல அழகிப் போட்டிகளில் சமீப காலமாக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்கும் போட்டியாளர்களின் உடல் அமைப்பு என்ற வரையறையை விரிவுபடுத்தி, அவர்களின் சாதனைகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.
உதாரணமாக, கடந்த ஆண்டு, நீச்சல் உடை போட்டியை கைவிடப் போவதாக மிஸ் அமெரிக்கா அமைப்பு அறிவித்தது.
லண்டனில் கேள்விச் சுற்றுகளில் பதில் அளித்த சிங், ``உலகில் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும், ஒரு தலைமுறையைச் சேர்ந்த, விசேஷமான பெண்களின்'' பிரதிநிதியாக தாம் உள்ளதாக கூறினார்.