சடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை



சடலங்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் 1000 உறைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் இலங்கை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸின் கையெழுத்துடன் இந்த உறைகளுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலங்களை பொதி செய்யும் 1000 உறைகள் கோரப்பட்ட நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பாரிய அச்ச நிலைமையொன்று இன்று ஏற்பட்டது.
கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பெருமளவானோர் உயிரிழந்துள்ளார்களா என்ற அச்ச நிலைமை ஏற்பட்டதை அடுத்து பிபிசி தமிழ், டொக்டர் சுனில் டி அல்விஸை தொடர்புக் கொண்டு வினவியது.
கொவிட் காரணமாக அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
ஏதேனும் உயிரிழப்புக்களில் சந்தேகங்கள் நிலவும் பட்சத்தில், அவ்வாறான பூதவுடல்களை பாதுகாப்பான உறைகளில் பொதி செய்தே அவற்றை அடக்கம் செய்வது வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.
1000 உறைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அவ்வாறான நிலையில், இலங்கையில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புக்கள் பதிவாகும் பட்சத்தில் அவற்றை அகற்றுவதற்கான உறைகள் பற்றாக்குறை நிலவியமையினால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த உறைகளை பெற்றுத் தருமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியுள்ளதாகவும் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு கோரிக்கை கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்தில், அந்த உறைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சிலுவை சங்கம் அறிவித்த பின்னணியிலேயே தான் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக டொக்டர் சுனில் டி அல்விஸ் பிபிசி தமிழுக்கு கூறினார்.
கொவிட் - 19 உயிரிழப்புக்கள் மாத்திரமன்றி, அனைத்து விதமான சந்தேகத்திற்கிடமான சடலங்களை பொதி செய்து, அகற்றுவதற்காக இந்த உறைகள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.