ஆலையடிவேம்பில்,அங்குரார்ப்பணம்


வி.சுகிர்தகுமார்
 

  உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில நடைபெற்றது.

பேரவையின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளரும்; உதவிக்கல்விப்பணிப்பாளருமான சுந்தரம் ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பேரவையின் இலங்கைக்கான தலைவர் எஸ்.சிவபாலன், உபதலைவர் ஒ.குலேந்திரன், பொதுச் செயலாளர் க.நேமிநாதன், பிரச்சார செயலாளர் றேமன்சோதி ஜெரோம், உறுப்பினர்களான க.யோகானந்தம், சுஜந்தினி யுவராஜா, தி.கோபகன் செயலாற்றுக்குழு உறுப்பினர்களான த.பாலசுப்ரமணியம், த.கரிகாலன் உள்ளிட்டவர்களும்  அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பல்துறை கலைஞர்களும் பங்கேற்றனர்.

கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் சு.ஸ்ரீதரனின் அறிமுக உரையோடு ஆரம்பமான நிகழ்வில்; உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் நோக்கம் பற்றிய விரிவான விளக்கத்தினை பேரவையின் இலங்கைக்கான தலைவர் எஸ்.சிவபாலன் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வானது ஜாதி மத குல வேறுபாடின்றி தமிழால் மாத்திரம் ஒன்றிணையும் நிகழ்வு எனவும் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் உலகத்தில் பரந்து வாழும் தமிழ் கலைஞர்கள் அனைவரும் ஓரணியாய் பேரணியாய் திரளும் மாபெரும் ஒன்று கூடல் 2021 ஆம் ஆண்டு திருகோணமலையில் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது என பேரவையின் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நிகழ்வில் சமர்ப்பிக்கும் பொருட்டு தமிழர் தம் பாரம்பரிய கலைகள் மற்றும் இசைக்கருவிகளின் வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு எமது பண்பாட்டு கலைகளின் தொன்மையை பறைசாற்றும் நாடக மற்றும் நடன கலைஞர்களின் ஆற்றல்களுக்கு களம் அமைக்கும் மாபெரும் அரங்கமாகவும் இந்நிகழ்வு அரங்கேற காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன் முன்னோடியாக இடம்பெறும் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பணம் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த கலைஞர்கள் தமிழால் ஒன்றிணையும் இச்சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் கிழக்கில் அழிந்து செல்லும் பண்பாட்டு கலைகளின் தொன்மையை பறைசாற்றும் கலைஞர்களின் ஆக்கங்களை ஆவணப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.