அறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்





வி.சுகிர்தகுமார் 0777113659 
  

  அறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரையாகி வருவதனால் அம்பாரை மாவட்ட விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எந்தக்களை நாசினிக்கும் கட்டுப்படாத இப்பூச்சியானது விரைவாக வயல் நிலங்களை தாக்கிவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 இதேநேரம் யானைகளின் ஊடுருவலாலும் விவசாய நிலங்கள் அழிவடைந்து செல்வதாகவும் நாளாந்தம் யானைகளின் தாக்கத்திலிருந்து வயல்நிலங்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

அம்பாரை மாவட்டத்தில் 63000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் யானை மற்றும் அறக்கொட்டி தாக்கம் காரணமாக தமது வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் யானை தொல்லையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் அறக்கொட்டி தாக்கத்தினால் வயல் நிலங்களை கைவிட்டு வெளியேறியுள்ள விவசாயிகளுக்கு தகுந்த நஷ்ட ஈட்டினை வழங்கி கைதூக்கி விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் வயல் நிலங்கள் மூழ்கிய நிலையில் அறக்கொட்டி தாக்கம் ஏற்பட்டதனால் வேளாண்மை அழுகிய நிலைக்கு செல்வதையும் அருகில் உள்ள வயல் நிலங்களை அறக்கொட்டி பூச்சி தாக்கும் நிலை உருவாகிவருவதையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

ஆயினும் இத்தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பாரை மாவட்ட கரையோர பகுதிக்கு பொறுப்பான நெற்பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ.பெரோஸ்... விவசாய திணைக்களத்தின் அறிவுரைகளை செவிமடுக்காமல் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் விவசாய செய்கையினை விவசாயிகள் மேற்கொண்ட காரணத்தினாலேயே அறக்கொட்டித்தாக்கம் குறித்த சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அளவுக்கதிகமான உரப்பாவனை காரணமாகவும் இந்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
 
இருப்பினும் விவசாயிகள் தங்களது விவசாய செய்கையினை பார்வையிட்டு அறக்கொட்டித்தாக்கம் காணப்படும் பட்சத்தில் முதற்கட்டமாக விவசாய திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட யாவா  அல்லது அப்லோட் பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் முதிர்பூச்சிகள் காணப்படின்; செஸ்ட அல்லது அக்டரா போன்ற பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் இதனையும் தாண்டி தாக்கம் அதிகமாக காணப்படின் மாசல் அல்லது விபிஎம்சி பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.  இதனைத்தாண்டி விவசாயிகள் சுயவிருப்பில் புறம்பான முறையில் செயற்படும்போதே இதுபோன்ற தாக்கம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.