திருநர்களுக்கும் சமமான மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுப்பது சமூகத்தின் கடமை



 வி.சுகிர்தகுமார் 0777113659  

  சமூகத்தில் பல்வகைப்பட்ட இலிங்க அடையாளங்களை கொண்ட திருநர் என அழைக்கப்படும் ஆண் பெண் சமூக அடையாளங்களை கொண்ட மக்களுக்கான சமமான மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமயத்தலைவர்கள் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

 ஈகுவிட் சிறிலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் துசார மனோஜ் தலைமையில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் வளவாளராக ரி.சந்துரு கலந்து கொண்டதுடன் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள் ஆதில் சுராஜ்,  இரான் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் வாணி மற்றும் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள் சமயத்தலைவர்கள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் வாழும் பல்வகைப்பட்ட இலிங்க அடையாளங்களை கொண்ட திருநர் என அழைக்கப்படும் ஆண் பெண் சமூக அடையாளங்களை கொண்டவர்களுக்கு சமமான மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுப்பது சமூகத்தின் கடமை.

அதேநேரம் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஒதுக்கி வைத்தல் மற்றும் பாரபட்சமாக நடாத்துதல் போன்ற செயற்பாடுகளை எதிர்த்து சமூகத்தில் அவர்களையும் சமமான முறையில் மதிப்பதன் அவசியம் பற்றி இதன்போது வளவாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் வளவாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவற்றிற்கான பதில்களும் வழங்கப்பட்டது.  அத்தோடு திருநர் தொடர்பாக ஊடகங்களினால் பரப்பப்படும் தவறான கருத்துக்கள் தவிர்க்கப்பட்டு அவர்களும் சமமாக வாழ ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன் சமூக மட்டத்தில் இக்கருத்துக்களை கொண்டு செல்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதுடன் திருநர் என அழைக்கப்படும் ஆண் பெண் சமூக அடையாளங்களை கொண்ட மக்களுக்கான சம உரிமை பெற்றுக்கொடுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.