விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

 


இன்று (23) அதிகாலை 4.30 மணியளவில் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் மரணமடைந்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பாராளுமன்ற வீதியில், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் மற்றும் மேம்பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த பகுதியில் பட்டா வகை வாகனமொன்றை சோதனையிட்டுக் கொண்டிருந்த வேளையில், பத்தரமுல்லை திசையிலிருந்து பொரளை திசை நோக்கி அப்பகுதியால் வந்த வேன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், கொழும்பு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவைச் சேர்ந்த, குறித்த பொலிஸ் சோதனைக் குழுவிற்கு பொறுப்பான 52 வயதான உப பொலிஸ் பரிசோதகரும், நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்த பட்டா வகை வாகனத்தின் உதவியாளர் ஆகிய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.