தோல்விக்கு வித்திட்ட விராட்


இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது இந்தியா. முதலில் பேட் செய்த இந்திய அணி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, அந்த இலக்கை அடைந்தது இங்கிலாந்து. பேட்டிங் செய்தபோதும் சரி, பந்துவீசியபோதும் சரி, பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் மிகவும் மோசமாக விளையாடியதே இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.


அணித் தேர்வு சரியா?

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும்தான் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்று போட்டிக்கு முன்பு கூறியிருந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஆனால், இன்று ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளுக்குமே அவர் இருக்கமாட்டார் என்று டாஸின்போது தெரிவித்தார் கோலி. ஆனால், இந்திய அணியின் பௌலர் தேர்வுதான் கேள்விக்குள்ளானது.


யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், அக்‌ஸர் படேல் என இந்தப் போட்டிக்கு 3 முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செந்திருந்தது இந்தியா. ஆனால், இங்கிலாந்து அடில் ரஷீத்தை மட்டுமே களமிறக்கியது. ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் என 5 வேகப்பந்து ஆப்ஷன்கள் அந்த அணியில் இருந்தன. இந்தியாவுக்கோ, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா என 3 தேர்வுகள்தான். அதிலும் புவனேஷ்வர் குமார், பல மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். ஹர்திக் பாண்டியாவும் சிலபல மாதங்களாக அதிகம் பந்துவீசுவதில்லை. அப்படியிருக்கையில் குறைவான வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களோடு இறங்கினார் கோலி.


கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள்?

"இந்திய அணியில் ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இருந்திருக்கலாம். இரண்டாவது இன்னிங்ஸின்போது பனியின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால்தான் இரு கேப்டன்களுமே முதலில் பந்துவீச விரும்புவதாகக் கூறியிருந்தனர். அப்படியிருக்கையில் இந்தியாவுக்கு 3 ஸ்பின்னர்கள் கொஞ்சம் அதிகம்தான்" என்று கூறியிருந்தார் வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர்.


போட்டியின்போது அவர் சொன்னது சரிதானோ என்று தோன்றியது. அனுபவம் கொண்ட இந்திய ஸ்பின்னர்களால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களே வீழ்த்தியிருந்தாலும், ரன்களை ஆரம்பத்திலேயே வாரி வழங்கிவிட்டனர்.


அக்‌ஸர் படேல் : 3-0-24-0


யுஸ்வேந்திர சஹால் : 4-0-44-1


வாஷிங்டன் சுந்தர் : 2.3-0-18-1


விராட் கோலி - இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

பட மூலாதாரம்,SURJEET YADAV/GETTY

படக்குறிப்பு,

விராட் கோலி - இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்


குறிப்பாக தொடக்கவீரர்களான ஜாஸ் பட்லர், ஜேசன் ராய் இருவரும் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கினார்கள். சஹாலின் முதல் ஓவரிலேயே ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என அடித்து, சேஸிங்கை அமர்க்களமாகத் தொடங்கினார் ஜேசன் ராய். தன் பங்கிற்கு அக்‌ஸர் வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு பௌண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்தார் பட்லர். விக்கெட் எடுக்கவேண்டிய ஸ்பின்னர்களின் பந்துவீச்சில் சிக்ஸர்களும் பௌண்டரிகளும் பறந்ததால், எந்தவித நெருக்கடியுமின்றி பேட்டிங் செய்தது இங்கிலாந்து.


அதேநேரத்தில் அதிவேகமாகப் பந்துவீசிய இங்கிலாந்து பௌலர்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தனர். 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஆர்ச்சர். அதில் ஒரு ஓவரை மெய்டனாகவும் வீழ்த்தினார். ஆர்ச்சரைவிட இந்தப் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி மிரட்டினார் மார்க் வுட். தவானின் விக்கெட்டைக் கைப்பற்றிய அவர், 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆக, அதி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் 3 ஸ்பின்னர்களோடும், 2 மிதவேகப்பந்துவீச்சாளர்களோடும் களமிறங்கிய இந்தியாவின் முடிவு முழுவதும் தவறாகியது.


பலமே பலவீனம்

ஷிகர் தவான் - கே.எல்.ராகுல் தொடக்க ஜோடி இந்தியாவுக்குச் சாதகமாக அமையவில்லை. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார் கே.எல்.ராகுல். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் அவசரப்பட்டு ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் கோலி.காணொளிக் குறிப்பு,

விளையாட்டில் சாதிக்கும் தமிழகம், மகாராஷ்டிரா பெண்கள் - எப்படி முடிகிறது?


"இப்போது இருக்கும் இந்திய அணி பேட்டிங்கில் அதிக 'டெப்த்' இருப்பதாக உள்ளது. அதனால், எங்களால் எந்தவித நெருக்கடியுமின்றி பேட்டிங் செய்ய முடியும். முன்பைப்போல் மிகவும் கவனமாக ஆடிக்கொண்டிருந்தோம். இப்போது நெருக்கடியின்றி அதிரடியாக ஆடமுடியும்" என்று போட்டிக்கு முன்பு கூறியிருந்தார் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் இந்திய பௌலர்கள் கொடுத்த கூடுதல் பேட்டிங் ஆப்ஷனை டி-20 கிரிக்கெட்டிலும் பயன்படுத்த நினைத்தவர், அக்‌ஷர், ஷர்துல், வாஷிங்டன் என பேட்டிங் செய்யக்கூடிய பௌலர்களாக அணியில் எடுத்திருந்தார். இதனால், பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிரடி காட்ட முடியும் என்று நம்பினார். ஆனால், அவர் நம்பிக்கையே அவர் விக்கெட் வீழ்வதற்குக் காரணமாக அமைந்தது.


ஆர்ச்சர் பந்துவீச்சு கோலியை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. கோலி சந்தித்த மூன்றாவது பந்தில் கொஞ்சம் கூடுதல் பௌன்சர் ஏற்படுத்தினார் ஆர்ச்சர். அதை சற்றும் எதிர்பாராத கோலி, தடுமாறிப்போனார். இந்தப் பந்துக்குப் பிறகு இங்கிலாந்து வீரர்களை உளவியல் ரீதியாகத் தாக்கவேண்டும் என்று நினைத்தார் கோலி. அதனால், கிரீஸிலிருந்து வெளியேறி பந்தை பௌண்டரிக்கு அனுப்ப நினைத்தார். ஆனால், அடுத்த பந்து கொஞ்சம் லெக் சைட் தள்ளிப்போக, அவரால் அடிக்க முடியவில்லை. பந்து அங்கேயே விழுந்தது. "கோலி இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே இப்படியொரு ஷாட் ஆடி சமீபத்தில் நான் பார்த்ததில்லை" என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஹர்ஷா போக்ளே. ஆனல், கோலி அந்த அவசரத்தைக் கைவிடுவதாக இல்லை.


கோலி ஆடிய ஷாட்

பட மூலாதாரம்,SURJEET YADAV/ GETTY IMAGES

அடுத்த ஓவரில் அடில் ரஷீத் பந்துவீச்சில் சந்தித்த முதல் பந்திலேயே மீண்டும் ஒரு மோசமான ஷாட் ஆடினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை விலகிச் சென்று லாங் ஆஃப் திசையில் அடிக்க நினைத்தார். ஆனால், மிட் ஆன் திசையில் கேட்சாகி டக் அவுட் ஆனார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சர்வதேச போட்டியில் டக் அவுட் ஆகியிருக்கிறார் விராட். தன்னுடைய கடைசி 5 இன்னிங்ஸ்களில் இது மூன்றாவது முறை.


"கடைசி வரை பேட்டிங் செய்பவர்கள் இருப்பதால், நாம் சுதந்திரமாக ஆடலாம் என்ற மனநிலை வரும். அதுவே மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை இழப்பதற்குக் காரணமாகவும் அமையும்" என்று கோலி அவுட் ஆனதும் கூறினார் முன்னாள் இந்திய ஸ்பின்னர் சிவராமகிருஷ்ணன். அவர் சொன்னதுபோல் கோலி பலமாக நினைத்த விஷயம், அவருக்கு பலவீனமாக அமைந்தது.


இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்

ஐந்தாவது ஓவரில் ஷிகர் தவானும் ஆட்டமிழந்தார். மார்க் வுட் தொடர்ந்து வேகமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்ததில், 12 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார் அவர். தொடர்ந்து ஒவ்வொரு வீரரும் தடுமாற, முதல் 6 ஓவர்கள் முடிவில் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.


ஸ்டீரியோடைப் தவறுகள்

கிரிக்கெட்டில் சமீபகாலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. பந்தை பேட்ஸ்மேனுக்கு வெளியே சுழலச் செய்யும் ஸ்பின்னர்களைத்தான் இப்போதெல்லாம் கேப்டன்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பந்தை பேட்ஸ்மேனுக்கு உள்புறம் சுழலவைக்கும் பௌலர்களைப் பந்துவீச பயன்படுத்தத் தயங்குகிறார்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் வந்தால் லெக் ஸ்பின்னர்களையோ, இடது கை ஸ்பின்னர்களையோ பயன்படுத்துவதில்லை. ஆனால், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இன்றைய போட்டியில் இந்த ஸ்டீரியோடைப்பை உடைத்த மோர்கன் நல்ல பலனைப் பெற்றார். அதைப் பின்பற்றி முடிவுகள் எடுத்த கோலிக்கு எல்லாம் தவறாகவே அமைந்தது.


இங்கிலாந்தின் ஜேசன் ராய் செய்த ஒரு டிரைவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்தின் ஜேசன் ராய் செய்த ஒரு டிரைவ்.


இடது கை பேட்ஸ்மேனான தவான் களத்தில் இருந்தபோதும், முதல் ஓவரையே லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் கையில் கொடுத்தார் மோர்கன். முதல் ஓவரை சிக்கனமாக வீசி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்த ரஷீத், தன்னுடைய இரண்டாவது ஒவரில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். பவர் பிளேவில் 2 ஓவர்கள் பந்துவீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் ரஷீத். கோலியின் விக்கெட் இந்திய அணியின்மீது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.


கோலியோ, இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், இடது கை ஸ்பின்னர் அக்‌ஸர் படேலோடு இன்னிங்ஸைத் தொடங்கினார். அந்த ஓவரில் 3 ரன்கள்தான் போனது. மூன்றாவது ஓவரை லெக் ஸ்பின்னர் சஹாலுக்குக் கொடுத்தார். அந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன. ஐந்தாவது ஓவர் மீண்டும் அக்‌ஸருக்கு. அதில் 13 ரன்கள். பந்தை வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வெளியே எடுத்துச் செலக்கூடியவர்கள் என்பதால், அவர்களுக்கு 3 ஓவர்கள் கொடுத்தார் கோலி. ஆனால், அவர்களை எளிதாக எதிர்கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அந்த 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்துவிட்டனர்.


பவர்பிளே ஓவர்களில் பந்துவீசுவதில் தேர்ந்தவரான வாஷிங்டன் சுந்தரை இந்தப் போட்டியின் பவர்பிளேவில் அவர் பயன்படுத்தவே இல்லை. அவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்குள்ளே பந்தைக் கொண்டுவருபவர் என்பதால்! ஆனால், மிகவும் தாமதமாக தனக்குக் கிடைத்த முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார் அவர். பவர்பிளேவில் எப்போதுமே அவர் சிக்கனமாக வீசுவார். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார். ஆனால், அவர் இப்போட்டியில் வீசவில்லை. பந்துவீசிய மற்ற பௌலர்களும் நெருக்கடி கொடுக்கவில்லை. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி பவர்பிளேவில் 50 ரன்கள் எடுத்தது. இந்தியாவைவிட 28 ரன்கள் அதிகம்! பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி, முதல் 6 ஓவர்களில் செய்த தவறுகளாலேயே வீழ்ந்துவிட்டது இந்தியா.