அட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து



 (க.கிஷாந்தன்)

 

அட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஒரு உதைப்பந்தாட்ட கழகத்திற்கு தனது தீர்ப்பின் மூலம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து  யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் இன்று (06.03.2021) பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் அட்டன் டன்பார் மைதானத்தில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதில் அட்டனில் உதைப்பந்தாட்டத்தை பாதுகாப்போம், குற்றத்தை வளர்ப்பவர்களை வெறுக்கிறோம், ஒரே கிண்ணத்திற்கு இரண்டு சட்டங்களா?, தலைவரின் இறுதி முடிவு செல்லுபடியற்றதா? போன்ற வாசகம் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு சுகாதார பொறிமுறைக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தெரிய வருவதாவது, அட்டன் தலைவர் உதைப்பந்தாட்ட கிண்ணம் கடந்த வருடம் நடைபெற்றுள்ளது. குறித்த கிண்ணத்திற்காக யம் மேட்ஸ் விளையாட்டு கழகம்,ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டு கழகம் ஆகிய இரண்டுக்கும் எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இதனை விசாரணை செய்த அட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு ஒரு விளையாட்டு வீரர் பதிவு செய்யப்பட்ட ஒரு கழத்திற்கு மாத்திரம் விளையாட வேண்டும் குறித்த காலிமுத்து கிசாந்தன் என்பவர் இரண்டு கழங்களில் விளையாடி விதிமுறைகளை மீறி செயற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இரண்டு கழகங்களையும் 2020.01.31. இருந்து 2021.01.31 வரை தடை செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.


இவ்வாறான ஒரு சூழ் நிலையில் அதே அட்டன் தலைவர் கிண்ண இறுதி போட்டிக்கு ஒரு குழுவினை மாத்திரம் மீண்டும் இணைத்துக்கொண்டு இதில் யம் மேட்ஸ் கழகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக விளையாட்டு வீரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


இது குறித்து தாங்கள் நீதி மன்றத்தினை நாடி தடை உத்தரவு ஒன்றினை பெறப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.