தெ.கி.ப.க. வெள்ளிவிழாவை முன்னிட்டு பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் வைபவ ரீதியாக ஆரம்பம்!




 


தெ.கி.ப.க. வெள்ளிவிழாவை முன்னிட்டு பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் வைபவ ரீதியாக ஆரம்பம்!


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தினையும் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழாவினையும் முன்னிட்டு இப்பல்கலைக்கழக நூலகத்தில் ஓர் பிரத்தியோக பல்கலைக்கழக ஆவணக்காப்பகத் தொகுதியை (University Archival collection) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும், அதனை விளக்கும் புத்தகக் கண்காட்சி “Exhibition of  Books on One People, One Nation, and One Sri Lanka” எனும் தொனிப் பொருளில் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நாளை 23ம் திகதி, பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


அத்துடன்  தென்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட 10 நூலகங்களுக்கு புத்தகங்களை அன்பளிப்புச்செய்யும் நிகழ்வும் (Outreach Programme)  இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக்கழக ஏ.ஆர். மன்சூர் நினைவு மாநாட்டு மண்டபத்தில் நாளை 23ம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ் வைபவங்களில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ஏ.றமீஸ்  பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


இப் பல்கலைக்கழக நூலக பிரத்தியோக ஆவணகாப்பக நூற்சேற்கைத் தொகுதியாக 850 க்கு மேற்பட்ட, பெறுமதி வாய்ந்த, கிடைத்தற்கரிய பல ஆவணங்கள்; காணப்படுகின்றன. இதில் நூல்கள், அறிக்கைகள், சிறு நூல்கள், சிறப்பு வெளியீடுகள் மற்றும் பருவ வெளியீடுகள், உலக கலைக்களஞ்சியம் உட்படப் பெரும் எண்ணிக்கையில் பல ஆய்வுக் கட்டுரைகளும் உள்ளடங்குகின்றன. இப்பிரத்தியேக ஆவணகாப்பகப் பிரிவானது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும். இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக் கழக நூலகத்தில்  பல்கலைக்கழக ஆவணக்காப்பகத் தொகுப்பில்  அரிய நூற்சேற்கை, நிறுவனத் தகவற் சேற்கை மற்றும் பாரம்பரிய சேகரிப்புகள் (Rare Materials, Institutional Repository, and  Heritage Collection) ஆகிய தலைப்புகளில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.


இப் பல்கலைக்கழக காப்பகத் தொகுப்பு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக சேர்கையினை மேலும் தரமுயர்த்தும் என்பதில் ஐயமில்லை. இப்பிரத்தியோக ஆவணச் சேர்க்கையானது பல்கலைக்கழக ஆவணக் காப்பகம் (University Archival collection) எனும் பெயரில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். மேலும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக நூலகர் எம்.எம். றிபாஉத்தீன் அவர்கள் இப்பல்கலைக்கழக ஆவணக்காப்பகத் தொகுப்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் எனவும் இப்பிரதேசத்திலுள்ள ஆய்வாளர்கள், புலமையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய நூலகப் பாவனையாளர்கள், பொது மக்கள் ஆகியோர் இலகுவாக இவ்வாவணக் காப்பகத்தினை தங்களது ஆய்வுகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதோடு விசேடமாக வரலாறு மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கும் இத் தொகுப்பு பயனுள்ளதாக அமையும் என்றும் அவற்றை உபயோகித்து உச்சப் பயனடையுமாறும் கேட்டுக் கொள்கின்றார்.