பெண்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும். வீடாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பெண்களின் தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  நமது நாட்டின் அரசியலில் பெண்களின் வருகை என்பதும் வெற்றி என்பதும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் 51 வீதமாக பெண்கள் இருந்தாலும் அரசியலில் உள்ள பெண்களின் சதவீதம் 5 ஆகவே காணப்படுகின்றது. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்காக 25 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என சட்டம் சொல்லியது. ஆனாலும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
குறிப்பாக சுனாமி அனர்த்தம் தொடக்கம் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் நிலவுகின்ற இக்காலகட்டத்தில் கூட பெண்கள் அவர்களது பணியை நிறைவாகவே செய்து வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான தடைகள் இன்னும் உடைக்கப்படாமலே இருக்கின்றது.
இவ்வாறு பல தடைகளை உடைத்து அவற்றி;ல் இருந்து வெளிவந்து தனது சமூக சேவை மூலம் சாதித்து அரசியலுக்குள் நுழைந்து பெண்களுக்கு உதாரணமாக செயற்படும் அட்டாளைச்சேனை  பிரதேச சபை உறுப்பினரான தமரா குமாரி திசாநாயக்கவுடனான நேர்காணலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அரசியலில் நுழைந்து சேவை செய்ய நினைக்கும் உங்களை பற்றிய கூறுங்கள்?  என்னுடைய பெயர் தமரா குமாரி திசாநாயக்க. நான் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உறுப்பினராக இருக்கின்றேன். குறித்த சபையின் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரேயொரு பெண் உறுப்பினரான எனது ஆரம்பகல்வி தீகவாபி எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கள வித்தியாலயத்தில் ஆரம்பமானது. பின்னர் உயர்கல்வியை முஹாம்கல மகாவித்தியாலத்திலும் கற்றுக்கொண்டேன். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டக்கல்வியினை கற்று வருகின்றேன். இன்று நான் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கும் நான் அதன் தவிசாளரோடு இணைந்து செயற்படுவதனால் மக்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்கி வருகின்றேன். பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் தனியொரு பௌத்த மத மக்கள் பிரதிநிதியாக சேவை புரிகின்றபோதும் எவ்வித பிரச்சினைகளோ தடைகளோ இல்லாமல் சேவை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இச்சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று பெண் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதால் மிகவும் சிறப்பாக சேவையினை வழங்கக்கூடியதாகவுள்ளது.
 அத்தோடு தற்போது பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி ஒன்றில் வருகை விரிவுரையாளராக சென்று வருகின்றேன். அதுமட்டுமன்றி எனது பிரதேசமான தீகவாபியில் வாழும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறியொன்றினையும் நடாத்தி வருகின்றேன். பயனுள்ளதும் நற்பண்புண்பு கொண்ட இளைஞர்களை இந்த சமூகத்தில் உருவாக்கி கொடுப்பதே இதன் நோக்கம்.
தாங்கள் அரசியல் பயணத்தின் ஆரம்பம் எங்கே எப்போது எப்படி ஆரம்பமானது ?  எனது முற்பிறப்பின் நற்பயனே இப்பிறப்பில் அரசியல் செய்ய காரணம் என நினைக்கின்றேன். நான் வாழும் தீகவாபி மிகப்பெரும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு போக்குவரத்து பிரச்சினை குடிநீர்ப்பிரச்சினை யானைத்தொல்லை வீதி புனரமைப்பின்மை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு மத்தியிலே இங்கு மக்கள் வாழ்கின்றனர். இதற்கெல்லாம் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே அரசியலில் நுழைந்து செயற்பட ஆரம்பித்தேன்.
அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன? அவ்வாறு வருவதற்கு தடையாக இருந்த காரணிகள் எவை என கருதுகின்றீர்கள்? அரசியல் அதிகாரம் பெண்களுக்கும் உள்ளது என்பதை உணர்த்தவும் இதனால் மாத்திரமே பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதையும் உணர்ந்தே அரசியலுக்கு வந்தேன்;. நான் அரசியலுக்கு வரும்போது எந்தவொரு தடைகளும் காணப்படவில்லை. நான் அரசியலுக்கு வந்தபின்தான் பல தடைகளை சந்தித்தேன். ஆனாலும் அத்தடைகளை எல்லாம் படிக்கற்களாக மாற்றி எனது பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன்.
குடும்பத்தையும் அரசியலையும் எவ்வாறு ஒரே சமயத்தில் மேற்கொள்கின்றீர்கள்?  நான் திருமணமாகாத பெண். எனது தந்தையும் மரணித்துவிட்டார். எனது தம்பியுடனும் தாயுடனுமே வாழ்ந்து வருகின்றேன். எனது அரசியல் நடவடிக்கைக்கு தம்பியும் தாயாரும் முழு ஆதரவு வழங்குகின்றனர். இதனாலேயே எனது அரசியல் பயணம் தொடர்கின்றது.
உங்;கள் கிராமத்தவர் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? அவர்களை  பொறுத்த மட்டில் உங்களை எவ்வாறு நோக்குகின்றனர்? ஆம். எனது கருத்துக்களையும் வேலைத்திட்டங்களையும் எனது மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் இந்த இடத்திற்கு நான் வருவதற்கு காரணம் அவர்களே. ஆனாலும் எனக்கு அடிப்படை அரசியல் பின்னணி இல்லை. இதற்கு முன்னர் எனது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு யாரும் வந்ததும் இல்லை.
ஆண் பெண் சமத்துவம் பேணப்படல் வேண்டும் எனும் கருத்து பரவலாக பேசப்படும் நிலையில் உங்களது கருத்து என்ன? பிறக்கும் போது ஆண் பெண் என வேறுபாட்டுடன் பிறக்கின்றோம். ஆனாலும் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதற்கு அவசியமில்லை. பெண்களை இரண்டாம் நிலையில் வைத்து பார்ப்பதற்கு காரணமும் பெண்கள்தான். இந்த மனந்pலையில் இருந்து பெண்கள் மாற வேண்டும்.  
இதனடிப்படையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு சரியாக வழங்கப்படவேண்டும் என அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். ஆனாலும் அவ்வாறு வழங்கும் பட்சத்தில் ஆண்களின் கைகளை விட பெண்களின் கை ஓங்கிவிடும் என பலர் அச்சம் கொள்வதை காண முடிகின்றது. அரசியலுக்குள் தற்போது இருக்கும் பெண்களை கூட சுதந்திரமாக பேசுவதை தடுக்கின்றனர். ஆண் பெண் சமத்துவத்தை ஆண்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை உணர்த்துகின்றது. என் அரசியல் வாழ்வில் இதைன உணர்ந்துள்ளேன்.
நமது நாட்டில் ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? கல்வியை கற்றுமுடித்துக் கொண்ட பின்னர் தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் முகமாக அரசகாரியாலயங்களில் கடமைபுரியும் பெண்கள் சமந்pலையில் தொழில் விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் நிலையங்களில் சுயமாக சிந்தித்து செயற்படுகின்றனர். பெண்கள் உடல் ரீதியாகவும் பலத்தை கொண்டவர்களாக உள்ளனர். ஆரோக்கியமுள்ள சவால்களை முறியடிக்கக் கூடியவராகவும் திகழ்கின்றனர். இதனை ஒப்பீடு செய்து பார்க்கும் போது இந்த நாட்டில் பெண்கள் சமத்துநிலையில் உள்ளனர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
அரசியலுக்கு வரும் முன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? இப்போது எப்படி உள்ளது?  அரசியல் தொடர்பான முன்அனுபவம் எதுவுமில்லை.; ஆனாலும் வந்த பின்பே போட்டிகளையும் பொறாமையினையும் அறிந்து கொண்டதுடன் எதிர்கொண்டேன். இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டியே எனது மக்களின் தேவைகளை அபிவிருத்தி மூலம் செய்து வருகின்றேன்.
உங்களால் சாதிக்க முடிந்தவை மற்றும் சாதிக்க நினைப்பவை தொடர்பில் உங்களது கருத்து என்ன? தீகவாபியில் இருந்த பல வீதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அவற்றையெல்லாம் தனியொரு பெண்ணாக இருந்து புனரமைத்து கொடுத்துள்ளேன். இதற்காக கொழும்பு வரை சென்று அமைச்சர்களை சந்தித்து மக்களின் குறைபாடுகள் தொடர்பில் கோரிக்கை முன்வைத்தேன். இதனடிப்படையில் உரிய வீதிகளின் அபிவிருத்திக்காக மாகாண சபை வரை சென்று ஆளுநர்களையும் சந்தித்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தேன். அது மாத்திரமன்றி எனது பிரதேசத்தில் உள்ள குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தேன். அத்தோடு இன்னும் பல திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றேன்.
இதேநேரம் இன்னும் பல விடயங்களை சாதிக்க வேண்டும் என நினைக்கின்றேன். குறிப்பாக பிரதேசத்தில் உள்ள 27கிலோமீற்றர் தூரமான வீதியை புனரமைப்பதற்கான மனுவை பிரதமர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளேன். அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும் என பதில் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் வீட்டுத்திட்டமொன்றினையும் உருவாக்கும் திட்ட வரைபை பிரதமரிடம் முன்வைத்துள்ளேன்.
இதைவிட தீகவாபியில் வாழும் ஏழை மக்களை வீட்டுத்திட்;ட தோட்ட செய்கைய்pனை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றினை செய்து வருகின்றேன். இத்திட்டமானது 75 வீதமாக பூர்த்தியாகிவிட்டது. இதன்மீதி யானது கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் நிறைவடையும் என நம்புகின்றேன்.  
உங்களை போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
எந்த வேலைகளும் நம்மை தேடி வராது. நாம்தான் வேலைகளை தேடிச் செல்ல வேண்டும். திருமணமாகாத தனியொரு பெண்ணாக என்னால் இவ்வளவு விடயங்களை சாதிக்க முடியுமானால் ஏன் அனைத்து பெண்களாலும் முடியாது என கேள்வி கேட்க விரும்புகின்றேன். பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காது வெளியிலே வரவேண்டும். பெண்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும். வீடாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பெண்களின் தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.