பொன்னியின் செல்வன் சொல்ல வரும் சேதி என்ன?





 மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வாரம் வெளியாகிறது. தமிழில் மிகப் பிரபலமான இந்த நாவல் சொல்லும் கதை என்ன?



மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழின் மூத்த எழுத்தாளரான ஜெயமோகன் வசனம் எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.


பொன்னியின் செல்வன் நாவலின் பின்னணி

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி (1899-1954) தன்னுடைய பத்திரிகையான கல்கியில் 1950ஆம் ஆண்டிலிருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு எழுதிய வரலாற்று நாவல்தான் பொன்னியின் செல்வன்.


பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்று விளங்கிய ராஜராஜசோழனின் தந்தையான சுந்தரசோழன் என்ற இரண்டாம் பராந்தகச் சோழனின் (963-980) காலத்தில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி, இந்த நாவலை கல்கி எழுதியிருந்தார். இந்த நாவலில் பல உண்மைப் பாத்திரங்களும் பல கற்பனைப் பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.


பிரபல சரித்திர ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'The Cholas' புத்தகமும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'History of the Later Cholas' நூலையும் பயன்படுத்தியே இந்த நாவலை கல்கி உருவாக்கினார். ஆர். கோபாலனின் 'Pallavas of Kanchi' உள்ளிட்ட புத்தகங்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.


இந்த நாவலுக்காக சோழ நாட்டிலும் (தற்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள்) இலங்கையிலும் பல பயணங்களை மேற்கொண்டார் கல்கி. அப்போது அவருடன் ஓவியரான மணியனும் உடன் சென்றார். பொன்னியின் செல்வன் கல்கி இதழில் வெளியானபோது, மணியனே ஓவியங்களை வரைந்தார். 2,400 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது.


சிவப்புக் கோடு

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எப்படி உள்ளது?

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் - பாகம் 1

பொன்னியின் செல்வன்: கதைச் சுருக்கம் - பாகம் 2

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் - பாகம் - 3

சிவப்புக் கோடு

பொன்னியின் செல்வன் நாவலின் கதை என்ன?

கல்கி

இரண்டாம் பராந்தகச் சோழன் எனப்படும் சுந்தர சோழனின் கடைசி சில ஆண்டுகளில் இந்த கதை நடக்கிறது. சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் என மூன்று மகன்கள். ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது.


காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டியிருக்கும் ஆதித்த கரிகாலன், தஞ்சாவூரில் வசிக்கும் சுந்தர சோழன் தன்னுடைய மாளிகையில் வந்து வசிக்க வேண்டுமென ஓலை எழுதி, அதனை தன் நண்பன் வந்தியத்தேவனிடம் கொடுத்து அனுப்புகிறான். தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில், கடம்பூரில் இருக்கும் ஓர் அரண்மனையில் தங்கும் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சோழ நாட்டின் தனாதிகாரி பழுவேட்டரையர் தலைமையில் சதி நடப்பதைக் கண்டுபிடிக்கிறான்.


பிறகு சுந்தர சோழரையும் அவரது மகள் குந்தவையையும் சந்தித்து ஓலைகளைக் கொடுக்கிறான். அப்போது குந்தவை, இலங்கையில் போரிட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய இளைய சகோதரனை தஞ்சைக்கு அழைத்துவரும்படி, வந்தியத்தேவனிடம் கோருகிறாள். இதற்காக இலங்கைக்குச் செல்கிறான் வந்தியத்தேவன்.


இதற்கிடையில், ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சதி செய்த பழுவேட்டரையர், அருள்மொழி வர்மனை சிறைப்பிடித்து அழைத்து வர இரண்டு கப்பல்களை அனுப்புகிறார். அதில் ஏறி வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் வரும்போது அந்த கப்பல்கள் புயலில் சிக்குகின்றன. அவர்களைப் பூங்குழலி என்ற மீனவர் குல பெண் காப்பாற்றுகிறாள்.


அருள்மொழி வர்மனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அவர் நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விகாரையில் சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையில், ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக அவனுடைய சித்தப்பாவான மதுராந்தகனை பதவியில் அமர்த்தும் சதித்திட்டம் வேகமெடுக்கிறது. இதில் பழுவேட்டரையர், அவருடைய மனைவி நந்தினி உள்ளிட்டவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.


பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

கடம்பூர் என்ற இடத்தில் இருக்கும் மாளிகைக்கு ஆதித்த கரிகாலனை வரழைத்துக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். அதன்படி, ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்படுகிறான். அந்தக் கொலைப் பழி வந்தியத்தேவன் மீது விழுகிறது.


இதற்குப் பிறகு, வந்தியத்தேவன் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படித் தப்பினான், பெரிய பழுவேட்டரையர் என்ன ஆனார், நந்தினி என்ன ஆனாள், வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடையிலான காதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.


1950களில் பிரபலமான நாவல்

1950களில் இருந்து தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் இந்த நாவல் இதுவரை லட்சக் கணக்கான பிரதிகள் விற்றிருக்கின்றன. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், பல பதிப்பகங்கள் பல்வேறு தரத்தில், பல்வேறு விலையில் இந்த நாவலைப் பதிப்பித்திருக்கின்றன.


1950ல் முதன் முதலில் கல்கி இதழில் தொடராக வெளியான இந்த நாவல், அதற்குப் பிறகு பல முறை தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொடர் வெளியான ஒவ்வொரு முறையும் கல்கி இதழின் விற்பனை கணிசமாக உயர்ந்தது.


இப்போது இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் மறுபடியும் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தமிழில் உள்ள பல பதிப்பகங்கள் அந்த நாவலை வெளியிட்டுள்ளன. ஆங்கிலத்திலும் அந்த நாவல் இரு முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.



காணொளிக் குறிப்பு,

பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 1


அந்த நாவலின் சுருக்கமான வடிவமும் தற்போது வெளியாகி, பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.


மணிரத்னம் பொன்னியின் செல்வனை இரு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், மணிரத்னத்திற்கு முன்பாகவே பலர் இந்த நாவலை திரைப்படமாக்கத் திட்டமிட்டு, அது முடியாமல் போயிருக்கிறது.


நடிகரும் இயக்குநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரன் இந்த நாவலைத் தானே தயாரித்து, இயக்க விரும்பினார்.


1958இல் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். வைஜெயந்திமாலா, சாவித்திரி, ஜெமினி கணேசன், சரோஜா தேவி, பாலைய்யா, எம்.என். நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.


இதற்குப் பிறகு இந்த நாவலை படமாக்குவது குறித்து கமல்ஹாசன் பலமுறை பேசியிருக்கிறார். இருந்தபோதும் அது நடக்கவில்லை. 1990களின் துவக்கத்தில் இந்த நாவலைப் படமாக எடுப்பது தனது கனவுத் திட்டம் என்றார் மணிரத்னம். அதற்குப் பிறகு பல முறை இது தொடர்பாக பேசப்பட்டும், அந்த முயற்சி நிறைவேறவில்லை.


பிறகு ஒரு வழியாக 2019ஆம் ஆண்டில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்படுவதாக மணிரத்னம் அறிவித்தார். இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பதை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 500 கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம் என சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 250 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் காலை 4.30 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்து விட்டன.